களை கட்டவிருக்கும் இலங்கையின் சுபர் லீக் கால்பந்து திருவிழா

136
 

இலங்கையின் முதலாவது உள்ளூர் தொழில்முறைக் கால்பந்து தொடரான சுபர் லீக் கால்பந்து தொடர், நாளை (18) கொழும்பு சுகததாச அரங்கில் ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) இலங்கையின் கால்பந்து வரலாற்றில் ஒரு மைல்கல்லை உருவாக்கும் வகையில் ஒழுங்கு செய்துள்ள சுபர் லீக் கால்பந்து தொடர், இலங்கையின் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக நோக்கப்படுகின்றது.  

கால்பந்து நடுவர்களுக்கான தொடர்பாடல் உபகரணங்கள் கையளிப்பு

அங்குரார்ப்பண சுபர் லீக் கால்பந்துத் தொடர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள  கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் பிரதான கால்பந்து தொடராக மாற இருக்கின்றது. 

சர்வதேச நியமங்களுக்கு அமைய சுபர் லீக் கால்பந்து தொடருக்காக பத்து உயர்மட்ட கழகங்கள் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கழகங்களுக்கான சான்றிதலைப் (Club Licence) பெற்றிருக்க வேண்டும். அதன்படி, இந்த தொடருக்கு தெரிவாகியுள்ள அணிகள். 

ப்ளு ஈகிள்ஸ் கா.க, ப்ளு ஸ்டார் வி.க, கொழும்பு கா.க, டிபெண்டர்ஸ் கா.க, நியூ யங்ஸ் கா.க, ரத்னம் வி.க, ரெட் ஸ்டார்ஸ் கா.க, ரினௌன் வி.க, சீ ஹோக்ஸ் கா.க, அப் கன்ட்ரி லயன்ஸ் கா.க

இந்த கால்பந்து தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட பத்து விளையாட்டுக் கழகங்களுக்கும் 2020 ஆம் ஆண்டு முதல் பரவிய கொவிட் 19 வைரஸ் காரணமாக போதிய பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியிருந்தது. எனினும், இதற்கு தீர்வு வழங்கும் வகையில் இலங்கை கால்பந்து சம்மேளனம் சுபர் லீக் தொடரின் முன் பருவத் தொடரினை ஒழுங்கு செய்து அனைத்து அணிகளுக்கும் இந்த தொடருக்கு தயாராகும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திருந்தது. 

சுபர் லீக் போட்டி அட்டவணை வெளியானது: தொடர் முகாமையாளராக ரஹ்மி

சுபர் லீக் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் யூ டியுப் செனல் மூலமும் (Football Sri Lanka TV YouTube Channel), TV 1 ஊடாகவும் ஒளிபரப்பப்படும். 

இலங்கையின் முதலாவது தொழில்சார் கால்பந்து லீக் என்ற  காரணத்தினால், அங்குரார்ப்பண சுபர் லீக் தொடருக்காக அணிகள் தங்களுடைய கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜப்பான், மொரோக்கோ, ஐவரி கோஸ்ட் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை தமது குழாத்தில் உள்வாங்கியுள்ளன.  

இந்த சுபர் லீக் கால்பந்து தொடர் வணிக மற்றும் பொருளாதார நன்மைகளுடன் தொழில்சார் கால்பந்து துறையில்  காலடி எடுத்துவைத்திருப்பதால், அது இலங்கையில்  கால்பந்து விளையாட்டு அபிவிருத்திக்கும், தேசிய அணியின் வளர்ச்சிக்கும், பங்கேற்கும்  சகல கழகங்களது அபிவிருத்திக்கும் பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அங்குரார்ப்பண சுபர் லீக் தொடரில் மொத்தம் 45 போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு, ஒவ்வொரு அணிகளும் ஏனைய அனைத்து அணியுடனும் தலா ஒரு முறை மோதவுள்ளன. எனவே, ஒரு அணிக்கு 9 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. பின்னர், போட்டி முடிவுகளின் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணி சுபர் லீக் தொடரின்  சம்பியனாக முடிசூடிக் கொள்ளும். 

