இலங்கை அணியுடன் இணையும் திலின கண்டம்பி

Sri Lanka Tour of New Zealand

465

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் விசேட பயிற்சியாளராக இலங்கையின்s முன்னாள் வீரர் திலின கண்டம்பி இணைந்து கொள்ளவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் T20 i கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கிறைஸ்சேர்ச்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகளால் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியீட்டியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவதும், கடைசியுமான டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகின்றது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 3 T20i கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோத உள்ளன. இதில் ஒருநாள் போட்டித் தொடர் இம்மாதம் 25ஆம் திகதியும், T20i தொடர் ஏப்ரல் 2ஆம் திகதியும் ஆரம்பமாக உள்ளன.

இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் ஆடவுள்ள தசுன் ஷானக தலைமையிலான இலங்கைக் குழாம் இன்று (20) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதனிடையே, நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் விசேட பயிற்சியாளராக முன்னாள் வீரர் திலின கண்டம்பி செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா பிரீமியர் லீக்கில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சம்பியன் கிண்ணம் வென்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்ற திலின கண்டம்பி, கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற தேசிய சுபர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜப்னா அணியின் தலைமைப் பயிற்சியாராகவும் பணியாற்றி வருகின்றார்.

இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஜப்னா அணி சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இலங்கை A கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அவ்வப்போது பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட திலின கண்டம்பி, உள்ளூர் கிரிக்கெட்டில் முன்னணி பயிற்சியாளர்களில் ஒருவராக வலம் வருகின்றார்.

எனவே, அவரது அனுபவம் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் T20i தொடரில் இலங்கை அணிக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் என கிரிக்கெட் விமரச்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<