சகோதரனை இழந்த சக்காரியா கொரோனாவால் தந்தையும் இழந்தார்

117

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியாவின் தந்தை கஞ்சிபாய் சக்காரியா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமான நிலையில் இருந்த 42 வயதான கஞ்சிபாய் சக்காரியா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்வாகம் டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிசெய்துள்ளது.

IPL கிரிக்கெட்டில் தடம்பதித்த இந்த சேத்தன் சக்காரியா யார்?

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் சையத் முஷ்டாக் அலி T20 கிண்ணத் தொடரில் சேத்தன் சக்காரியா விளையாடும்போதுதான், தனது மூத்த சகோதரரை இழந்தார். அதற்குள் இப்போது தனது தந்தையை கொரோனாவில் இழந்துள்ளார்

இதுகுறித்து சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ”சேத்தன் சக்காரியாவின் தந்தை உயிரிழந்த செய்தி கேட்டு சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் ஒவ்வொருவரும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம். சேத்தன் சக்காரியாவின் குடும்பத்தினருக்கு மனவலிமையை அளிக்கவும், சக்காரியாவின் தந்தையின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டுகிறோம்” என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் டுவிட்டரில்் பதிவிட்ட செய்தியில்

”கொரோனா வைரஸ் பாதிப்பில் சேத்தன் சக்காரியாவின் தந்தை கஞ்சிபாய் சக்காரியா உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தோம். சேத்தன் சக்காரியாவுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். இந்த கடினமான நேரத்தில் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்குவோம்” என தெரிவிக்கப்பட்டது

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று

சேத்தன் சக்காரியா குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த வருடம் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் பருவத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்த சக்காரியா, கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.2 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன்படி, இம்முறை IPL தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக விளங்கிய சேத்தன் சக்காரியா, 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, முன்னதாக கடந்த வாரம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி வத்ஸலா கொரோனா வைரஸினால் உயிரிழந்தார். தனது சகோதரியை இழப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான், தனது தாயையும் வேதா இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…