டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைய தினம் (7), மெய்வல்லுனர் போட்டிகள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன. இதில், இந்தியா தங்களுடைய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் மெய்வல்லுனர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
குறிப்பாக தெற்காசியாவில் முதல் நபராக, 2000ஆம் ஆண்டு இலங்கை வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கா மெய்வல்லுனரில் பதக்கம் வென்றிருந்தார். அதன் பின்னர், முதன்முறையாக தெற்காசியாவுக்கு தற்போது மெய்வல்லுனரில் முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா, இந்த தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
109 ஆண்டுகால ஒலிம்பிக்கில் புது வரலாறு படைத்த இத்தாலி அணி
அத்துடன், ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் தங்கத்தை பிரான்ஸ் வென்றதுடன், கால்பந்தில் நடப்பு சம்பியன் பிரேசில் மீண்டும் தங்கம் வென்றுள்ளது. அதேநேரம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4X400 அஞ்சலோட்டத்தில் அமெரிக்க மீண்டும் தங்கத்தை வென்றுள்ளது.
இந்தியாவுக்கு முதல் தங்கம்
டோக்கியோ ஒலிம்பிக், ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் நீராஜ் சோப்ரா, இம்முறை ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இவர், 87.58 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, தங்கப் பதக்கத்தினை வெற்றிக்கொண்டார். இந்த தங்கமானது, ஒலிம்பிக் வரலாற்றில் மெய்வல்லுனரில் இந்தியா பெற்றுக்கொண்ட முதல் தங்கமாக பதிவாகியதுடன், இரண்டாவது தனிநபர் போட்டி தங்கமாகவும் அமைந்திருந்தது.
பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினாத் பிந்ரா, இந்தியாவுக்கு முதல் தனிநபர் தங்கத்தை வென்றுக்கொடுத்திருந்தார். அதேநேரம், 2000ஆம் ஆண்டு இலங்கையின் சுசந்திகா ஜயசிங்க மெய்வல்லுனர் போட்டியில் பதக்கம் வென்றதை தொடர்ந்து, தெற்காசியாவுக்கு ஒலிம்பிக் மெய்வல்லுனரில் பதக்கம் ஒன்றை நீராஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார்.
இந்தப் போட்டியின் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை, முறையே செக் குடியரசு வீரர்களான வெட்லிட்ஜ் ஜெகப் மற்றும் வெஸ்லி விடெஸ்லெவ் ஆகியோர் வெற்றிக்கொண்டனர்.
மகளிருக்கான மரதன் ஓட்டத்தில் கென்யாவுக்கு இரு பதக்கங்கள்
டோக்கியோ ஒலிம்பிக், பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில் கென்ய வீராங்கனைகளான ஜெப்சில்செயர் பெரஸ் மற்றும் கொஸ்கி பிரிகிட் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
ஜெப்சில்செயர் பெரஸ் போட்டி தூரத்தை 2 மணித்தியாலங்கள் 27.20 நிமிடங்களில் நிறைவு செய்ததுடன், கொஸ்கி பிரிகிட் 2 மணித்தியாலங்கள் 27.36 நிமிடங்களில் போட்டி தூரத்தை நிறைவுசெய்தார். போட்டியின் வெண்கலப் பதக்கத்தை அமெரிக்காவின் சீட்ல் மொல்லி வெற்றிக்கொண்டதுடன் அவர் போட்டி தூரத்தை 2 மணித்தியாலங்கள் 27.46 நிமிடங்களில் நிறைவுசெய்தார்.
ஒலிம்பிக் சென்ற சில இலங்கை வீரர்களிடம் ஒழுக்கம் இருக்கவில்லை: அமைச்சர் நாமல்
ஆண்களுக்கான 4×400 இல் மீண்டும் தங்கம் வென்ற அமெரிக்கா
ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் நடப்பு சம்பியனான அமெரிக்கா மீண்டும் தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டது. போட்டித்தூரத்தை 2.55.70 நிமிடங்களில் அமெரிக்கா நிறைவுசெய்து தங்கம் வென்றது.
இந்தப்போட்டியின் இரண்டாவது இடத்தை நெதர்லாந்து 2.57.18 என்ற நேரப்பிரதியுடன் பிடித்துக்கொண்டதுடன், மூன்றாவது இடத்தை பொட்ஸ்வானா பெற்றுக்கொண்டது. பொட்ஸ்வானா போட்டி தூரத்தை 2.57.27 நிமிடங்களில் நிறைவுசெய்திருந்தது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருந்த ஜமைக்கா, இம்முறை 6வது இடத்தை பிடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான 4×400 இல் தங்கம் வென்ற அமெரிக்கா
ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் மாத்திரமின்றி, பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்திலும் அமெரிக்கா தங்கம் வென்றது. நடப்பு சம்பியனான அமெரிக்கா 3.16.85 நிமிடங்களில் போட்டி தூரத்தை நிறைவுசெய்தது. இரண்டாவது இடத்தை போலந்து பிடித்துக்கொண்டதுடன், மூன்றாவது இடத்தை ஜமைக்கா பிடித்துக்கொண்டது.
