ஏ.சி. மிலான் கழகத்திற்கு ஓர் ஆண்டு தடை

200

நிதி ஒழுங்குகளை மீறியதாக இத்தாலியின் பிரபல கால்பந்து கழகமான ஏ.சி. மிலானுக்கு ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் இருந்து ஓர் ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  

இத்தாலி கால்பந்து லீக்கான சீரி A தொடரில் ஆறாவது இடத்தை பிடித்த மிலான், இந்த பருவத்தில் ஐரோப்பிய லீக் குழுநிலை போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த கழகம் கடந்த பருவத்தில் வீரர்கள் பரிமாற்றத்திற்கு 200 மில்லியன் பௌண்ட்களை செலவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய கால்பந்து சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA), இது கழகங்களுக்கான சமநிலை விதிகளை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கு எதிராக தாம் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக மிலான் குறிப்பிட்டுள்ளது.  

இந்த தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர் மிலான் வெளியிட்ட ட்விட்டர் வீடியோ ஒன்றில், தாம் UEFA இடம் இருந்து உண்மை அடிப்படையில் அனைவருக்கும் சரிசமமான நீதியான தீர்ப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தது.  

அந்த கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கடந்த கால தவறுகளுக்கு விலைகொடுக்க தயாராக இருக்கிறோம். விதிகளுக்கு மதிப்பு அளிக்கிறோம் ஆனால், சமத்துவத்தை எதிர்பார்க்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அதனை உடன் பரிசீலிக்கும்படி ஏ.சி. மிலான் அதன் சட்ட குழுவுக்கு கடந்த புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 1986 ஆம் ஆண்டு தொடக்கம் உரிமை கொண்டாடிய ஏ.சி. மிலான் கழகம் 2017 ஏப்ரலில் 740 மில்லியன் யூரோவுக்கு சீன வர்த்தகரான லீ யொங்ஹோங்கிற்கு விற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தக் கழகம் ஜுவான்டசில் இருந்து லியோனார்டோ போனுசியை 35.1 மில்லியன் பௌண்ட்களுக்கும், எப்.சி. போர்டோவில் இருந்து அன்ட்ரே சில்வாவை 33.6 மில்லியன் பௌண்ட்களுக்கும் அணிக்கு கொண்டுவந்து கோடைகாலத்தில் 200 பௌண்டகள் வரை செலவிட்டது. 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த கழகம் வீரர் ஒருவருக்காக 30 மில்லியன் பௌண்ட் கட்டுப்பாட்டை மீறிய முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது.  

UEFA வழங்கி இருக்கும் இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது, சீரி A கழகத்தின் நிதி விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நிச்சயமில்லா தன்மை நீடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 ஒக்டோபரில் திரும்ப செலுத்தவேண்டிய கடன் தொகையை புதுப்பித்திருப்பது தொடர்பிலேயே நிச்சயமற்ற நிலை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

கழகங்கள் பெரும் கடன்களுடன் நடத்தப்படுவதை நிறுத்துவது மற்றும் வரவை விட அதிக செலவில் ஈடுபடும் கழகங்களுக்கு தண்டனை வழங்குவதற்காகவே UEFA வின் கழகங்களுக்கான சமநிலை விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விதிகள் மீறப்பட்டால் எச்சரிக்கை, புள்ளிகள் குறைப்பது, வீரர் பரிமாற்றத்திற்கு தடை விதிப்பது என்று பல்வேறு வகையில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

எனினும் சீரி யு தொடருக்கு இளம் அணி ஒன்றை உருவாக்குவதற்காகவே 2017 பருவத்தில் செலவிடப்பட்டதாக ஏ.சி. மிலான் குறிப்பிட்டுள்ளது. லீ யொங்ஹோங் கழகத்தை வாங்கியதை அடுத்து தமது நிதிநிலையில் ஸ்திரம் ஏற்பட்டிருப்பதாக ஏ.சி. மிலான் கூறியபோதும் UEFA அதனை தொடர்ந்து கருத்தில் கொள்ளவில்லை.