சுரங்க லக்மாலின் சிறந்த பந்து வீச்சினால் முதல் நாள் இலங்கை அணி வசம்

2391
Sri Lanka tour of South Africa, 1st Test

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஆரம்பித்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி தலைவர் டு ப்ளசிஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதனை அடுத்து களமிறங்கிய  ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஸ்டெபன் குக் மற்றும் டீன் எல்கர் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். மிகவும் இலகுவாக இலங்கை பந்து வீச்சாளர்களை எதிர் கொண்ட இவ்விரு வீரர்களும் மதிய போசன இடைவேளை வரை எவ்விதமான விக்கெட்டுகளையும் பறிகொடுக்காமல் 92 ஓட்டங்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டனர். சிறப்பாக துடுப்பாடிய ஸ்டெபன் குக் 104 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

எனினும், மதிய போசனத்துக்கு பின்னர் சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணி ஓட்டங்களை கட்டுப்படுத்தி தென்னாபிரிக்க அணிக்கு அழுத்தம் கொடுத்தனர். ஓட்டங்களை குவிக்க சற்றே தடுமாறிய நிலையில், ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த ஸ்டெபன் குக் 59 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹஷிம் அம்லா, நிதானமாக துடுப்பாடி 23 பந்துகளை எதிர்கொண்டு தனது முதல் ஓட்டத்தினை பெற்றுக்கொள்ள, மறுமுனையில் துடுப்பாடிய டீன் எல்கர் 45 ஓட்டங்களுடன் மீண்டும் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து ஹஷிம் அம்லாவுடன் இணைந்து கொண்ட ஜே பி டுமினி எதிர் கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக துடுப்பாடினார். இவ்விருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

தேநீர் இடைவேளைக்கு பின்னர் ஆட்டத்தினை தொடர்ந்த தென்னாபிரிக்க அணி, ஓட்ட எண்ணிக்கை 178 ஆக இருந்தபோது தனது மூன்றாவது விக்கெட்டாக ஹஷிம் அம்லாவை இழந்தது. ஹஷிம் அம்லா 76 பந்துகளுக்கு 20 ஓட்டங்களுடன் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் தினேஷ் சந்திமாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக துடுப்பாடிய ஜே. பி. டுமினி ரங்கன ஹேரத்தின் சுழல் பந்து வீச்சில் சற்று தடுமாறினார். இவர் 10 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 63 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை LBW முறையில் ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மைதான நடுவர் LBW கோரிக்கையை நிராகரித்ததனால் அணித் தலைவர் எஞ்சேலோ மெதிவ்ஸ், முடிவை மீள்பரிசீலனை செய்வதற்காக மூன்றாவது நடுவரிடம் கோரிக்கை விடுத்தார். அதன்போது பந்து விக்கெட்டில் மோதுவது உறுதி செய்யப்பட்டதால் ஜே. பி. டுமினி ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, தென்னாபிரிக்க அணித்தலைவர் டு ப்ளசிஸ் 37 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இரண்டாவது புதிய பந்தை பெற்றுக்கொண்ட சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் திமுத் கருணாரத்னவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு வலிமை மிக்க தென்னாபிரிக்க அணியை 267 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி கட்டுப்படுத்தியது.

இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் தென்னாபிரிக்க அணியின் முன் வரிசை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்ததோடு 62 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம் :