இரண்டு குழுக்களாக மோதல் இடம்பெறவுள்ள சுபர் லீக் முன் பருவம்

Super League Pre-Season 2021

482
Super League Media Conference & Pre Season Draw 2021

இலங்கை கால்பந்து ரசிகர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்திருந்த சுபர் லீக் கால்பந்து சுற்றுத் தொடரின் முன் பருவப் போட்டிகள் (Pre Season) இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 

இலங்கையில் தொழில்முறை கால்பந்தின் ஆரம்ப கட்டமாக இடம்பெறவுள்ள சுபர் லீக் தொடர் குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு மற்றும் சுபர் லீக் தொடருக்கு முன்னர் இடம்பெறவுள்ள முன் பருவ போட்டிகளுக்கான குலுக்கல் நிகழ்வு (Draw) என்பன இன்று (10) விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  

இலங்கையை FIFA தரப்படுத்தலில் 150இற்கு முன்னேற்றுவோம்: அமைச்சர் நாமல்

இலங்கையின் அங்குரார்ப்பண சுபர் லீக் தொடர் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் ஜுலை 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னர் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் மார்ச் 10ஆம் திகதி வரை முன் பருவப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) கழகங்களுக்கான அனுமதியினைப் பெற்ற கழகங்களுக்கு மாத்திரமே இந்த தொழில்முறை கால்பந்து சுற்றுத் தொடரில் ஆட முடியும். அதன்படி, அங்குரார்ப்பண சுபர் லீக் தொடரில் ஆடுவதற்கு இலங்கையின் 10 அணிகள் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 

சுபர் லீக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 

புளூ ஸ்டார் வி.க, கொழும்பு கா.க, ரினௌன் வி.க, டிபெண்டர்ஸ் கா.க, புளூ ஈகல்ஸ் வி.க, சீ ஹோக்ஸ் கா.க, ரெட் ஸ்டார்ஸ் கா.க, அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க, ரட்னம் வி.க, நியூ யங்ஸ் கா.க

இந்நிலையில், ஆரம்பமாகவுள்ள முன் பருவப் போட்டித் தொடரில் 10 அணிகளும் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குறித்த குழுவில் உள்ள ஒரு அணி தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். எனவே, ஒரு அணிக்கு குழு நிலையில்  மொத்தமாக 4 போட்டிகள் கிடைக்கும். இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு சுகததாஸ அரங்கில் இடம்பெறவுள்ளன. எனினும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ரசிகர்கள் எவரும் மைதானத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

அதேபோன்று, போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த சுற்றுத் தொடரிற்கு முன்பு ஒரு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதேபோன்று, ஒவ்வொரு போட்டிக்கும் 5 மணி நேரத்திற்கு முன்னர் வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ரபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிகப்படுகின்றது.

குலுக்கல் நிகழ்விற்கு அமைய அணிகளின் நிலை….. 

குழு A குழு B
ரினௌன் வி.க அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க
ரட்னம் வி.க சீ ஹோக்ஸ் கா.க 
புளூ ஸ்டார் வி.க நியூ யங்ஸ் கா.க 
டிபென்டர்ஸ் கா.க  கொழும்பு கா.க 
ரெட் ஸ்டார்ஸ் கா.க  புளூ ஈகல்ஸ் கா.க 

>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<