ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுகின்ற 20ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி, ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமேத ரணசிங்க மற்றும் ருமேஷ் தரங்க ஆகிய இருவரும், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்கவும் இலங்கை சார்பில் போட்டியிடவுள்ளனர்.
இதில் இந்த ஆண்டு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அடைவு மட்டத்தை பூர்த்தி செய்த இலங்கையின் ஈட்டி எறிதல் சம்பியன்களான ருமேஷ் தரங்க மற்றும் சுமேத ரணசிங்க ஆகியோர் நேரடி தகுதியைப் பெற்றனர்.
எனவே, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கு இரண்டு வீரர்கள் நேரடி தகுதி பெற்ற ஒரே நாடு இலங்கை என்பதும் சிறப்பு அம்சமாகும். ஈட்டி எறிதலில் இலங்கையின் தற்போதைய தேசிய சம்பியனான ருமேஷ் 86.50 மீற்றர் சாதனையும், முன்னாள் தேசிய சம்பியனான சுமேத ரணசிங்க 85.78 மீற்றர் சாதனையும் படைத்து இவ்வாறு நேரடி தகுதியைப் பெற்றனர். இந்த சாதனைகள் முறையே இந்த ஆண்டின் உலகின் சிறந்த எறிதல்களில் 7ஆவது மற்றும் 11ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.
மறுபுறத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பல வெற்றிகளை ஈட்டி வருகின்ற் ருமேஷ் தரங்க இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- தென் கொரியாவில் தரங்க தங்கம் வெல்ல; நதீஷாவிற்கு வெள்ளிப் பதக்கம்
- இலங்கை சாதனையை முறியடித்து உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு ருமேஷ் தகுதி
இதனிடையே, இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு இலங்கையில் இருந்து எந்தவொரு பெண் வீராங்கனையும் நேரடி தகுதியையோ அல்லது தரவரிசை மூலம் தகுதியையோ பெற முடியாததால், உலக மெய்வல்லுனர் சங்கம் பெண் பிரதிநிதித்துவத்திற்காக வழங்கும் உலகளாவிய வாய்ப்பை (universality) இலங்கைக்கு வழங்கியது. இதன் மூலம் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்பபை நதீஷா ராமநாயக்க பெற்றுக் கொண்டார்.
இதன்படி, நதீஷா ராமநாயக்கவின் போட்டி நிகழ்ச்சி 14ஆம் திகதியும். ருமேஷ் தரங்க மற்றும் சுமேத ரணசிங்க ஆகியோரது போட்டி நிகழ்ச்சி 17ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வரலாற்றில் வெறும் 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ள இலங்கை, கடைசியாக ஒரு பதக்கத்தை வென்றது 2007ஆம் ஆண்டு ஜப்பானில் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுசந்திகா ஜயசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
இதேவேளை, இந்த ஆண்டு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இலங்கை அணியின் முகாமையாளராக பிரதீப் நிஷாந்த செயல்படவுள்ளதுடன், டோனி ரணசிங்க பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.
டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பான் தேசிய விளையாட்டரங்கில் 13ஆம் திகதி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் 20ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு அகதிகள் மெய்வல்லுநர் அணியொன்றும், 198 நாடுகளைச் சேர்ந்த 2,200 வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 49 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<