தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற 103ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரரான அருந்தவராசா புவிதரன் நிகழ்த்திய ஒரேயொரு போட்டிச் சாதனையுடன் நிறைவுக்கு வந்தது.
இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான தகுதிகாண் போட்டியாக அமைந்த போதிலும், போட்டித் தொடர் நடைபெற்ற 2 தினங்களிலும் எதிர்பார்க்கை மெய்வல்லுனர்களில் யாரும் அடைவு மட்டத்தை எட்டவில்லை. இதற்கு சீரற்ற காலநிலையும் முக்கிய காரணமாக அமைந்தது.
இதனிடையே, இந்த ஆண்டு தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவும், அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக 400 மீற்றர் வீராங்கனையான நதீஷா ராமநாயக்கவும் தெரிவாகினர்.
- தேசிய விளையாட்டு மெய்வல்லுனரில் சாதித்த தமிழ் பேசும் வீரர்கள்
- மெய்வல்லுனர் தகுதிகாணில் பிரகாசித்த வக்ஷான், அரவிந்தன், மிதுன்ராஜ்
இந்த நிலையில், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தமிழ் பேசுகின்ற வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக வட மாகாணத்தைப் பொறுத்தவரை அருந்தவராசா புவிதரன் தவிர நேசராசா டக்சிதா, எஸ். மிதுன்ராஜ் மற்றும் எஸ். பிரகாஸ்ராஜ் ஆகியோர் மைதான நிகழ்ச்சியிலும், இளங்கோ விகிர்தன் சுவட்டு நிகழ்ச்சியிலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அதேபோல, மலையகத்தைச் சேர்ந்த வின்ராஜ் வக்ஷான் மற்றும் சபியா யாமிக், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். அசான், ரவி ரதுஷன் மற்றும் மொஹமட் நிப்ராஸ் ஆகியோர் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
சாதனை நாயகன் புவிதரன்
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன், 5.05 மீற்றர் உயர் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் கடந்த ஆண்டு தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற இராணுவ மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 5.17 மீற்றர் உயரம் தாவி இலங்கை சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தற்போது இராணுவ விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
டக்சிதாவிற்கு தங்கம்
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் சார்பில் போட்டியிட்ட நேசராசா டக்சிதா, 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கம் வென்றார்.
அண்மையில் ஜேர்மனியில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவில் பங்குகொண்ட இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய இலங்கை சாதனை நிலைநாட்டியிருந்தார்.
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார்.
மிதுன்ராஜுக்கு இரட்டைப் பதக்கம்
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 16.02 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவரான எஸ்.மிதுன்ராஜ் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். அதேபோல, ஆண்களுக்கான தட்டெறிதலில் 47.91 மீற்றர் தூரத்தை மிதுன்ராஜ் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். இது அவரது தனிப்பட்ட அதிசறிந்த தூரப் பெறுதியாகும்.
அதே போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் சார்பில் போட்டியிட்ட எஸ். பிரகாஸ்ராஜ், 46.55 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
இரும்பு மனிதனாக மீண்டும் அசாம்
இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் (டெகத்லன்) பங்குகொண்ட நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அஸான், 7019 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான டெகத்லன் போட்டியில் முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மொஹமட் அஸான், 2023இல் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றார். எனினும், கடந்த ஆண்டு அவர் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷி;ப்பில் டெகத்லன் போட்டியில் பங்குபற்றுவதை தவிர்த்திருந்தலும், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 2ஆவது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
இந்த நிலையில், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிலும் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட அஸான், 7.35 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 6ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இளங்கோவின் கனிஷ்ட சாதனை
ஆண்களுக்கான 3 ஆயிரம் தடைதாண்டி ஓட்டப் போட்டியை 9 நிமிடங்கள் 14.28 செக்கன்களில் நிறைவு செய்த வவுனியா மெய்வல்லுனர் சங்க வீரர் இளங்கோ விகிர்தன் புதிய கனிஷ்ட தேசிய சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
அதேபோல, ஆண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வக்ஷானுக்கு 2ஆவது இடம்
ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 14 நிமிடங்கள் 40.51 செக்கன்களில் நிறைவுசெய்த தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான், தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். எனினும், ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவருக்கு 5ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதனிடையே, மலையகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களான குமார் சண்முகேஸ்வரன் மற்றும் வேலு க்ரிஷாந்தினி ஆகிய இருவரும் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் 4ஆவது இடங்களைப் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.
ரதுஷன், நிப்ராஸ் அபாரம்
இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி ரதுஷன், 72.21 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன் மூலம் முதல்தடவையாக தேசிய மெய்வல்லுனரில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அவருக்கு 4ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற ரதுஷன், இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற முதலாவது தேசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் 3ஆவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது தேசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதனிடையே, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான மொஹமட் நிப்ராஸ், ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 57.64 செக்கன்களில் நிiவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சாதிக்கும் சபியா
பெண்களுக்கான குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருகின்ற கண்டியைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.08 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார். இவர் கடந்த ஆண்டும் இதே போட்டி நிகழ்ச்சியில் தங்கப் பதக்கம் வென்;றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேபோல, பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட அவர், போட்டித் தூரத்தை 11.84 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது தவிர, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த சி. அரவிந்தன், ஆண்களுக்கான முப்பாய்;;ச்சலில் தென் மகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட் தத்தமது போட்டிகளில் 4ஆவது இடங்களைப் பிடித்தனர். அதுமாத்திரமின்றி, கடந்த காலங்களில் ஆண்களுக்கான தட்டெறிதலில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக்குக்கு இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 8ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<