ரெட் ஸ்டாரை வீழ்த்திய ரினௌன்; அப் கண்ட்ரி லயன்சிற்கு இறுதி நேர வெற்றி

Super League 2021

510
FFSL

சுபர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது வாரத்திற்கான இறுதி இரண்டு போட்டிகளிலும் ரினௌன் விளையாட்டுக் கழகம் ரெட் ஸ்டார் கால்பந்து கழகத்திற்கு எதிராக இலகு வெற்றியைப் பெற, அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் புளூ ஈகல்ஸ் அணிக்கு எதிராக போராடி, இறுதி நேரத்தில் வெற்றியை பதிவு செய்தள்ளனர்.

ரெட் ஸ்டார் கா.க எதிர் ரினௌன் வி.க

வெள்ளிக்கிழமை (17) மாலை குதிரைப் பந்தயத் திடலில் ஆரம்பமான இந்த போட்டியின் 15 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து பந்தை எடுத்துச் சென்ற ரினௌன் வீரர் ஜூட் சுபன் கோல் எல்லையின் வலது திறையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை அவ்வணியின் தலைவர் டிலிப் பீரிஸ் அழகாக கோலுக்குள் ஹெடர் செய்து போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

மீண்டும், 35ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் வீரர் சுபுன் தனன்ஜய ரிளெனன் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டமையினால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரஹ்மான் கோலாக்கினார். இதனால், ரஹ்மான் சுபர் லீக் தொடரில் தனது ஏழாவது கோலைப் பதிவுசெய்து, அதிக கோல் பெற்றவராக தொடர்ந்தும் நீடிக்கின்றார்.

தலா ஒரு கோல்களுடன் ஆரம்பமான இரண்டாவது பாதியின் 10 நிமிடங்களுக்குள் ரினௌன் வீரர்கள் மேற்கொண்ட கவுண்டர் அட்டாக்கின் நிறைவில் அமான் பைசர் அந்த அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றார்.

மீண்டும் போட்டியின் உபாதையீடு நேரத்தில் ரெட் ஸ்டார் வீரர்களிடமிருந்து பந்தைப் பறித்த அமான், அதனை ஜொப் மைக்கலுக்கு வழங்கினார். மைக்கல் மீண்டும் அதனை முஜீபிடம் வழங்க, அவர் அதனை கோலாக்கினார்.

எனவே, போட்டி நிறைவில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற ரினௌன் வீரர்கள் அடுத்தடுத்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர். கடந்த இரண்டு போட்டிகளிலும் முன்னிலையில் இருந்து இறுதித் தருவாயில், ஆட்டத்தை சமநிலையில் முடித்த ரெட் ஸ்டார் வீரர்கள் இந்த தோல்வியினால் தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முழு நேரம்: ரெட் ஸ்டார் கா.க 1 – 3 ரினௌன் வி.க

கோல் பெற்றவர்கள்

  • ரெட் ஸ்டார் கா.க – மொஹமட் ரஹ்மான் 35’(P)
  • ரினௌன் வி.க – டிலிப் பீரிஸ் 16’, அமான் பைசர் 55’, மொஹமட் முஜீப் 90+2’

அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க எதிர் புளூ ஈகல்ஸ் கா.க

வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில், தொடரில் இதுவரையில் எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யாத புளூ ஈகல்ஸ் வீரர்கள் சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர். பலம் மிக்க அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்களால் கோலுக்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியாமல் போனது. எனவே, முதல் பாதி ஆட்டம் கோல்கள் இன்றி நிறைவடைந்தது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்களின் பின்னர் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரரை கோல் எல்லைக்கு வெளியில் வந்து முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக புளூ ஈகல்ஸ் கோல் காப்பாளர் ருவன் அருனசிறி சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய புளூ ஈகல்ஸ் அணிக்கு அவ்வணியின் பின்கள வீரர் ஜீவன்த பெர்னாண்டோ மாற்று வீரராக வந்து கோல் காப்பாளராக செயற்பட்டார்.

குறித்த முறையற்ற ஆட்டத்தின்போது கிடைக்கப்பெற்ற பிரீ கிக் வாய்ப்பை அவ்வணி வீரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த தவறினர்.

எனினும், போட்டியின் உபாதையீடு நேரத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையில் தொடர்ந்து மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகளின் நிறைவில், மொஹமட் சிபான் அவ்வணிக்கான வெற்றி கோலைப் பெற்றார்.

எனவே, ஆட்ட நிறைவில் 1-0 என வெற்றி பெற்ற அப் கண்ட்ரி லயன்ஸ் அணி சுபர் லீக் தரப்படுத்தலில் 3 வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையுடன் 10 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளனர். புளூ ஈகல்ஸ் எந்தவொரு வெற்றியும் இல்லாமல் ஒரே ஒரு சமநிலை மற்றும் 5 தோல்விகளுடன் தரப்படுத்தலில் இறுதி இடத்தில் உள்ளது.

முழு நேரம்: அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க 1 – 0 புளூ ஈகல்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள்

  • அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க – மொஹமட் சிபான் 90+5′

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<