ரினௌனை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்ற கொழும்பு

Super League 2021

147

சுபர் லீக் கால்பந்து தொடரில் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட கொழும்பு கால்பந்து கழகம் தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.  

டிபெண்டர்ஸ் கா.க எதிர் அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க 

இன்றைய முதல் ஆட்டமாக மாலை சுகததாச அரங்கில் இடம்பெறவிருந்த இந்தப் போட்டிக்கு முன்னர்  மேற்கொள்ளப்பட்ட ரபிட் அண்டிஜன் பரிசோதனையின்போது இன்றைய போட்டியில் விளையாடவிருந்த வீரர்கள் மற்றும் அணி அதிகாரிகள் சிலர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டமையினால் இந்தப் போட்டி உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. 

கொழும்பு கா.க எதிர் ரினௌன் வி.க

இன்று இரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் மோதிய கொழும்பு கால்பந்து கழகம், இதற்கு முன்னர் ஒரு வெற்றியையும் ஒரு தோல்வியையும் சந்தித்திருந்தது. ரினௌன் அணி ஒரு சமநிலையான முடிவு மற்றும் ஒரு தோல்வியை பெற்றிருந்தது. 

இலகு வெற்றியை சுவைத்த புளூ ஸ்டார், ரெட் ஸ்டார்ஸ் அணிகள்

இந்தப் போட்டியின் 34ஆவது நிமிடத்தில் மொஹமட் ஆகிப் கோல் பெட்டியினுள் எடுத்து வந்து பரிமாற்றம் செய்த பந்தை சர்வான் ஜோஹர் கம்பங்களுக்குள் செலுத்தி கொழும்பு அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

அதற்குப் பதிலாக 43ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் திலிப் பீரிஸ் வழங்கிய பந்தைப் பெற்ற அமான் பைசர் ரினௌன் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். 

மீண்டும், இரண்டாவது பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்களில் ஆகிப் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின் மூலம் மொமஸ் யாபொ கொழும்பு அணிக்கான இரண்டாவது கோலையும் பெற்றார். 

தொடர்ந்த  ஆட்டத்தின் 78ஆவது மற்றும் 82ஆவது நிமிடங்களில் ரினௌன் அணியின் ப்ரன்சிஸ் மற்றும் ஜுட் சுமன் ஆகியோர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட, அவ்வணி 9 வீரர்களுடன் அடுத்த கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டது. 

எனினும், கொழும்பு அணி வீரர்கள் எதிரணியின் முயற்சிகள் அனைத்தையும் இலகுவாக தடுத்தாட, ஆட்டம் நிறைவில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு கால்பந்து கழகம் வெற்றி பெற்று இந்த தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. ரினௌன் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். 

முழு நேரம்: கொழும்பு கா.க 2 – 1 ரினௌன் வி.க  

கோல் பெற்றவர்கள் 

  • கொழும்பு கா.க – சர்வான் ஜோஹர் 34‘, மொமஸ் யாபோ 50‘
  • ரினௌன் வி.க –  அமான் பைசர் 34‘ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<