தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் குசல்!

South Africa tour of Sri Lanka 2021

2243

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, விளையாடமாட்டார் என எமது இணையத்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது.

குசல் பெரேராவுக்கு கடந்த 15ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு முகங்கொடுத்திருந்தார். இந்தநிலையில், அரசாங்க சுகாதார விதிமுறைப்படி, மேலும் 4 நாட்களுக்கு அவர், வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

T20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்த இசுரு உதான

இதன் காரணமாக அவர், வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளதுடன், அணியின் உயிரியல் பாதுகாப்பு வலயத்துடன் இணையவில்லை. எனவே, அவரால் எதிர்வரும் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் விளையாட முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது.

குசல் பெரேராவுக்கு, இங்கிலாந்தில் வைத்து ஏற்பட்ட தோற்பட்டை உபாதை காரணமாக, நடைபெற்றுமுடிந்த இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. இந்தநிலையில், வீட்டில் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள குசல் பெரேரா, பயிற்சிகளை மேற்கொண்டு, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I தொடருக்கு தயாராகிவிடுவார் என இலங்கை கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குசல் பெரேரா ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக மினோத் பானுக அல்லது தினேஷ் சந்திமால் செயற்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 29 வீரர்கள் கொழும்பில் உள்ள உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், இதில், 22 பேர் தென்னாபிரிக்க தொடருக்காக தெரிவுசெய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் எதிர்வரும் 2, 4 மற்றும் 7ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், T20I தொடர் 10, 12 மற்றும் 14ம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…