டோக்கியோ ஒலிம்பிக் விழா கோலாகலமாக ஆரம்பமாகியது

Tokyo Olympics - 2020

357

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜப்பானின் டோக்கியோவில் 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகியது.  

கண்ணைப் பறிக்கும் வானவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுடன் ஒலிம்பிக் விளையாட்டு விழா டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமாகியது

Video – டோக்கியோவில் இறங்கியது இலங்கை படை…!| Tokyo Olympics 2020

இம்முறை ஒலிம்பிக்கில் 204 நாடுகளை சேர்ந்த 11,200க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். இதில் 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப் பதக்கத்துக்கு போட்டியிடவுள்ளார்கள்.  

ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்தும் ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் ஆரம்ப விழா அரங்கேறியது

டோக்கியோ ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் ரசிகர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. எனினும், ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் 950 பார்வையாளர்கள் மட்டும் பங்கேற்றிருந்தனர்.

முதலில் ஜப்பானின் தேசிய கீதம் அந்நாட்டு தற்காப்பு கலைஞர்களால் பாடப்பட்டது

அதேபோல் ஆரம்ப விழாவின் ஆரம்பத்திலேயே கொரோனா காலத்தில் விளையாட்டு வீரர்கள் எப்படி பயிற்சி எடுத்தனர் என்று விளக்கப்பட்டது.

வீட்டிற்கு உள்ளே இவர்கள் எப்படி பயிற்சி எடுத்தனர். கொரோனா காரணமாக ஒலிம்பிக் வீரர்கள் எவ்வளவு ஷ்டப்பட்டனர் என்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டது

இதனையடுத்து மைதானத்திற்கு ஜப்பான் கொடியை ஜப்பான் விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ஒரு சுகாதார பணியாளர் என்று மொத்தம் 6 பேர் கொண்டு வந்தனர்

ஆரம்ப விழாவில் ஆரம்பத்தில் UNITED BY EMOTION  என்ற ஒலிம்பிக் தீம் பாடம் ஒற்றுமையை குறிக்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டது. உணர்வுகளால் ஒன்றிணைவோம் என்று குறிப்பிடும் வகையில் இந்த பாடல் அமைந்து இருந்தது

அதேபோல் 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் 11 பேர் குறித்தும் ஆரம்ப விழாவில் நினைவு கூறப்பட்டு அதற்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒலிம்பிக் கால்பந்து முதல் போட்டியில் பிரேசில், பிரான்ஸ் இலகு வெற்றி

இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமாக 204 நாடுகளையும் சேர்ந்த வீர வீராங்கனைகள் தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து விளையாட்டரங்கில் நுழைந்தனர். அணிவகுப்பில் ஜப்பானின் தேசியக் கொடி முதலில் கொண்டு வரப்பட்டது

இதனையடுத்து ஒலிம்பிக் ஆரம்ப விழா வீரர்கள் அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு சென்றது

இந்த நிலையில், ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இரண்டாவது முறையாக பங்கேற்கும்அகதிகள் ஒலிம்பிக் அணிடோக்கியோ ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் தங்கள் கொடியுடன் இரண்டாவதாக அணிவகுத்து சென்றனர்

அவர்களைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, அயர்லாந்து, அஸர்பைஜான் அணிகள் சென்றன. தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் தேசியக் கொடியை ஒரேயொரு பெண் விளையாட்டு வீராங்கனை ஏந்திச் சென்றார்

இதனையடுத்து ஆங்கில அகரவரிசைப்படி நாடுகள் அனைத்து அணிவகுத்துச் சென்றன.

இலங்கை வீரர்கள் அணிவகுப்பு

ஓலிம்பிக் ஆரம்ப விழாவில் ஜுடோ வீரர் சாமர நுவன் இலங்கை தேசியக் கொடியை எந்திச்சென்று அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்

அவருடன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கெஹானி உடன் சென்றார். இவர்களைத் தொடர்ந்து இலங்கை வீர வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் அணிவகுத்து சென்றனர்

எனவே, சுமார் நான்கரை மணித்தியாலங்கள் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆரம்ப விழாவானது பாடல், ஆடல் மற்றும் கண்கவர் வானவேடிக்கைகளுடன் நிறைவுக்கு வந்தன.

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய நயோமி

டோக்கியா ஒலிம்பிக் ஆரம்ப விழா அணிவகுப்பில் இறுதியாக போட்டிகளை நடத்தும் வரவேற்பு நாடான ஜப்பான் சென்றது.

ஒலிம்பிக் சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தோமஸ் பெச் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் குழுவின் தலைவர் சீகோ ஷிமொடோ உரையாற்றினர்.

இறுதியில் ஒலிம்பிக் கொடி ஏற்றிவைக்கப்பட, கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம் வந்த ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஒலிம்பிக் விளையாட்டு அரங்குக்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமாகியது

இந்த தீபத்தை உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான நயோமி ஒசாக ஏற்றியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கொரோனா அச்சுறுத்தல் 

ஒரு பக்கம் ஒலிம்பிக் குதூகலத்தால் பரவசமடைந்தாலும், மறுபுறத்தில் கொரோனா பரவலை நினைத்து ஜப்பானியர்கள் பீதியிலேயே உள்ளனர்

அவசரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டு இருந்த போதிலும் டோக்கியோவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 1,832 பேருக்கு தொற்று பரவியது

டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று

கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி ஒலிம்பிக் கிராமத்திலும் கொரோனா ஊடுருவி விட்டது. ஒலிம்பிக் தொடர்புடைய பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சில வீரர்கள் என்று 90க்கும் மேற்பட்டோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஒலிம்பிக் போட்டிக்காக இரண்டு இலட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ள ஜப்பான் அரசாங்கம் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவை வெற்றிகரமாக நடத்தி பெருமையை நிலைநாட்டுவதில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது

எனவே, எதிர்வரும் 17 நாட்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல, போட்டி ஒருங்கிணைப்பு குழுவுக்கும் கடும் சவால் நிறைந்ததாகவே அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை

அதேபோல, அடுத்த 17 நாட்களுக்கு முழு உலகினதும் ஒட்டுமொத்த கண்களும் டோக்கியோ நோக்கியே திரும்பியிருக்கும்.

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<