இந்தியாவிடம் தோற்ற இலங்கை மகளிர் இக்கட்டான நிலையில்

272

மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான தீர்க்கமான லீக் போட்டியில் 7 விக்கெட்டுகளால் தோல்வி அடைந்த இலங்கை மகளிர் அணி பெறும்பாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்துள்ளது.

கோலாலம்பூர், ரோயல் செலகோர் மைதானத்தில் இன்று (07) நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி நடப்புச் சம்பியன் இந்தியாவுடன் மந்தமாக துடுப்பெடுத்தாடியதோடு பந்துவீச்சிலும் சோபிக்க தவறியது.

அடுத்தடுத்த வெற்றிகளுக்குப்பின் பாகிஸ்தான் மகளிரிடம் வீழ்ந்த இலங்கை

மகளிர் ஆசிய கிண்ண டி20 தொடரில் பாகிஸ்தானுடனான…

இந்நிலையில் நேற்று (06) நடந்த போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியிடம் இந்திய மகளிர் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் பங்களாதேஷ் முன்னேற்றம் கண்டிருப்பதால் இந்த தோல்வியோடு இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது சாத்தியமில்லாமல் ஆகியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 12 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தபோதும் ஆரம்ப வீராங்கனை யசோதா மெண்டிஸ் மற்றும் ஹசினி பெரேரா இரண்டாவது விக்கெட்டுக்கு சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

இந்நிலையில் யசோதா 27 ஓட்டங்களை பெற்றிருந்தபோது பூனம் யாதவ்வின் பந்துக்கு ஆட்டமிழந்த பின்னர் இலங்கை மகளிர் அணி தடுமாற்றம் காண ஆரம்பித்தது. ஒருமுனையில் ஹசினி பெரேரா சிறப்பாக துடுப்பெடுத்தாடியபோதும் மறுமுனை விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோயின.

குறிப்பாக மத்தியவரிசை வீராங்கனைகளான மல்ஷா ஷெஹானி (01) மற்றும் அணித்தலைவி ஷஷிகலா சிறிவர்தன (02) அனாவசியமாக ரன் அவுட் ஆகினர்.

டோவ்ரிச், ஹோல்டரின் இணைப்பாட்டத்தால் சரிவிலிருந்து மீண்ட மேற்கிந்திய தீவுகள்

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள்…

இதனால் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களையே பெற்றது. தனித்து கடைசி வரை சிறப்பாக ஆடிய ஹசினி பெரேரா 43 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணி சார்பில் எக்தா பிஷ்த் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் 108 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாடிய இந்திய மகளிர் அணியின் முதல் விக்கெட்டை 21 ஓட்டங்களிலேயே வீழ்த்த வேகப்பந்து வீச்சாளர் ஓஷதி ரணசிங்கவினால் முடிந்தது. எனினும் இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை காத்துக்கொண்டு சற்று மந்தமாக ஆடிய பின்னர் கடைசி பத்து ஒவர்களில் ஆட்டத்தின் வேகத்தை கூட்டினர்.

மத்திய வரிசையில் வந்த வெதா கிரிஷ்னமூர்த்தி தனது துடுப்பாட்டத்தில் வேகம் காட்டியபோது இலங்கை பந்துவீச்சாளர்களால் அவரை தடுக்க முடியவில்லை. 29 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களை பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் இந்திய மகளிர் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 110 ஓட்டங்களை பெற்று வெற்றியிட்டிக் கொண்டது. துடுப்பாட்டத்தில் அதிரடியாக 19 ஓட்டங்களையும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் பெற்ற அனுஜா பாடில் ஆட்ட நாயகியாக தெரிவானார்.

கடந்த ஆறு ஆசிய கிண்ணங்களையும் ஒட்டு மொத்தமாக வென்ற இந்திய அணி இந்த போட்டியில் வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.   

மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே முதல் மூன்று இடங்களில் இருப்பதோடு இலங்கை மகளிர் அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணி இன்று நடந்த தாய்லாந்துடனான போட்டியை 9 விக்கெட்டுகளாலும், பாகிஸ்தான் அணி போட்டியை நடத்தும் மலேசியாவுடனான ஆட்டத்தை 147 ஓட்டங்களாலும் வென்றதன் மூலமே அந்த இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை அணி வரும் சனிக்கிழமை (09) தனது கடைசி லீக் போட்டியில் தாய்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் அதனால் 6 புள்ளிகளையே பெற முடியும். எனினும் அன்றைய தினத்தில் பங்களாதேஷ் அணி கத்துக்குட்டி மலேசியாவை எதிர்கொள்ளவிருப்பதால் அதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

மறுபுறம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி தீர்க்கமாக அமையவுள்ளது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (10) கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் – 107/7 (20) –  ஹசினி பெரேரா 46*, யசோதா மெண்டிஸ் 27, எக்தா பிஷ்த் 2/20, அனுஜா பாடில் 1/19

இந்திய மகளிர் – 110/3 (18.5) – வெதா கிரிஷ்னமூர்த்தி 29*, ஹன்மன்பிரீத் கவுர் 24, மிதாலி ராஜ் 23, அனுஜா பாடில் 19*, நிலக்ஷி டி சில்வா 1/12

முடிவு – இந்திய மகளிர் 7 விக்கெட்டுகளால் வெற்றி