சுதந்திர கிண்ண டி20 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ்

1267

இலங்கையுடனான சுதந்திர கிண்ண டி20 முத்தரப்பு தொடரின் பரபரப்பான போட்டியில் 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

[rev_slider LOLC]

இதில் கடைசி நான்கு பந்துகளுக்கும் பங்காளதேஷ் அணி 12 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் மஹ்மூதுல்லாஹ் பவுண்டரி மற்றும் சிக்ஸர் ஒன்றை விளாசியமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற இந்த தீர்க்கமான போட்டிக்கு பங்களாதேஷ் அணியின் நிரந்தர தலைவர் ஷகீப் அல் ஹஸன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பினார். இந்தியாவுடனான போட்டியில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அபூ ஹைதரின் இடத்தையே ஷகீப் நிரப்பினார்.

இலங்கை அணியிலும் இந்த போட்டியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வேகப்பந்து வீச்சாளர்களான சுரங்க லக்மால் மற்றும் துஷ்மந்த சமீர விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் இடதுகை சுழல் பந்து வீச்சாளர் அமில அபொன்சோ மற்றும் மந்தமான ஆடுகளத்தில் சிறப்பாக பந்து வீசும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதான அழைக்கப்பட்டனர்.

Photos: Sri Lanka vs Bangladesh – Nidahas Trophy 2018 Match #6

ThePapare.com | Viraj Kothalawala | 16/03/2018..

சுதந்திர கிண்ண தொடரின் முதல் ஐந்து போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்திற்கு மாறாக புதிய ஆடுகளம் ஒன்றே இந்த போட்டியில் பயன்படுத்தப்பட்டிருந்தது. எனினும் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹஸன் இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

கடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் இரண்டாவதாக துடுப்பாடிய அணிகளே வென்றபோதும் அதிகம் உலர்ந்த இந்த புதிய ஆடுகளத்தில் தாம் முதலில் துடுப்பெடுத்தாடவே எண்ணியதாக திசர குறிப்பிட்டார்.     

எனினும் முதல் பத்து ஓவர்களும் பங்களாதேஷ் அணிக்கே சாதகமாக இருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க 7 பந்துகளில் 4 ஓட்டங்களோடு ஆட்டமிழந்ததோடு மறுமுனையில் குசல் மெண்டிஸ் இரண்டாவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளுக்கும் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாச முடிந்தபோதும் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய பந்துக்கு உயர்த்தி அடிக்க முயன்று 11 ஓட்டங்களுக்கு பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.   

அடுத்து வந்த உபுல் தரங்க துரதிஷ்டவசமாக 5 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, தசுன் சானக்க தொடரில் இரண்டாவது முறையாக ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். பங்களாதேஷுடனான முதல் லீக் போட்டியிலும் அவர் பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஜீவன் மெண்டிசால் 3 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இதனால் இலங்கை அணி 41 ஓட்டங்களுக்கு முதல் ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. குறிப்பாக முதல் பத்து ஓவர்களுக்கும் இலங்கை அணியால் வெறும் 53 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

எனினும் ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தனர். 11ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசிய குசல் பெரேரா 13ஆவது ஓவரில் இலங்கை அணிக்காக முதல் சிக்ஸரையும் அடுத்த பந்தில் பவுண்டரியையும் பெற்ற போது டி20 சர்வதேச போட்டிகளில் 1000 ஓட்டங்களை எட்டினார். இந்த இலக்கை எட்டும் ஐந்தாவது இலங்கை வீரர் குசல் பெரேரா ஆவார்.

தொடர்ந்து அபாரமாக ஆடிய குசல் பெரேரா டி20 போட்டிகளில் தனது 10ஆவது அரைச்சதத்தை பெற்றதோடு இந்த தொடரில் பெறும் மூன்றாவது அரைச்சதமாகவும் இருந்தது.

இந்நிலையில் மறுமுனையில் துடுப்பாடி வந்த அணித் தலைவர் திசர பெரேரா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய அவர் ஆடுகளத்தில் வேகமாக ஓட்டங்களை குவிக்கவும் தவறவில்லை.

பங்களாதேஷை எதிர்கொள்ள எமக்கு எந்த அழுத்தமும் இல்லை – ஹத்துருசிங்க

தற்பொழுது இடம்பெற்று வரும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 கிரிக்கெட் தொடரின்….

எனினும் சிறப்பாக துடுப்பாடி வந்த குசல் பெரேரா, சௌம்யா சர்கார் வீசிய பந்தை உயர தட்டிவிட்டபோது அது பிடியெடுப்பாக மாறியது. 40 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 61 ஓட்டங்களை குவித்தார்.

