லங்கா ப்ரீமியர் லீக்கை ஆளுமா கொழும்பு கிங்ஸ்?

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

287
 

இலங்கையில் முதன்முறையாக நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ள பலமிக்க அணிகளில் ஒன்றாக கொழும்பு கிங்ஸ் அணி பார்க்கப்படுகிறது. இந்த அணி இலங்கை தேசிய அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையில் களமிறங்கவுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு பின்னர், கொழும்பு கிங்ஸ் அணி 22 பேர்கொண்ட குழாத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது.

டுபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபரான முர்பாட் முஷ்தபாவுக்கு சொந்தமான “பாசா குழுமம்” கொழும்பு கிங்ஸ் அணியை வாங்கியுள்ளதுடன், பாாசா குழுமம் ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வெற்றிகரமான வளர்ச்சியை பெற்றுவருகின்றது..

LPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல – மாலிங்க

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற T20  லீக் தொடர் மற்றும் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகள் போன்றவற்றில் விளையாடிய பல அணிகளுக்கு பயிற்றுவித்த அனுபவம் கொண்ட தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்ஸ் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். இவருக்கு உதவியாக இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் செயற்படவுள்ளார்.

கொழும்பு கிங்ஸ் அணி விபரம்

துடுப்பாட்ட வீரர்கள் – அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு உதார, ரவீந்திரபோல் சிங், லோரி எவன்ஸ், டேனியல் பெல்-ட்ரெம்மண்ட், கரீம் சகிட், *நவோத் பரனவிதான 

சகலதுறை வீரர்கள் – அன்ரே ரசல், திக்ஷில டி சில்வா, அசான் பிரியன்ஜன்

சுழல் பந்துவீச்சாளர்கள் – அமில அபொன்சோ, ஜெப்ரி வெண்டர்சே, தரிந்து கௌஷால், குவைஸ் அஹமட், *தரிந்து ரத்நாயக்க

வேகப் பந்துவீச்சாளர்கள் – இசுரு உதான, துஷ்மந்த சமீர, தம்மிக்க ப்ரசாத், மன்பிரீட் சிங், *கலன பெரேரா, *ஹிமேஷ் ரத்நாயக்க

(*துணை வீரர்கள்)

கொழும்பு கிங்ஸ் குழாமானது அனுபவம் மற்றும் இளம் வீரர்களை கொண்ட சிறந்த குழாமாக அமையப்பெற்றுள்ளது. அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு இடையில் 400 T20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதுடன், அன்ரே ரசல் சர்வதேசத்தில் நடைபெற்ற அத்தனை T20  தொடர்களிலும் விளையாடிய அனுபவத்தை தனக்குள் வைத்துள்ளார்.

அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஐ.பி.எல். தொடரில் பூனே வொரியர்ஸ் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். அத்துடன் ஸ்ரீலாங்கா ப்ரீமியர் லீக் தொடரில் நெகனஹிர நாகாஸ் அணிக்கும் தலைமை தாங்கியுள்ளார். அதேநேரம், தன்னுடைய உடற்தகுதி மற்றும் பந்தவீச்சு திறமையினையும் மெதிவ்ஸ் சிறப்பாக வெளிக்காட்டி வருகின்றார்.

இவருடன் இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் உள்ளூர் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை (354*)  விளாசி சாதனைப்படைத்திருந்தார். அதுமாத்திரமின்றி முதன்முறையாக நடைபெற்ற இராணுவ தளபதி T20 தொடரில் அதிகூடிய ஓட்டங்களை விளாசியவர் என்ற பெருமையையும் பெற்றார்.

Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

இவர்களுடன், இந்த தொடரில் கொழும்பு கிங்ஸ் அணி சார்பாக அதிகம் எதிர்பார்க்கப்படுபவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் அன்ரே ரசல். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தாலும், இம்முறை சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனினும், இவ்வருட ஆரம்பத்தில் இலங்கை வந்திருந்த இவர், 10 சிக்ஸர்கள் அடங்கலாக 28 பந்துகளுக்கு 75 ஓட்டங்களை விளாசி மிரட்டியிருந்தார்.

முன்னணி வீரர்களை தவிர்த்து, புதுமுக வீரர்களில் எதிர்பார்க்கக்கூடியவர், இம்முறை உள்ளூர் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார. கொழும்பு கிங்ஸ் அணியின் பிரதான குழாத்தில் இடம்பெற்ற ஒரேயொரு புதுமுக வீரராக இவர் உள்ளார். ஏனைய வீரர்களான நவோத் பரனவிதான, கலன பெரேரா, தரிந்து ரத்நாயக்க, ஹிமேஷ் ராமநாயக்க ஆகியோர் துணை வீரர்களாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பந்துவீச்சு பக்கம் பார்க்கும் போது, இசுரு உதான மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக உள்ளனர். இவர்களுடன், அனுபத்தை பகிர்ந்துக்கொள்ளும் முகமாக தம்மிக பிரசாத் மற்றும் மன்ப்ரீட் கோனி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். சுழல் பந்துவீச்சை பொருத்தவரை, ஆப்கானிஸ்தான் அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் குவைஸ் அஹமட் மற்றும் இலங்கை அணியின் அமில அnghன்சோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லங்கா ப்ரீமியர் லீக்கின் முதல் போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணியானது, கண்டி டஸ்கர்ஸ் அணியை, எதிர்வரும் 26ம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…