IPL தொடரிலிருந்து விலகினார் ரஹானே

137
Hamstring injury rules Ajinkya Rahane

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15 ஆவது அத்தியாயம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருவதுடன், லீக் ஆட்டங்கள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இம்முறை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று, பிளே-ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஜிங்கியா ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் களத்தடுப்பில் கூட பங்கேற்கவில்லை.

எனவே, ரஹானேவின் காயம் கொஞ்சம் கவலையளிக்கும் வகையில் அமைந்தது. இதனால் பயோ பபுளிலிருந்து ரஹானே விலகிவிட்டதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவருக்கு விடை கொடுக்கும் வீடியோ ஒன்றை கொல்கத்தா அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது. அதில் இந்தப் பயணத்தில் அணியுடன் நிறைய கற்றுக் கொண்டதாக ரஹானே தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, தற்போது ரஹானே நேரடியாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்குச் சென்று, அங்கு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, ரஹானே முதலில் 4 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர் உடல் தகுதி குறித்து முடிவு எடுக்கப்படும். இதனால் ரஹானேவால் சில மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது.

இதனால் ஐபிஎல் தொடர் முடிந்ததும் ரஞ்சி கிண்ணம், அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானேவுக்கு பங்கேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 133 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<