வீர விளையாட்டின் பின் மீண்டும் மும்பை அணியில் இணையும் மாலிங்க

772

இலங்கையில் நடைபெற்ற சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.பி.எல் தொடரிலிருந்து இடைநடுவில் நாடு திரும்பிய லசித் மாலிங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியுடன் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரும், ஒருநாள் அணித் தலைவருமான மாலிங்க இம்முறை .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

தலைமை கிடைக்காவிட்டால் உலகக் கிண்ணத்திற்கு முன் ஓய்வுபெற தயாராகும் மாலிங்க

எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து…

உள்ளூர் சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் விளையாடி திறமையை வெளிப்படுத்தினால் தான், மாலிங்கவுக்கு உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதியாக தெரிவித்தது. எனினும், ஏற்கனவே மாலிங்கவுக்கு .பி.எல் தொடரில் விளையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமையினால் அவர் இந்தியா சென்றார்.

இதன்படி, அந்த அணிக்காக முதல் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்ட மாலிங்க, தான் பங்குபற்றியிருந்த முதலிரண்டு போட்டிகளிலும் பிரகாசிக்கத் தவறியிருந்தார். எனினும், கடந்த 03ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சூட்டுடன், உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக மறுநாள் அதிகாலை (04) உடனடியாக அவர் நாடு திரும்பியிருந்தார்.

இதில் காலி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த மாலிங்க, ஒருநாள் போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மும்பை அணி நிர்வாகத்தின் விசேட அனுமதியுடன் போட்டியில் இடைநடுவில் இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, திமுத் கருணாரத்ன தலைமையிலான கண்டி அணிக்கு எதிராக பல்லேகலையில் கடந்த 04ஆம் திகதி நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மாலிங்க தலைமையிலான காலி அணி, 255 ஓட்டங்களைக் குவித்தது.

சுபர் ப்ரொவின்சியல் தொடரில் இணை சம்பியன்களாக கொழும்பு, காலி அணிகள்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள்…

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணியை மாலிங்க தனது வேகத்தில் கதிகலங்க வைத்தார். அதாவது கண்டி அணி ஒரு கட்டத்தில் முதல் 5 விக்கெட்டுகளையும் மாலிங்கவிடம் பறிகொடுத்து 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, பிறகு மாலிங்க மேலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கண்டி அணியை தனது தேசிய அணி ஜேர்சி இலக்கத்தைக் கொண்ட (99) ஓட்ட எண்ணிக்கைக்கு கட்டுப்படுத்தினார்.

மேலும், அனைத்துவிதமான முதல்தர அல்லது லிஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் மாலிங்க 7 விக்கெட்டுகளை வீழ்த்தியமை இதுவே முதல்தடவையாகும்.

இந்த் நிலையில், கடந்த 3ஆம் திகதி இரவு சென்னை அணிக்கெதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை வெற்றியில் தன் பங்கைப் பதித்த மாலிங்க, மறுநாள் காலை சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் தனது திடகாத்திரம், மனஉறுதி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி என்பவற்றை அவர் நிரூபித்துக்காட்டினார்.

சென்னை அணியுடனான போட்டியில் ஷேன் வொட்சன், கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை மாலிங்க கைப்பற்றினார், 24 மணி நேரத்துக்குள் இருவேறு நாடுகள், இருவேறு மைதானங்கள், இருவேறு சூழல்களில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது அபரிமிதமான ஆட்டத் திறமையை முழு உலகிற்கும் பறைசாற்றினார்.

அதிலும் குறிப்பாக, நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன் என்பதை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும், தேர்வாளர்களுக்கும் நிரூபித்துக்காட்டினார். இதற்குமுன் நடைபெற்ற .பி.எல் போட்டிகளின் போது ஒருபோதும் உள்ளூர் போட்டிகளுக்காக விளையாடாமல் இருந்த மாலிங்க, இம்முறை மிகவும் உத்வேகத்துடன் மாகாண ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். உண்மையில் மாலிங்கவின் இந்த அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும்.

இதுவரை காலமும் பணத்துக்காக .பி.எல் விளையாடுகின்றார் என முத்திரை குத்தப்பட்ட மாலிங்க நாட்டையும் நேசிக்கின்றார் என்பதை இதன்மூலம் உணர முடிகின்றது. எனவே தனிப்பட்ட பிரச்சினைகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு அனைவரும் ஒற்றுமையாக விளையாடினால் நிச்சயம் இம்முறை உலகக் கிண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாகும்.  