போலந்து அணி போட்டித் தூரத்தை 3.20.53 நிமிடங்களில் நிறைவுசெய்ததுடன், ஜமைக்கா மகளிர் அணி 3.21.24 நிமிடங்களில் போட்டி தூரத்தை நிறைவுசய்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஆண்களுக்கான 1,500 மீற்றரில் ஒலிம்பிக் சாதனை படைத்த நோர்வே வீரர்
ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டத்தில் நோர்வே வீரர் இன்ஜெப்ரிஜென்சன் ஜெக்கப், ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். போட்டித் தூரத்தை 3.28.32 நிமிடங்களில் நிறைவுசெய்து அவர் ஒலிம்பிக் சாதனையை பதிவுசெய்தார். இவர், மொராக்கோ வீரர் எல் ஜெரூஜ் ஹிச்சாம் பதிவுசெய்த 3.31.65 என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
அதேநேரம், இந்த போட்டியின் வெள்ளிப் பதக்கத்தை கென்யாவின் செரியட் திமோதி வெற்றிக்கொண்டதுடன், வெண்கலப் பதக்கத்தை பிரித்தானியாவின் கெர் ஜோஸ் வெற்றிக்கொண்டார்.
41 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்திய ஹொக்கி அணி
பெண்களுக்கான 10,000 மீற்றர் தங்கம் நெதர்லாந்துக்கு
டோக்கியோ ஒலிம்பிக், பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில், நெதர்லாந்து வீராங்கனை ஹஸன் ஷீபன் தங்கம் வென்றார். இவர், பந்தயத்தூரத்தை 29.55.32 நிமிடங்களில் நிறைவுசெய்ததுடன், இரண்டாவது இடத்தை பஹ்ரைனின் கெஷைக்ன் கல்கிடன் பிடித்ததுடன், மூன்றாவது இடத்தை எதியோப்பியாவின் ஜெய்டி லெட்சன்பெட் வெற்றிக்கொண்டார்.
பெண்களுக்கான உயரம் பாய்தலில் தங்கம் வென்ற ரஷ்ய ஒலிம்பிக் குழு
பெண்களுக்கான உயரம் பாய்தல் இறுதிச்சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ரஷ்ய ஒலிம்பிக் குழுவின் சார்பாக போட்டியிட்ட லசிட்ஸ்கீன் மரியா தங்கம் வென்றார். இவர், 2.04 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கத்தை றெ்றிக்கொண்டதுடன், இவருக்கு சரியான போட்டியை கொடுத்த அவுஸ்திரேலியாவின் மெக்டமோர்ட் நிகோலா வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைனின் மனுச்சிக் யாரோஸ்லாவ் வெண்கலத்தையும் வென்றனர்.
மெக்டமோர்ட் நிகோலா 2.02 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், மனுச்சிக் யாரோஸ்லாவ் 2.00 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலம் வென்றார்.
மீண்டும் தங்கம் வென்ற நடப்பு சம்பியன் பிரேசில்
டோக்கியோ ஒலிம்பிக், ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில், ஸ்பெயினை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நடப்பு சம்பியன் பிரேசில் மீண்டும் தங்கப்பதக்கத்தை வென்றது.
போட்டியின் முழுநேர ஆட்டத்திலும் இரண்டு அணிகளும் சமபலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், போட்டி 1-1 என சமனிலையாகியது. இதனால், மேலதிக நேரம் வழங்கப்பட்டதில், 108வது நிமிடத்தில் மெல்கம் கோலடித்து பிரேசில் அணிக்கு 2-1 என வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
ஆடவருக்கான கால்பந்தாட்டத்தில் வெள்ளி பதக்கத்தை ஸ்பெயின் வென்றதுடன், வெண்கலப் பதக்கத்தை மெக்ஸிகோ வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் தங்கம் வென்ற பிரான்ஸ்
டோக்கியோ ஒலிம்பிக், ஆண்களுக்கான கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் குழுவை 3-2 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் தங்கம் வென்றது.
வெள்ளிப் பதக்கத்தை ரஷ்ய ஒலிம்பிக் குழு கைப்பற்றியதுடன், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரேசிலை வீழ்த்திய ஆர்ஜன்டீனா பதக்கத்தை தட்டிச்சென்றது. இதில், முதன்முறையாக பிரேசில் அணி ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில், பதக்கம் எதனையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரை கரப்பந்தாட்டத்தில் நோர்வேவுக்கு தங்கம்
டோக்கியோ ஒலிம்பிக், ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில், ரஷ்ய ஒலிம்பிக் குழுவை 2-0 என வீழ்த்திய நோர்வே தங்கம் வென்றது. அதேநேரம், மூன்றாவது இடத்துக்கான போட்டியில், 2-0 என லட்வியாவை வீழ்த்திய கட்டார் வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதில், வெள்ளிப் பதக்கத்தை ரஷ்ய ஒலிம்பிக் குழு வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<