நாம்தான் King of Football என்பதை மீண்டும் நிரூபித்த ஸாஹிரா வீரர்கள்

98

Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் புனித பேதுரு கல்லூரியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொழும்பு ஸாஹிரா கல்லூரி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் இன்று (26) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாடசாலை கால்பந்தில் முடிசூடா மன்னனாகத் திகழும் மருதானை ஸாஹிரா கல்லூரிக்கு புனித பேதுரு கல்லூரி தனது தற்காப்பு ஆட்டத்தின் மூலம் நெருக்கடி கொடுத்தபோதும், ஸாஹிரா கல்லூரியினால் இரண்டாவது பாதியில் இரண்டு கோல்களை பெற்று வெற்றியை உறுதி செய்ய முடிந்தது. 

நடப்புச் சம்பியன் புனித ஜோசப் கல்லூரி மூன்றாமிடம்

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை 6-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில்…

இதன் மூலம் கடந்த முறை Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டியில் வெளியேறிய ஸாஹிரா கல்லூரி இம்முறை எந்தப் போட்டியிலும் தோல்வியுறாமல் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. 

இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக மொஹமட் சாஜித் தெரிவானதோடு சிறந்த கோல்காப்பாளருக்கான தங்க உறை விருதை ஸாஹிரா கோல்காப்பாளர் மொஹமட் சாகிர் தட்டிச் சென்றார். அவர் இந்தத் தொடரில் 2 கோல்களையே விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை ஸாஹிரா கல்லூரியின் தேசிய அணி வீரர் மொஹமட் ஆகிப் பெற்றார். அவர் இந்தத் தொடரில் மொத்தம் 6 கோல்களை பெற்றார்.

பரபரப்பாக ஆரம்பமான போட்டியில் ஸாஹிரா கல்லூரி வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்ற அதேவேளை புனித பேதுரு கல்லூரி வீரர்கள் தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தினர். முதல் 20 நிமிடங்களில் புனித பேதுரு கல்லூரியின் கோல் அரணைத் தாண்டி முன்னேறுவதற்கு ஸாஹிரா கல்லூரியால் முடியாமல் இருந்தது. 

எனினும் 15 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா கல்லூரி முதல் முறை கோல் வாய்ப்பை நெருங்கி வந்தது. மொஹமட் ஆகிப் இடது பக்கமாக வேகமாக பந்தை கடத்திச் சென்று புனித பேதுரு கல்லூரி பெனல்டி பெட்டிக்குள் கச்சிதமாக பரிமாற்றியபோதும் அங்கிருந்த ஸாஹிரா கல்லூரி வீரர்களால் அதனை கோலாக்க முடியாமல்போனது.

முதல் பாதியின் பிற்பகுதியில் புனித பேதுரு கல்லூரி தனது தற்காப்பு ஆட்டத்தில் இருந்து மாறி எதிரணி கோல் பகுதியை அடிக்கடி ஆக்கரமிப்பதை காண முடிந்தது. ஆகில் பந்தை ஸாஹிரா கல்லூரி கோல் எல்லை வரை எடுத்து வந்த நிலையில் ஸாஹிரா கல்லூரி பின்கள வீரர் சிறப்பாக அதனை வெளியே தட்டிவிட்டார். 

தொடர்ந்து 33, 34 ஆவது நிமிடங்களில் புனித பேதுரு கல்லூரி வீரர்கள் ஸாஹிரா கல்லூரி பெனால்டி பெட்டியை அடுத்தடுத்து ஆக்கிரமித்தபோதும் கோல் பெறும் வாய்ப்பை நழுவவிட்டனர். 

கோலின்றி இழுபறியோடு நீடித்தபோது இரு அணி வீரர்களுக்கு இடையே சலசலப்பும் அதிகரித்தது. 44 ஆவது நிமிடத்தில் கோல் பெறுவதில் முட்டி மோதிக்கொண்ட புனித பேதுரு வீரர் அல்டோ பெர்னாண்டோ மற்றும் ரூமி ராசா இருவரும் மஞ்சள் அட்டை பெற்றனர். 

