KKR அணியுடன்இணையும் நியூசிலாந்தின் டிம் செய்பெர்ட்

191
Tim Seifert

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் விளையாடிவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் டிம் செய்பெர்ட்டை தங்களுடைய குழாத்தில் இணைத்துள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த அலி கான் உபாதை காரணமாக, தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக டிம் செய்பர்ட் இணைக்கப்பட்டுள்ளார்.

>> விராட் கோஹ்லியின் சாதனையை தட்டிப்பறித்த டேவிட் வோர்னர்

ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் ஹெரி கார்னி, உபாதை காரணமாக குழாத்துடன் இணையமாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அலி கான் இணைக்கப்பட்டார்.

கொல்கத்தா அணியில் இணைக்கப்பட்ட அலி கான், முதன்முதலாக ஐ.பி.எல். தொடரில் விளையாடும் அமெரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். எனினும், துரதிஷ்டவசமாக ஒரு போட்டியில் விளையாடும் வாய்ப்பும் அலி கானுக்கு கிடைக்கவில்லை.

ஆரம்பத்தில் அலி கானுக்கு உபாதை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், அவர் தொடர்ந்தும் அணியுடன் இருப்பார் என கொல்கத்தா அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி வெங்கி மைசோர் தெரிவித்திருந்தார். எனினும், அலி கான், தானாக முன்வந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

>> Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41

அதேநேரம், நியூசிலாந்தின் உள்ளூர் கழகமான நொர்தென் டிஸ்ட்ரிக் அணிக்கான ப்ளென்கெட் ஷீல்ட் தொடரில் டிம் செய்பர்ட் விளையாடமாட்டார் எனவும், ஐ.பி.எல். தொடரில் ஒரு வீரருக்கு மாற்று வீரராக செல்லவுள்ளார் எனவும் நொர்தென் டிஸ்ட்ரிக் கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

டிம் செய்பெர்ட் மற்றும் அலி கான் ஆகியோர் நடந்துமுடிந்த கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தனர். குறித்த தொடரில் அலி கான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், டிம் செய்பெர்ட் 109.91 என்ற ஓட்ட வேகத்தில் 133 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<