சுபர் லீக் போட்டி அட்டவணை வெளியானது: தொடர் முகாமையாளராக ரஹ்மி

521

இலங்கை கால்பந்து சம்மேளனம் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ள கன்னி தொழில்முறை கால்பந்து தொடரான சுபர் லீக் 2021 தொடர் இம்மாதம் (ஏப்ரல்) 19ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 

இலங்கையின் 10 முன்னணி கால்பந்து கழகங்கள் பங்குகொள்ளும் இந்த தொடரின் போட்டிகள் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. போட்டிகள் அனைத்தும் கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெறவுள்ளன.  

ரினௌன், அப் கண்ட்ரி லயன்ஸ் அணிகளுக்கு த்ரில் வெற்றி

இம்மாதம் 19ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ள தொடரின் முதல் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் நியு யங்ஸ் கால்பந்து கழகங்கள் ஆகியவை மோதவுள்ளன. அதே தினம் இரவு 7.30 இற்கு இடம்பெறும் அடுத்த மோதலில் புளு ஸ்டார் விளையாடுக் கழகம், ரெட் ஜ்டார்ஸ் கால்பந்து கழகத்தை எதிர்த்தாடவுள்ளது. 

தொடரின் முதல் 3 வாரங்களுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், மே மாதம் இரண்டாம் திகதி முதல் ஜுலை மாதம் இரண்டாம் திகதி வரை தேசிய அணியின் பயிற்சிகள் மற்றும் பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் என்பவற்றுக்காக சுபர் லீக் மோதல்களுக்கு ஒரு இடைவேளை வழங்கப்படும். 

அதேபோன்று, தொழில்முறைக் கால்பந்தை இலங்கையில் ஆரம்பிக்கும் முதல்கட்ட முயற்சியாக இடம்பெறவுள்ள கன்னி சுபர் லீக்கின் பொது முகாமையாளராக மொஹமட் ராமி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஹ்மி இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மனித வளங்கள் மற்றும் AFC கழக உரிமங்களுக்கான முகாமையாளராக (Human Resources & Club Licensing Manager) தற்போது கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும், சுபர் லீக் தொடரைப் பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது மூடிய அரங்கில் போட்டிகள் இடம்பெறுமா என்பது குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனம் இன்னும் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. 

சுபர் லீக் பிரதான தொடருக்கான முதல் கட்ட தயார்படுத்தலுக்காக அனைத்து அணிகளும் கடந்த இரண்டு மாதங்களாக முன் பருவப் போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சுபர் லீக் போட்டி அட்டவணை 

>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<