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து சுபர் ப்ரொவின்சியல் போட்டியில் பங்குபற்றுவதற்கு நாடு திரும்பிய மாலிங்க, கண்டி அணியுடனான முதலாவது போட்டியின் பிறகு கருத்து வெளியிடுகையில், ”சென்னை அணியுடனான போட்டியின் பிறகு மாகாண ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கான அன்றைய தினம் இரவே 1.30 மணியளவில் புறப்பட்டேன். இலங்கைக்கு வந்து இறங்கும் போது அதிகாலை 4.30 மணி இருக்கும். அதன்பிறகு கொழும்பிலிருந்து நேராக பல்லேகலை மைதானத்துக்குச் சென்றேன். அந்தக் காலப்பகுதியில் எனக்கு தூங்குவதற்கும் நேரம் கிடைக்கவில்லை. ஓய்வில்லாமல் விளையாடியது உடம்புக்கு வருத்தமாக இருந்தாலும், முதல் போட்டியில் வெற்றிபெற கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

அதேபோல காலி அணியில் உள்ள ஏனைய வீரர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிரேஷ்ட வீரர்கள் எப்போதும் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதேபோல, எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் மைதானத்துக்குள்ளே வந்தால் அணிக்காக 100 சதவீதம் பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதை அவர்கள் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர் ஒருவரினால் தேசிய அணிக்காக செய்கின்ற மிகப் பெரிய சேவை என நான் கருகிறேன்” என்றார்.

>>Photos : Galle vs Colombo | Super Provincial One Day 2019 | Finals<<

இதுஇவ்வாறிருக்க, கடந்த புதன்கிழமை (10) இரவு நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடுவதற்காக மாலிங்க மீண்டும் மும்பைக்குச் சென்றிருந்தார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் மலிங்காவுக்குப் பதிலாக விளையாடிய அல்சாரி ஜோசப் பஞ்சாப் அணியுடனான போட்டியில் விளையாடிய காரணத்தால் மாலிங்கவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

குறித்த போட்டி முடிந்த பின்னர் மீண்டும் மாகாணங்களுககிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்க 11ஆம் திகதி அதிகாலை மும்பையில் இருந்து மாலிங்க இலங்கைக்கு புறப்பட்டு வந்தார்.

இதன்படி, மாலிங்க தலைமையிலான காலி அணி, நேற்று (11) நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியை எதிர்த்தாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தடைப்பட்டதால் காலி மற்றும் கொழும்பு அணிகள் இணை சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன. இந்த தொடரில் எட்டு விக்கெட்டுக்களை வீழ்த்திய லசித் மாலிங்க, சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை சுவீகரித்தார்.

இந்த நிலையில், மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து கொள்வதற்காக நேற்று (11) இரவு இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் நாளை மாலை (13) ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடனான போட்டியில் மாலிங்க விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வருடங்களாக உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் பிரகாசித்திருந்த மாலிங்க, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களுக்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மெதிவ்ஸின் சதத்தோடு தம்புள்ளை அணிக்கு மாகாண ஒருநாள் தொடரில் மூன்றாம் இடம்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள்…

எனினும், குறித்த தொடரில் மாலிங்க பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியை திறம்பட வழிநடத்தியிருந்த போதிலும், துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இலங்கை அணி, ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களை இழந்தது. அதேபோல, இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களையும் இலங்கை அணி பறிகொடுத்தது.

எனவே, 2019ஆம் ஆண்டானது லசித் மாலிங்கவுக்கு அடுத்தடுத்து ஏமாற்றங்களைக் கொடுத்திருந்தாலும், கடந்த வாரம் ஆரம்பமாகிய மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் காலி அணிக்கு தலைவராக செயற்பட்டு தனது அனுபவத்தையும், திறமையையும் வெளிக்காட்டியிருந்தார்.

எனவே, தான் ஓய்வுபெறவுள்ள இறுதி ஒருநாள் தொடரான இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் மாலிங்க விளையாடுவது ஏரத்தாழ உறுதியாகிவிட்டது.

அதேபோல, இம்முறை உலகக் கிண்ண அணித்தலைமைத்துவம் மாலிங்கவுக்கு கிடைக்குமா என்பது சந்தேகத்தைக் கொடுத்திருந்தாலும். அவருடைய அனுபவம் இலங்கை அணிக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<