நியு யங்ஸ், புளூ ஸ்டார் அணிகளுக்கு இலகு வெற்றி

Super League 2021

227

சுபர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது வாரத்திற்கான போட்டிகளில் ரட்னம் விளையாட்டுக் கழகத்தை 3-1 என நியு யங்ஸ் கால்பந்து கழகமும், சீ ஹோக்ஸ் கால்பந்து கழகத்தை 3-0 என புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகமும் வீழ்த்தியுள்ளது.

இதேவேளை, அங்குரார்ப்பண சுபர் லீக் தொடரில் இதுவரை இடம்பெற்ற 5 போட்டிகளில் எந்தவித தோல்வியையும் சந்திக்காத சீ ஹோக்ஸ் அணிக்கு இது முதலாவது தோல்வியாக அமைந்தது.

நியு யங்ஸ் கா.க எதிர் ரட்னம் வி.க

குதிரைப் பந்தயத் திடலில் வியாழக்கிழமை (16) முதல் போட்டியாக இடம்பெற்ற இந்த மோதலின் 36ஆவது நிமிடத்தில் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து இடது காலால் கோலின் வலது பக்கத்தினால் பந்தை கம்பங்களுக்குள் செலுத்திய நியு யங்ஸ் வீரர் தரிந்து தனுஷ்க அவ்வணியை முன்னிலைப் படுத்தினார்.

எனினும், அடுத்த 6 நிமிடங்களில், மத்திய களத்தில் இருந்து சித்ரகுமார் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தினை பெற்ற டென்சொ இனொச், கோல் எல்லைவரை பந்தை எடுத்துச் சென்று ரட்னம் அணிக்கான முதல் கோலைப் பெற்று, முதல் பாதியில் ஆட்டத்தை சமப்படுத்தினார்.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 35 நிமிடங்கள்வரை இரு அணியினரும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில், இரண்டு நிமிட இடைவெளியில் நியு யங்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்றனர்.

80ஆவது நிமிடத்தில், நியு யங்ஸ் வீரர்கள் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை ரட்னம் கோல் காப்பாளர் முர்ஷித் முன்னே வந்து தடுத்தார். மீண்டும் அந்தப் பந்தை லக்ஷான் தனன்ஜய கோல் காப்பாளர் இல்லாமல் இருந்த கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியை முன்னிலைப்படுத்தினார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் ரட்னம் வீரர்களிடமிருந்து பந்தைப் பறித்த நியு யங்ஸ் வீரர்கள் அதனை நிகில பெர்னாண்டோவுக்கு வழங்க, அவர் கோலுக்கு வலது புறத்தில் சற்று தொலைவில் இருந்து முர்ஷிதின் தலைக்கு மேலால் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி அணிக்கான மூன்றாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, போட்டி நிறைவில் நியு யங்ஸ் வீரர்கள் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று, தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ததுடன், புள்ளிப் பட்டியலில் 07 புள்ளிகைளைப் பெற்றுள்ளனர். ரட்னம் வீரர்கள் இந்த தொடரில் இதுவரையில் எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: நியு யங்ஸ் கா.க 3 – 1 ரட்னம் வி.க

கோல் பெற்றவர்கள்

  • நியு யங்ஸ் கா.க – தரிந்து தனுஷ்க 36’, லக்ஷான் தனன்ஜய 80’, நிகில பெர்னாண்டோ 82’
  • ரட்னம் வி.க – டென்சொ இனொச் 41’

புளூ ஸ்டார் வி.க எதிர் சீ ஹோக்ஸ் கா.க

இந்த தொடரில் உள்ள பலம் கொண்ட இரண்டு அணிகளாக கருதப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த ஒரு மோதலாக இருந்தது.

கடந்த போட்டியில் சிவப்பு அட்டை பெற்ற காரணத்தினால் சீ ஹோக்ஸ் அணியின் முக்கிய வீரர்களான நாகூர் மீரா மற்றும் சாமுவெல் கிங்ஸ்டன் ஆகியோருக்கு இந்தப் போட்டியில் விளையாட முடியாமல் போனது.

ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் வீரர்கள் எதிரணியின் கோல் எல்லைக்கு செலுத்திய பந்து சீ ஹோக்ஸ் பின்கள வீரர் ஜேசுதாசனின் கையில் பட்டமையினால் புளூ ஸ்டார் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை ஜெர்ரி கோலாக்கி, ஆரம்பத்திலேயே அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதியில் சீ ஹோக்ஸ் வீரர்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக தனுஷ்க மதுசங்க, எதிரணி கோல் காப்பாளர் கவீஷ் இல்லாத நிலையில் பெற்ற பந்தை சிறப்பாக நிறைவு செய்ய தவறினார்.

போட்டியின் 70ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் அணியின் திசையில் இருந்து உயர்த்தி எதிரணியின் திசைக்கு செலுத்தப்பட்ட பந்தை சீ ஹோக்ஸ் பின்கள வீரர் ஷிகாரொ டிசிரொ தடுக்கத் தவறினார். அந்தப் பந்தைப் பெற்ற புளூ ஸ்டார் வீரர் செனால் சந்தேஷ் அதனை முன்னோக்கி எடுத்துச் சென்று கோல் காப்பாளரைத் தாண்டி கம்பங்களுக்குள் செலுத்தி இரண்டாவது கோலையும் பெற்றார்.

மீண்டும், புளூ ஸ்டார் அணிக்கு மாற்று வீரராக வந்த மொஹமட் ட்ராவாரேயை 85 நிமிடங்கள் கடந்த நிலையில் சீ ஹோக்ஸ் கோல் காப்பாளர் இஷான் முறையற்ற விதத்தில் வீழ்த்தியமையினால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை செனால் சந்தேஷ் கோலாக்கி, அணியை 3 கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

போட்டியின் முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் சீ ஹோக்ஸ் வீரர்கள் அதிகமான, இலகுவான கோல் வாய்ப்புக்களைப் பெற்ற போதும் அவற்றின்மூலம் பயன் பெறத் தவறினர்.

எனவே, போட்டி நிறைவில் 3-0 என வெற்றி பெற்ற புளூ ஸ்டார் அணி சுபர் லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீ ஹோக்ஸ் அணிக்கு இது இந்த தொடரில் முதல் தோல்வியாகும். எனினும், அவர்களும் 13 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

முழு நேரம்: புளூ ஸ்டார் வி.க 3 – 0 சீ ஹோக்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள்

  • புளூ ஸ்டார் வி.க – ஜெர்ரி ஒம்பெம்பெ 14′, செனால் சந்தேஷ் 71′ 88′(P)

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<