சீ ஹோக்ஸின் வெற்றி பறிப்பு; கொழும்பு, நியு யங்ஸிற்கு அபராதம்

Super League 2021

563
Super League 2021

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FSL) ஒழுக்காற்றுக் குழுவானது (Disciplinary and Ethics Committee) 2021ஆம் ஆண்டுக்கான சுபர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்ற போது மேற்கொள்ளப்பட்டிருந்த மூன்று புகார்கள் (Protests) தொடர்பிலான இறுதி முடிவுகளை வெளியிட்டிருக்கின்றது.

>> WATCH – பிரீமியர் லீக் வீரர்களுக்கு கொரோனா அச்சம் | FOOTBALL ULAGAM

நியூ யங்ஸ் கால்பந்து கழகம் கொழும்பு கால்பந்து கழகம் மீது மேற்கொண்ட பொருத்தமற்ற வீரர் தொடர்பிலான முறைப்பாடு

கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் நியூ யங்ஸ் கால்பந்து கழகம் என்பவற்றுக்கு இடையிலான மோதலின்போது, உள்நாட்டு வீரராக விளையாடிய கொழும்பு வீரர் முசாக்கிர் மொஹமட் ராசீக், முறையற்ற விதத்தில் உள்நாட்டு வீரராக பதிவு செய்யப்பட்டதாக நியூ யங்ஸ் அணியினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், நியூ யங்ஸ் கால்பந்து கழகத்தின் முறைப்பாடானது இரத்துச் செய்யப்படுவதோடு, போட்டியின் முடிவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் கால்பந்து வீரரான முசாக்கிர் மொஹமட் ராசீக்கிற்கு இலங்கை கால்பந்து சம்மேளன ஒழுக்காற்று விதிமுறைகள் சரத்து 45.1, 50.1.3, மற்றும் 34.1 இணை மீறியதற்கு அமைய இலங்கை நாணயப்படி ரூபா. 100,000 அபாராதமாக விதிக்கப்பட்டிருப்பதுடன், கொழும்பு கால்பந்து கழகத்திற்கும் சரத்துகள் 45.1, 50.2 மற்றும் 34.2 இற்கு அமைய ரூபா. 500,000 அபராதமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அப் கண்ட்ரி லயன்ஸ் கால்பந்து கழகம் சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் மீது மேற்கொண்ட பொருத்தமற்ற வீரர் தொடர்பிலான முறைப்பாடு (போட்டியின் நடுவே)

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் திகதி நடைபெற்ற சுபர் லீக் தொடரின் 17ஆவது போட்டியில் 28ஆம் மற்றும் 72ஆம் நிமிடங்களில் பொருத்தமற்ற வீரர் ஒருவருடன் சீ ஹோக்ஸ் கால்பந்து கழக அணி விளையாடியது உறுதி செய்யப்படுகின்றது. அதோடு இது சரத்து 21(II) இற்கு அமைவாக சீ ஹோக்ஸ் கால்பந்து கழக அணி 2021ஆம் ஆண்டுக்கான சுபர் லீக் தொடரின் அடிப்படை விதிமுறைகளை வேண்டுமென்றே மீறிய ஒரு சந்தர்ப்பமாகவும் பார்க்கப்படுகின்றது.

எனவே, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் திகதி நடைபெற்ற சுபர் லீக் தொடரின் 17ஆவது போட்டி முடிவு சீ ஹோக்ஸ் அணிக்கு தொடர் விதிமுறைகள் சரத்து 45.1 இன் அடிப்படையில்  செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டிருப்பதுடன், இப்போட்டியின் வெற்றியாளர்களாக அப் கண்ட்ரி லயன்ஸ் கால்பந்து அணி திருத்தியமைக்கப்பட்ட 3-0 என்கிற கோல்கள் முடிவுடன் அறிவிக்கப்படுகின்றது. அத்தோடு விதிமுறைகளை மீறியமைக்காக சீ ஹோக்ஸ் கால்பந்து அணிக்கு ரூபா. 10,000 அபாராதமாகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

>> ரெட் ஸ்டாரை வீழ்த்திய ரினௌன்; அப் கண்ட்ரி லயன்சிற்கு இறுதி நேர வெற்றி

எனினும், குறித்த போட்டியின் முடிவில் தனுஷ்க மதுசங்கவின் கோலினால் சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூ யங்ஸ் மற்றும் ரினௌன் அணிகள் விளையாடிய போட்டியினை அடுத்து நியூ யங்ஸ் மற்றும் அதன் உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பில் போட்டி மத்தியஸ்தர் வழங்கிய முறைப்பாடு

இந்த முறைப்பாட்டில் 09ஆம் இலக்க ஜேர்சியினை அணிந்திருந்த வீரரான U.S. தரிந்து தனுஷ்க ஒழுக்காற்று சரத்துகள் 38.1.1, 38.1.2 மற்றும் 58.4 ஆகியவற்றினை மீறியது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு அதற்கு தண்டனையாக அவருக்கு எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் விளையாடுவதற்கு போட்டித்தடை வழங்கப்படுகின்றது. இன்னும் தரிந்து தனுஷ்கவிற்கு ஒழுக்காற்று சரத்து 38.2 இன் அடிப்படையில் ரூபா. 25,000 அபராதமாகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

>> கொழும்பு திரில் வெற்றி; நியு யங்ஸை வீழ்த்திய ரினௌன்

இதேவேளை அணி முகாமையாளர் ரோஹித பெர்னாண்டோவும் ஒழுக்காற்று சரத்து 38.1.5 இணை மீறியது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, அவருக்கும் ஒழுக்காற்று சரத்து 38.2 இன் அடிப்படையில் ரூபா. 25,000 அபராதமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

இதோடு அபராதம் பெற்ற இருவருக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதோடு, அவர்களுக்கு போட்டித்தடை வழங்கப்பட்ட ஆட்டங்களில் எந்தவிதத்திலும் பிரசன்னமாகக் கூடாது என்றும் கட்டளை வழங்கப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<