சுபர் லீக்கில் ரினௌன் அணிக்கு முதல் வெற்றி

Super League 2021

165

சுபர் லீக் கால்பந்து தொடரின் ஐந்தாம் வாரத்திற்கான முதல் போட்டியில் ரினௌன் விளையாட்டுக் கழகம் 1-0 என புளூ ஈகல்ஸ்  விளையாட்டு கழகத்தை வெற்றிகொண்டு, தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதேபோன்று, ஐந்தாம் வாரத்திற்கான ஒரு போட்டியாக அப்கண்ட்ரி லயன்ஸ் கால்பந்து கழகம் மற்றும் புளூ ஸ்டார் விளையாட்டுக் கழக அணிகளுக்கு இடையில் இடம்பெற இருந்த போட்டி சீரற்ற காலநிலை காரணமாக திகதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

புளூ ஈகல்ஸ் வி.க எதிர் ரினௌன் வி.க

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வெள்ளிக்கிழமை (10) மாலை ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டமும் கடந்த வாரத்தின் பல போட்டிகளைப் போன்றே கோல் வாய்ப்புக்கள் சிறந்த நிறைவின்றி வீணடிக்கப்பட்ட பாதி ஆட்டமாக அமைந்தது.

குறிப்பாக, இரண்டு அணிகளின் முன்கள வீரர்களுக்கும் கிடைத்த இலகுவான வாய்ப்புக்கள் அனைத்தும் கோல்கள் இல்லாமல் போக, முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்த நிமிடத்தில் இருந்தும் இரண்டு அணி வீரர்களும் எதிரணியின் கோல் திசையில் முதல் கோலுக்காக போராடினர்.

எனினும், போட்டியின் 60 நிமிடங்கள் கடந்த நிலையில், ரினௌன் வீரர் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தப் போட்டியில் புளூ ஈகல்ஸ் அணியின் கோல் காப்பாளராக செயற்பட்ட ஜன்சன திஸானாயக்க தனது எல்லையில் இருந்து வெளியே வந்து முயற்சித்தபோது அவரது கையில் பந்து பட்டது. எனவே, ரினௌன் வீரருக்கு எதிரான இறுதித் தடுப்பு வீரராக ஜன்சன இருந்தமையினால் நடுவர் அவருக்கு நேரடியாக சிவப்பு அட்டை காண்பித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.

அதன் பின்னர் 10 வீரர்களுடன் ஆடிய புளூ ஈகல்ஸ் அணிக்கு 70 நிமிடங்கள் கடந்த நிலையில் நெத்ம மல்ஷான் ஹெடர் மூலம் முதல் கோலைப் பெற்ற போதும், அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.

எனினும், அதே நிமிடத்தில் ஜூட் சுபன் வழங்கிய பந்தை மத்திய களத்தில் இருந்து பெற்ற முஜீப், அதனை எதிரணியின் கோல் எல்லைவரை கொண்டு சென்று உள்ளனுப்ப, அதனை ரினௌன் அணித் தலைவர் டிலிப் பீரிஸ் கோலாக்கினார்.

அதன் பின்னர் ஆட்ட நிறைவு வரையில் எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில், ஆட்டத்தில் 1-0 என வெற்றி பெற்ற ரினௌன் வீரர்கள் அங்குரார்ப்பண சுபர் லீக் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர். எனினும், இதுவரையில் புளூ ஈகல்ஸ் அணியினர் 5 வார போட்டிகள் முடிவுற்றுள்ள நிலையில் ஒரு வெற்றியையேனும் பெறவில்லை.

முழு நேரம்: புளூ ஈகவில்ஸ் வி.க 0 – 1 ரினௌன் வி.க

கோல் பெற்றவர்கள்

  • ரினௌன் வி.க – டிலிப் பீரிஸ் 74’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<