ரெட் ஸ்டார்ஸை வீழ்த்திய டிபெண்டர்ஸ்; கொழும்பு அணிக்கு இரண்டாவது வெற்றி

Super League - Pre-Season 2021

217

சுபர் லீக் முன் பருவப் போட்டிகளில் சனிக்கிழமை (27) சுகததாச அரங்கில் இடம்பெற்ற முதல் ஆட்டத்தில் ரெட் ஸ்டார்ஸ் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் டிபெண்டர்ஸ் அணி வீழ்த்த, அப் கண்ட்ரி லயன்ஸ் அணியை 3-1 என கொழும்பு கால்பந்து கழகம் வெற்றி கொண்டது.

ரெட் ஸ்டார்ஸ் கா.க எதிர் டிபெண்டர்ஸ் கா.க 

ரெட் ஸ்டார்ஸ் வீரர்கள் தமது முதல் போட்டியில் புளூ ஸ்டார் அணியிடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி கண்டிருந்தனர். ரினௌன் அணியில் கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் குறித்த அணிக்கு எதிராக டிபெண்டர்ஸ் அணி முதல் வாரத்தில் மோதவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

புளூ ஈகல்ஸை இலகுவாக வென்றது கொழும்பு அணி

இந்நிலையில் இந்த மோதலின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் மிகவும் மந்தமான ஒரு ஆட்டத்தையே காண்பித்தது. 

முதல் பாதி முடியும் தருவாயில் டிபெண்டர்ஸ் வீரர் ரஹ்மான் கோலுக்கு அண்மையில் இருந்து எடுத்த முயற்சியை ரெட் ஸ்டார்ஸ் கோல் காப்பாளர் ரிஸ்வி சிறந்த முறையில் தடுத்தார். 

முதல் பாதி: ரெட் ஸ்டார்ஸ் கா.க 0 – 0 டிபெண்டர்ஸ் கா.க

இரண்டாம் பாதியில் 72ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் பந்தை பெற்ற ரிப்கான் 2, 3 வீரர்களை தாண்டி பந்தை கோல் எல்லைக்குள் எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்ய, வெளிநாட்டு வீரர் ஸ்டெபான் அதனை கோலாக்கி, டிபெண்டர்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார். 

அடுத்த 5 நிமிடங்களில் ரெட் ஸ்டார்ஸ் அணிக்கு கிடைத்த கோனர் வாய்ப்பின்போது பைசல் தனக்கு வந்த பந்தை மாற்று வீரராக வந்த ரிஸ்லானுக்கு வழங்க அவர் அதனை கோலாக்கி ஆட்டத்தை சமப்படுத்தினார். 

தொடர்ந்த ஆட்டத்தில், உபாதையீடு நேரத்தில் டிபெண்டர்ஸ் அணிக்கு எதிரணியின் கோல் எல்லையில் வைத்து கிடைத்த ப்ரீ கிக்கின்போது சஜித் குமார உள் அனுப்பிய பந்தை லக்‌ஷித ஜயதுங்க ஹெடர் செய்து போட்டியின் வெற்றி கோலை பெற்றார். 

முழு நேரம்: ரெட் ஸ்டார்ஸ் கா.க 1 – 2  டிபெண்டர்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள் 

  • ரெட் ஸ்டார்ஸ் கா.க – M.  ரிஸ்லான் 72’ 
  • டிபெண்டர்ஸ் கா.க –  D. ஸ்டெபான் 67’, லக்‌ஷித ஜயதுங்க 90+2’

கொழும்பு கா.க எதிர் அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க 

இரவு இடம்பெற்ற இந்த போட்டி அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்களுக்கு தொடரின் முதல் ஆட்டமாக இருந்தது. எனினும், கொழும்பு அணி வீரர்கள் தமது முதல் போட்டியில் புலூ ஈகல்ஸ் வீரர்களை வெற்றி கொண்ட நிலையிலேயே இந்த மோதலில் களமிறங்கினர்.

கொவிட் 19 தொற்றினால் ரினௌன் – டிபெண்டர்ஸ் போட்டி ஒத்திவைப்பு

இந்த போட்டி அரம்பமாகி இரண்டாவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக்கின்போது மத்திய களத்திலிருந்து சர்வான் உதைந்த பந்து நேராக கோல் கம்பத்தினுள் சென்றது. சர்வானின் இந்த கோலே முதல் பாதியில் பெறப்பட்ட ஒரே கோலாக இருந்தது.

முதல் பாதி: கொழும்பு கா.க 1 – 0 அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க  

போட்டியின் 52 ஆவது நிமிடத்தில் ஆகிப் எதிரணியின் கோல் திசைக்கு எடுத்து வந்து பரிமாற்றம் செய்த பந்தை சபீர் இலகுவாக கோலுக்குள் செலுத்தினார்

தொடர்ந்து ஷரித வழங்கிய பந்தை பெற்ற நிரான் எதிரணியின் எல்லைவரை சென்று வழங்கிய பந்தை ஷமோட் டில்ஷான் ஹெடர் செய்து, கொழும்பு அணிக்கான மூன்றாவது கோலையும் பெற்றார்

அதன் பின்னர் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது உள்ளனுப்பிய பந்தை கவிந்து இஷான் ஹெடர் செய்து அப் கண்ட்ரி அணிக்கு முதல் கோலை பெற்றார்

அடுத்த நிமிடம் மீண்டும் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது கவிந்து இஷான் உதைந்த பந்தை கோல் காப்பாளர் இம்ரான் தடுத்தார்

எனவே, போட்டி முடிவில் கொழும்பு கால்பந்து கழகம் தமது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியை பதிவு செய்தனர் 

முழு நேரம்கொழும்பு கா.க 3 – 1 அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க  

கோல் பெற்றவர்கள்  

  • கொழும்பு கா.க – சர்வான் ஜோஹர், சபீர் ரசூனியா, ஷமோட் டில்ஷான் 
  • அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க  – கவிந்து இஷான்

>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<