ஆகிப்பின் ஹெட்ரிக்குடன் டிபெண்டர்ஸை வீழ்த்திய கொழும்பு

Super League 2021

133

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற சுபர் லீக் உதைபந்தாட்ட தொடரின் ஆறாவது வாரத்திற்கான முதல் போட்டியில் மொஹமட் ஆகிப்பின் ஹெட்ரிக் கோலுடன் கொழும்பு கால்பந்து கழகம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தை வெற்றி கொண்டுள்ளது.

போட்டி ஆரம்பமாகிய சில நிமிடங்களுக்குள் டிபெண்டர்ஸ் வீரர்களுக்கு கிடைத்த கோணர் வாய்ப்பின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தினால் அவ்வணி வீரர்களுக்கு கோலுக்கான வாய்ப்பு கிடைத்த போதும் இறுதியில் பந்து கொழும்பு அணி வீரர்களால் கோலுக்கு அண்மையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

எனினும், மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்ற மொஹமட் ஆகிப், டிபெண்டர்ஸ் தடுப்பு வீரர்கள் அனைவரையும் தாண்டி பந்தை கோல் எல்லைவரை எடுத்துச் சென்று கோல் காப்பாளர் லுத்பியையும் தாண்டி பந்தை கோலுக்குள் செலுத்தி முதல் 10 நிமிடங்களுக்குள் கொழும்பு கால்பந்து கழகத்தை முன்னிலையடையச் செய்தார்.

அதன் பின்னர் முதல் பாதியில் கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் கொழும்பு அணியின் முன்னிலையுடன் sஇரண்டாம் பாதி ஆரம்பமானது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகிய சில வினாடிகளிலேயே, ஷமோத் டில்ஷான் எதிரணி வீரர்களின் கால்களில் இருந்து பறித்த பந்தின்மூலம் கொழும்பு அணி வீரர்கள் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் ஆகிப் அடுத்த கோலையும் பெற்றார்.

எனினும், ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் கொழும்பு கோல் காப்பாளர் இம்ரான் பந்தை தடுக்கும்போது எதிரணி வீரர் சஜித் குமாரவை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமையினால் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை ரிப்கான் மொஹமட் கோலாக்கினார்.

எனினும் தொடர்ந்து வேகமாக ஆடிய கொழும்பு கால்பந்து அணிக்கு 80வது நிமிடத்தில் மொஹமட் ஆகிப் அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்து தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார். மைதானத்தின் மத்தியில் இருந்து

வழங்கப்பட்ட பந்தை வேகமாக முன்னோக்கி சென்று பெற்ற ஆகிப் அதனை கோல் எல்லைவரை எடுத்துச் சென்று லுத்பியின் தடுப்பினைத் தாண்டி கம்பங்களுக்குள் செலுத்தினார்.

எனவே, போட்டி நிறைவில் 3-1 என வெற்றிபெற்ற கொழும்பு கால்பந்து கழகம் தமது 6 போட்டிகளின் நிறைவில் சுபர் லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. டிபெண்டர்ஸ் அணி தமது 6 போட்டிகளின் நிறைவில் 6 புள்ளிகளை மாத்திரம் பெற்று தரப்படுத்தலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா.க 1 – 3 கொழும்பு கா.க

கோல் பெற்றவர்கள்

டிபெண்டர்ஸ் கா.க – ரிப்கான் மொஹமட் 57’

கொழும்பு கா.க – மொஹமட் ஆகிப் 9’ 46’ & 80’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<