இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, டெஸ்ட் தொடரினை அடுத்து இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதவுள்ளது. இத்தொடரில் இலங்கை அணி சார்பாக விளையாடவுள்ள 15  பேர் கொண்ட வீரர்கள் குழாத்தினை தேசிய அணியின் தேர்வாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.

VISIT THE #SLVBAN HUB

இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்சிற்கு காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டிருக்கும் காரணத்தினால், இம்மாதம் 25ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரிற்கு இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.  

பங்களாதேஷ் உடனான ஒரு நாள் தொடரின்போது மெதிவ்ஸ் மீண்டும் தேக ஆரோக்கியம் பெற்று அணியில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தும், அவரது உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக கிடைத்திருக்கும் தகவல்கள் அவர் பூரணமாக தேறவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றன. இதனால், தேர்வாளர்கள் இத்தொடருக்கு அணியைத் தலைமை தாங்க தரங்கவினை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்திருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்டி ஜொலித்திருந்த அனுபவமிக்க சகல துறை ஆட்டக்காரர் திசர பெரேரா, முன்வரிசை அதிரடி துடுப்பாட்ட வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரும் இலங்கை ஒரு நாள் அணிக்குள் மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சகீபின் சதத்துடன் போட்டியை கட்டுக்குள் வைத்திருக்கும் பங்களாதேஷ்

அத்துடன் 2016ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் இறுதியாக ஒரு நாள் போட்டியொன்றில் விளையாடியிருந்த சுழல் வீரர் சீக்குகே பிரசன்னவும் இக்குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடன் ஒரு நாள் தொடரினை இறுதியாக ஆடியிருந்த இலங்கை, அதனை 5-0 எனப் பறிகொடுத்து வைட் வொஷ் செய்யப்பட்டிருந்தது. அத்தொடரில் இலங்கை அணியில் விளையாடியிருந்த அனுபவமிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர, இளம் துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி, சுழல் வீரர் ஜெப்ரி வன்டர்சேய், சகல துறை ஆட்டக்காரர்களான சத்துரங்க டி சில்வா(சுழல்) மற்றும் லஹிரு மதுசங்க (வேகப் பந்து வீச்சாளர்) ஆகியோர் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணியில் இணைக்கப்படவில்லை.

இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டுள்ளது போன்று தம்புள்ளையில் நடைபெறவுள்ளதோடு, தொடரின் மூன்றாம் போட்டி ஏப்ரல் முதலாம் திகதி SSC மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை ஒரு நாள் குழாம்

உபுல் தரங்க(தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணத்திலக்க, தனன்ஞய டி சில்வா, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால், லஹிரு குமார, விக்கும் சஞ்சய பண்டார, திசர பெரேரா, சஜித் பத்திரன, சீக்குகே பிரசன்ன, லக்ஷன் சந்தகன்