BPL தொடரில் அதிரடியுடன், அபார பந்து வீச்சிலும் மிரட்டிய திசர பெரேரா

2262

பங்களாதேஷில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் (BPL) கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திசர பெரேரா நேற்று (22) நடைபெற்ற டாக்கா டைனமைட்ஸ்  அணிக்கு எதிரான போட்டியில் சகல துறையிலும் பிரகாசித்து தன்னுடைய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

BPL தொடரில் தனது முதல் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த திசர பெரேரா

நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 என ….

இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா கடந்த சில மாதங்களாக அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கன்னி சதத்துடன் ஆரம்பித்த இவரது துடுப்பாட்டம் மேலும் வலுப்பெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக BPL தொடரின் தன்னுடைய முதல் போட்டியில் 26 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை விளாசி அசத்தினார்.

இதனையடுத்து, தொடர்ந்தும் துடுப்பாட்டத்தில் அணிக்காக சிறப்பித்து வந்த திசர பெரேரா, பந்து வீச்சில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்தார். எனினும், நேற்று நடைபெற்ற டாக்கா அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

நேற்றைய போட்டியில், கொமிலா விக்டோரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 153/8 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் 112 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கொமிலா அணி இழந்திருந்த போது திசர பெரேரா களமிறங்கியிருந்தார். மறுபக்கம் இருந்த லியாம் டவ்சன் பந்துகளை வீணடித்து தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, திசர பெரேரா 3 சிக்ஸர்கள் அடங்கலாக 12 பந்தகளுக்கு 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த வேளையில், துரதிஷ்டவசமாக ரன்-அவுட் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், டாக்கா மைதானத்தில் இலகுவாக பெறக்கூடிய வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய டாக்கா டைனமைட்ஸ் அணி, என்ரே ரசலின் அதிரடியான ஆட்டத்துடன் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது. என்ரே ரசல் 24 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை விளாசி கொமிலா அணியை மிரட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், திசர பெரேரா தனக்கு வழங்கப்பட்ட ஓவரில் ரசலின் விக்கெட்டினை கைப்பற்றி, டாக்கா அணியின் வெற்றியை திசை திருப்பினார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திஸர டி20 சகலதுறை தரவரிசையில் ஐந்தாமிடத்தில்

ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ள புதிய டி20 தரவரிசை பட்டியலின் …

தொடர்ந்தும் தனக்கு வழங்கப்பட்ட ஓவர்களில் சிறந்த முறையில் பந்துவீசிய இவர்,  மொத்தமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், (3 ஓவர்கள்) எதிரணிக்கு 14 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தார். முக்கியமாக பெரேரா விக்கெட்டுகளை கைப்பற்றியது மாத்திரமின்றி, கடைசி 2 ஓவர்களுக்கு டாக்கா அணிக்கு 20 ஓவர்கள் தேவைப்பட்ட  நிலையில், 19வது ஓவரை வீசிய அவர் ஒரு ஓட்டத்தை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தார்.

இதன் காரணமாக இறுதி ஓவருக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்ட டாக்கா அணி, 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் வெற்றிக்கு சகல துறையிலும் பிரகாசித்த திசர பெரேரா போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.