Video – சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் 2 இங்கிலாந்து கழகங்கள் | FOOTBALL ULAGAM

இந்த கால்பந்து தொடரில் பங்கேற்கும் சகல கழகங்களுக்கும் பரிசுத்  தொகை வழங்கிவைக்கப்படும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் தாம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. அந்தவகையில், தொடரின் சம்பியன் அணிக்கு 5 மில்லியன் ரூபாயும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 3.5 மில்லியன் ரூபாயும்,  3ஆவது இடத்திற்கு 2.75 மில்லியன் ரூபாயும், 4ஆவது இடத்திற்கு 2.5 மில்லியன் ரூபாயும், 5ஆவது  இடத்திற்கு 2.25 மில்லியன் ரூபாயும், 6ஆவது இடத்திற்கு 2 மில்லியன் ரூபாயும், 7ஆவது இடத்திற்கு 1.75 மில்லியன் ரூபாயும், 8ஆவது இடத்திற்கு 1.5 மில்லியன் ரூபாயும், 9ஆவது இடத்திற்கு 1.25 மில்லியன் ரூபாயும்,  10 ஆவது இடத்திற்கு ஒரு மில்லியன் ரூபாயும் வழங்கி வைக்கப்படவுள்ளன.   

இந்த கால்பந்து தொடருக்காக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிபோது கருத்து தெரிவித்த, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா, 

‘‘இலங்கையில் முதன் முதலில் நடைபெறவுள்ள தொழில்சார் கால்பந்து லீக் போட்டியானது நாட்டின்  உயர்மட்ட கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான தளத்தை  உருவாக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். இந்தப் போட்டித் தொடரை ஒரு சிறந்த  செயற்றிட்டமாகத் தொடங்குவதற்கு அங்கீகாரமளித்தமைக்கும், போட்டித் தொடரின்  முதல் இரண்டு தொடர்களுக்கு பெருமளவில் நிதியளித்தமைக்கும் சர்வதேச கால்பந்து  சம்மேளனத்திற்கு நன்றி தெரிவிக்கின்றோம். 

நீண்ட காலமாக விளையாட்டு வீரர்கள்,  பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் எதிர்பார்ப்பில், ஒரு பெரிய தொகை கால்பந்து  சம்மேளனத்தினால் முதலீடு செய்யப்படும். முதல் இரண்டு போட்டித் தொடர்களின்  பங்குதாரர்களாக தகுதிபெற்ற 10 கழகங்கள் 19 ஏப்ரல் முதல் களத்தில் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளதுடன், மைதானத்திலும் அதற்கு வெளியிலும் சிறந்த முறையில் விளையாடுவதால் 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட்  வரை சிறந்த கால்பந்து தொடர் ஒன்றை பார்க்க முடியும் என நான் நம்புகின்றேன்.’’ 

டயலொக் கடற்கரை கால்பந்து: நாளை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்

இந்த செயற்றிட்டத்திற்கு சாதகமாக பங்களிப்புச் செய்த அனைத்துக்  கழகங்களுக்கும் ஏனைய அணிகளுக்கும் இலங்கை கால்பந்து சம்மேளனம் நன்றி  செலுத்துவதுடன், ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளின் கீழ் போட்டித் தொடரினை பார்ப்பதற்கு வருகை தரும் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலை  ஊடாக பார்த்து ரசிக்கின்ற ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெறுகின்றவகையில்  தொழில்நுட்ப ரீதியாக சிறந்த கால்பந்து போட்டியை காண்பிப்பதற்காக நாம் சகல  அணிகளுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 

இந்த நிகழ்வை உண்மையாக்குவதற்கு பல வழிகளில் வழங்கிய ஆர்வத்திற்கும்  உதவிகளுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி கூறுவதுடன், சுபர்  லீக் 2021 கால்பந்து தொடரில் உள்ள சகல அணிகளுக்கும்,  வீரர்களுக்கும், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எமது  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.’’ என்றார். 

அதேநேரம், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் இந்த தொடர் பற்றி கருத்து தெரிவிக்கையில், ‘‘இலங்கையின் முதலாவது தொழில்சார் லீக் போட்டித்தொடராகிய, சுபர் லீக்கின்  அங்குரார்ப்பண வைபவத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடர்  வடிவமைப்பானது, இலங்கையின் கால்பந்து விளையாட்டில் ஒரு புதிய புரட்சியினை உருவாக்கும். கடந்த மூன்று ஆண்டுகளில் சூப்பர் லீக் போட்டித் தொடர் வடிவமைப்பில் பிரதான  பாத்திரமேற்று செயற்பட்டமையையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்’’ என்றார்.   

நாளை தொடங்கும் சூப்பர் லீக் தொடரின் போட்டிகள் 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 8 ஆம் திகதி  நிறைவடையவிருப்பதோடு தொடரின் அனைத்துப் போட்டிகளும் சுகததாஸ விளையாட்டரங்கில் மாத்திரமே நடைபெறும்.

மேலும் கால்பந்து செய்திகளுக்கு…