இதன் போது இரு பெரேராக்களும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 61 பந்துகளில் 97 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். டி20 சர்வதேச போட்டிகளில் 6ஆவது விக்கெட்டுக்கு பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் இதுவாகும். 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய வீரர்களான மைக் ஹஸி மற்றும் கெமரூன் வைட் இலங்கைக்கு எதிராக பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 101 ஓட்டங்களை பெற்றதே முதலிடத்தில் உள்ளது.

எனினும் குசல் பெரேரா ஆட்டமிழந்த பின் அடுத்த பந்திலேயே திசர பெரேரா சிக்ஸர் ஒன்றை விளாசி டி20 போட்டிகளில் தனது கன்னி அரைச்சதத்தை எட்டினார். 33 பந்துகளிலேயே அவர் அரைச்சதம் எட்டினார். எனினும் 37 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை விளாசி திசர பெரேரா 58 ஓட்டங்களுடன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.   

இதன்படி இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. குறிப்பாக கடைசி 10 ஓவர்களுக்கும் இலங்கை அணி 106 ஓட்டங்களை குவித்தது. இதன்போது பங்களாதேஷ் அணிக்காக முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிடொன் தாஸை ஓட்டம் பெறாமலேயே அகில தனஞ்சய வெளியேற்றினார். அடுத்து வந்த சப்பிர் ரஹ்மானையும் அவர் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தார்.

எனினும் மறுமுனையில் தமிம் இக்பால் சிறப்பாக ஆடி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். கடந்த இரண்டு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் ரஹிமுடன் இணைந்த அவர் 3ஆவது விக்கெட்டுக்கு 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டபோது பங்களாதேஷ் 100 ஓட்டங்களை நெருங்கியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் வாரம்…

இந்நிலையில் 25 பந்துகளுக்கு 28 ஓட்டங்களை பெற்றிருந்த முஷ்பிகுர் ஆட்டமிழந்தார். கடந்த இரண்டு இன்னிங்சுகளிலும் அவர் ஆட்டமிழக்காது தலா 72 ஓட்டங்களை பெற்ற நிலையிலேயே கடைசியில் அவரது விக்கெட் வீழ்த்தப்பட்டது.

எனினும் மறுமுனையில் அபாரமாக ஆடிய தமிம் இக்பால் T20 போட்டிகளில் தனது 5ஆவது அரைச்சதத்தை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 42 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் வெற்றி வாய்ப்பு நெருங்கியபோது மஹ்முதுல்லாஹ் மற்றும் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் களத்தில் இருந்தனர். பங்களாதேஷ் அணி கடைசி மூன்று ஓவர்களுக்கும் 29 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பந்துவீச வந்த இசுரு உதான முதல் ஐந்து பந்துகளுக்கும் 6 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்ததோடு கடைசி பந்தில் தமிம் இக்பாலின் விக்கெட்டை வீழ்த்தினார்.

எனினும் 12 பந்துகளுக்கு 23 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் பந்துவீச வந்த திசர பெரேரா அந்த ஓவரில் 11 ஓட்டங்களைக் கொடுத்தார். இதனால் கடைசி ஓவருக்கு பங்களாதேஷ் அணி 12 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. இதன்போது பந்துவீசிய இசுரு உதான முதல் பந்தில் ஓட்டம் ஏதும் விட்டுக்கொடுக்காமல் அடுத்த பந்தில் முஸ்தபிசுர் ரஹ்மானை ஓட்டமின்றி ஆட்டமிழக்கச் செய்தார்.

இதன்போது பங்களாதேஷ் அணியினர் முதல் இரண்டு பந்துகளும் தோளுக்கு மேலால் உயர்ந்ததாக அதிருப்தி வெளியிட்டு மைதானத்தில் இருந்த வெளியேற முயன்றபோதும் இறுதியில் தொடர்ந்து விளையாடத் தீர்மானித்தது.

இதன்போது துடுப்பெடுத்தாடிய மஹ்மூதுல்லாஹ் மூன்றாவது பந்தில் பவுண்டரி ஒன்றையும் 5ஆவது பந்தில் சிக்ஸர் ஒன்றையும் விளாசி பங்களாதேஷ் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். அபாரமாக ஆடிய மஹ்மூதுல்லாஹ் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இதன் மூலம் பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 160 ஓட்டங்களையும் எட்டியது.

இதன்படி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்