தவறான துடுப்பாட்ட பிரயோகங்களே தோல்விக்கு காரணம் – திமுத் கருணாரத்ன

970

கார்டிப் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், எமது வீரர்கள் மேற்கொண்ட தவறான துடுப்பாட்ட பிரயோகங்களால் எதிர்பார்த்தளவு ஓட்டங்களை குவிக்க முடியாமல் போனதாக இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் 3ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் இன்று (1) பலப்பரீட்சை நடத்தின. கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, எதிரணியின் வேகப் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 137 ஓட்டங்களை எடுத்து 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியது.

சகலதுறை மிரட்டலால் இலங்கையை இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில்….

இந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான தோல்விக்குப் பிறகு இலங்கை  அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன அளித்த பேட்டியில்,

“உண்மையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதை இழந்தது கவலையளிக்கிறது. ஆடுகளத்தைக் எடுத்துக் கொண்டால் காலையில் அதிகளவு ஸ்விங் மற்றும் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக காணப்பட்டது. அதை எதிரணியின் பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டனர். அதேபோல, ஆரம்பத்திலே விக்கெட்டுக்களை பறிகொடுத்தால் 200 அல்லது 250 ஓட்டங்களைக் குவிப்பதென்பது மிகவும் கடினமாகும்.

இவ்வாறான ஆடுகளங்கள் கிடைக்கும் போது மனதளவில் நாங்கள் உறுதியுடன் விளையாட வேண்டும். ஆனால், அதிகளவு புற்கள் கொண்ட ஆடுகளமாக இருந்ததால் எமது வீரர்கள் சற்று பயத்துடன் விளையாடியிருந்தார்கள். எமக்கு எப்போதும் துடுப்பாட்டத்துக்கு சாதகமான விக்கெட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் கிடைத்தால் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை எமது வீரர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும். எமக்கு 50 ஓவர்கள் உள்ளன. அவசரப்படுவதற்கு எந்த தேவையும் கிடையாது. நிறைய பந்துகள் இருந்தன. நிதானமாக விளையாடி ஓட்டங்களைக் குவித்திருக்க முடியும்.

ஆகவே இவ்வாறான ஆடுகளங்களில் துரத்தியடிக்கின்ற ஓட்ட இலக்கைத் தான் நாங்கள் குவிக்க வேண்டும். ஏனைய போட்டிகளைப் போல 300 அல்லது 350 ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் விளையாடினால் தடுமாற்றத்தை சந்திக்க வேண்டிவரும். எனவே எமது பந்துவீச்சாளருக்கு சந்தர்ப்பத்தை வழங்குகின்ற ஓட்ட எண்ணிக்கையொன்றை பெற்றுக் கொள்கின்ற மனநிலையுடன் விளையாடினால் எமக்கு இதைவிட நல்ல முடிவு கிடைத்திருக்கும்

அத்துடன், இந்த மாதிரியான ஆடுகளங்களில் 136 ஓட்டங்கள் என்பது ஒருபோதும் சவாலாக இருக்காது. திரிமான்னவின் ஆட்டமிழப்பினை அடுத்து நானும், குசல் பெரேராவும் சிறப்பாக விளையாடியிருந்தோம். எனினும், அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால் எமக்கு சிறந்ததொரு இணைப்பாட்டமொன்றை முன்னெடுக்க முடியாமல் போனது. இதன் காரணமாக எமக்கு அதிக ஓட்டங்களைக் குவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதேநேரம், கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் சிறந்த கிரிக்கெட் போட்டியொன்றை பார்க்க வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் இந்த ஆடுகளத்தில் நிறைய புற்கள் காணப்பட்டன. எனவே இன்றைய போட்டியின் போது அது வெட்டப்படும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் புற்கள் கொண்ட ஆடுகளமே இந்தப் போட்டியில் எமக்கு தரப்பட்டது. பொதுவாக உலகக் கிண்ணம் என்றால் அதிகளவு ஓட்டங்களைக் குவிக்கின்ற போட்டியைத் தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். எமக்கு இன்னும் 8 போட்டிகள் எஞ்சியுள்ளன. எனவே அடுத்துவரும் போட்டிகளில் எமக்கு துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளங்கள் கிடைக்கும் என நம்புகிறோம். அந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவற்கு எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.

Photos: Sri Lanka vs New Zealand | ICC Cricket World Cup 2019 – Match 03

ThePapare.com | 01/06/2019 Editing and re-using images without….

அஞ்செலோ மெதிவ்ஸை 4ஆம் இலக்கத்தில் அனுப்பமால் ஏன் 6ஆம் இலக்கத்தில் அனுப்பியது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு திமுத் கருத்து வெளியிடுகையில், ”இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளில் தன்ஞசய டி சில்வா இதுபோன்ற ஆடுகளங்களில் 4ஆம் இலக்கத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடியிருந்தார். அதன் காரணமாகவே அஞ்செலோ மெதிவ்ஸை 6ஆம் இலக்கத்தில் களமிறக்கினோம். அதேபோல மெதிவ்ஸின் அனுபவம் இந்த நேரத்தில் கைகொடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எமது எதிர்பார்ப்புக்கு நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் இடம்கொடுக்கவில்லை” என குறிப்பிட்டார்.

இதேவேளை, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைப் போல இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் சிறப்பாக செயற்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்து வேகமாக வீசுவார்கள். ஆனால் எமது பந்துவீச்சாளர்கள் அவ்வாறு பந்துவீசமாட்டார்கள். அதற்காக அவர்களை குறைகூற முடியாது. அதேபோல இவ்வாறு குறைந்தளவு ஓட்ட எண்ணிக்கை வெற்றியிலக்காக நிர்ணயித்தால் அவர்களால் பந்துவீச்சில் எதிர்பார்த்தளவு எதையும் செய்ய முடியாது. எனவே எமது பந்துவீச்சாளர்களை இந்த நேரத்தில் குறைகூற முடியாது.

இதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டி குறித்து திமுத் கருணாரத்ன கருத்து வெளியிடுகையில், அடுத்த போட்டியில் நாங்கள் ஆப்கானிஸ்தான் அணியை இதே மைதானத்தில் சந்திக்கவுள்ளோம். எனவே இதே போன்றதொரு ஆடுகளம் தான் எமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்தப் போட்டியிலும் எமக்கு முதலில் துடுப்பெடுத்தாட நேரிட்டால் எவ்வாறு பந்துகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போது நாங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளோம். எனவே ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் எமது துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Video – Losing is okay, but we need to put up a fight – Dimuth Karunaratne

Sri Lanka Captain Dimuth Karunaratne spoke on the team’s….

அத்துடன், போட்டிக்கு முன் நிறைய ரசிகர்கள் என்னை வாழ்த்தியிருந்தார்கள். முதல் போட்டியில் நன்றாக விளையாடி வெற்றிபெற வேண்டும் என அனைவரும் ஆசையுடன் இருந்தார்கள். வெற்றி தோல்வி எப்படி இருந்தாலும், எம்மிடம் சிறந்ததொரு கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்ற மனநிலை தான் இருந்தது. அதேபோல எதிரணிக்கு சிறந்ததொரு போட்டியைக் கொடுக்கதான் காத்திருந்தோம். அவ்வாறு நல்லதொரு போட்டியைக் கொடுத்து போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டோம். எனவே  அடுத்துவரும் போட்டிகளில் இவ்வாறான தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக விளையாடுவோம். அத்துடன், மைதானம் வந்து எம்மை உற்சாகப்படுத்திய இலங்கை ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<