ஆட்டத்தை திசை திருப்பும் திறன் பெற்ற புனித பேதுரு கல்லூரியின் சபீர் ரசூனியா மீது அனைவரது பார்வை திரும்பியபோதும் அவர் முதல் 45 நிமிடங்களில் குறிப்பிடும்படி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. 

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 0 – 0 புனித பேதுரு கல்லூரி      

இரண்டாவது பாதி ஆட்டத்தையும் புனித பேதுரு கல்லூரி அதே உத்தியுடனேயே ஆரம்பித்தது. பின்களத்தில் ஐந்து வீரர்களை நிலைநிறுத்தி ஸாஹிரா வீரர்களை தடுப்பதிலேயே அந்த அணி கவனம் செலுத்தியது. இதனால் ஸாஹிரா கல்லூரி முன்கள வீரர்கள் அந்த பாதுகாப்பு அரணை முறியடிப்பதில் கடுமையாக போரட வேண்டி இருந்தது. ஸாஹிரா கல்லூரி வீரர்களின் கால்களில் அதிக நேரம் பந்து சுழன்றபோதும் அவர்களால் எதிரணி பக்கம் முன்னேறுவது கடும் சவாலாக இருந்தது.

ஸாஹிரா – புனித பேதுரு கல்லூரிகளின் இறுதிப் போட்டி நாளை

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம்…

இரண்டாவது பாதியின் ஆரம்பமும் இழுபறியோடு நீடித்த நிலையில் 56 ஆவது நிமிடத்தில் இதற்கு முடிவு கட்டினார் ரூமி ராசா. ஸாஹிரா கல்லூரி வீரர் உயர எறிந்த பந்தை வெளியே தட்விட புனித பேதுரு வீரர் கோமஸ் உயரப் பாய்ந்து தலையால் முட்டினார். எனினும் அந்தப் பந்து ராசாவிடம் செல்ல அவர் தலையால் முட்டி ஸாஹிரா கல்லூரிக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தார். 

இதனைத் தொடர்ந்து புனித பேதுரு கல்லூரி தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தது. தேசிய அணி வீரர் ரசூனியா பின்களத்தில் இருந்து முன்னால் அனுப்பப்பட்டார். 60 ஆவது நிமிடத்தில் புனித பேதுரு வீரர் கோலை நோக்கி உதைத்தபோது, பந்து ஸாஹிரா கோல்காப்பாளரையும் தாண்டி வலையை நோக்கி சென்றது. அப்போது வேகமாக வந்த ரிபாக்கத்துல்லாஹ் நூலிழையில் கோல் புகுவதை தடுத்தார்.   

தொடர்ந்து புனித பேருது கல்லூரிக்கு 76 ஆவது நிமிடத்தில் கோல் பெறுவதற்கு மற்றொரு பொன்னான வாய்ப்பு கிட்டியது. ஸாஹிரா கல்லூரியின் பெனால்டி பெட்டிக்குள் பந்து செயிட்டிடம் வந்த நிலையில், அவர் அதனை கோலை நோக்கி தலையால் முட்டியபோது இலக்குத் தவறியது. 

88 ஆவது நிமிடத்தில் ரிபாகத்துல்லா 20 யார் தூரத்தில் இருந்து கோலை நோக்கி வேகமாக உதைத்தபோது புனித பேதுரு கல்லூரி கோல்காப்பாளர் ரவிச்சத்திரன் சிறப்பாக தடுத்தார். 

எனினும் இரண்டு நிமிடத்தின் பின் மொஹமட் சாஜித் பந்தை வேகமாக எடுத்துவந்தபோது புனித பேதுரு கோல்காப்பாளர் அவரை தடுக்க முன்னால் ஓடி வந்தார். எனவே சாஜித்தினால் இலகுவாக அதனை கோலாக மாற்ற முடிந்தது. இந்த கோலுடன் ஸாஹிரா கல்லூரியின் வெற்றி உறுதியானது. 

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 2 – 0 புனித பேதுரு கல்லூரி      

கோல் பெற்றவர்கள்

  • ஸாஹிரா கல்லூரி – ரூமி ராசா 56’, மொஹமட் சாஜித் 90

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<