சுபர் லீக் சம்பியன் கிண்ணத்துடன் 5 மில்லியனை பெற்ற புளூ ஸ்டார்

Super League 2021

225
 

இலங்கையின் அங்குரார்ப்பண சுபர் லீக் கால்பந்து தொடரில் சம்பியனாகத் தெரிவாகிய புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு தொடரின் சம்பியன் கிண்ணமும், சம்பியனுக்கான 5 மில்லியன் ரூபாய் பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ”கால்பந்து விருது வழங்கும் விழா 2021” நிகழ்வு நேற்று (20) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மொனார்ச் இம்பீரியல் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போது சுபர் லீக், இலங்கை தேசிய அணி, முன்னாள் தேசிய அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, கடந்த வருடம் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது தொழில்முறை கால்பந்து தொடரான சுபர் லீக் தொடரில் பங்கேற்ற, வெற்றி பெற்ற அணிகள் மற்றும் திறமைகளை காண்பித்த வீரர்கள் மற்றும் சிறந்த நடுவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில், லீக்கின் நிறைவில் 9 போட்டிகளில் 7 வெற்றிகள், ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் 22 புள்ளிகளைப் பெற்ற களுத்துறை புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சுபர் லீக் கன்னிக் கிண்ணத்துக்கு சொந்தக்காரரானது. இந்நிலையில், குறித்த வெற்றிக் கிண்ணத்துடன் சம்பியன் அணிக்கான பணப் பரிசுத் தொகையான 5 மில்லியன் ரூபாயும் நேற்றைய நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் புளூ ஸ்டார் அணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஏனைய அணிகளுக்கான பணப் பரிசுத் தொகை

2ஆம் இடம் – சீ ஹோக்ஸ் கா.க – 3.5 மில்லியன் ரூபாய்

3ஆம் இடம் – கொழும்பு கா.க – 2.75 மில்லியன் ரூபாய்

4ஆம் இடம் – ரினௌன் வி.க – 2.5 மில்லியன் ரூபாய்

5ஆம் இடம் – அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க – 2.25 மில்லியன் ரூபாய்

6ஆம் இடம் –  ரெட் ஸ்டார் கா.க – 2 மில்லியன் ரூபாய்

7ஆம் இடம் – டிபெண்டர்ஸ் கா.க – 1.75 மில்லியன் ரூபாய்

8ஆம் இடம் – நியூ யங்ஸ் கா.க – 1.5 மில்லியன் ரூபாய்

9ஆம் இடம் – ரட்னம் வி.க – 1.25 மில்லியன் ரூபாய்

10ஆம் இடம் – புளூ ஈகல்ஸ் வி.க – ஒரு மில்லியன் ரூபாய்

அதேபோன்று, சுபர் லீக் தொடரில் சிறந்த திறமைகளை காண்பித்த தனிப்பட்ட வீரர்களுக்கான விருதுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. இதில் இளம் வீரர்கள் அதிகமாக விருதுகளை வென்றமை விஷேட அம்சமாகும்.

தங்கப் பாதணி (அதிக கோல் பெற்றவர்)

புளூ ஸ்டார் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இளம் வீரர் செனால் சந்தேஷ் இம்முறை மொத்தமாக 10 கோல்களைப் பெற்று, தொடரில் அதிக கோல்களைப் பெற்ற வீரருக்கான தங்கப் பாதணியை வென்றார்.

தங்க கையுறை (சிறந்த கோல் காப்பாளர்)

தொடரில் சிறந்த தடுப்பாட்டத்தை மேற்கொண்டு தொடர் முழுவதும் எதிரணிகளுக்கு மொத்தமாக 11 கோல்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து, தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சீ ஹோக்ஸ் அணியின் கோல் காப்பாளர் உதயங்க பெரேரா தங்க கையுறையை வென்றார்.

இளம் வீரரான உதயங்க பெரேரா தான் விளையாடிய 8 போட்டிகளில் 4 கிளீன் சீட்களை (எதிரணிக்கு எந்தவொரு கோலையும் கொடுக்காமல்) பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் வீரர்

தொடரின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை புளூ ஸ்டார் அணியின் மற்றொரு இளம் வீரரான மொஹமட் இஹ்சான் வென்றெடுத்தார். 17 வயதுடைய வீரரான இவர் தொடரில் 3 கோல்களைப் பெற்ற அதேவேளை, அவ்வணிக்கான பல கோல்களுக்கான உதவிகளையும் வழங்கியுள்ளார்.

தொடரின் சிறந்த பயிற்றுவிப்பாளர்

இந்த தொடரில் அதிகமான இளம் வீரர்களைக் கொண்ட குழாத்தினை வைத்து பலமான அணிகளை வீழ்த்தி தொடரின் சம்பியன் பட்டத்தை வென்ற புளூ ஸ்டார் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ராஜமணி தேவசகாயம், தொடரின் சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதை வென்றார்.

இதேவேளை, தொடரில் சிறந்த நடுவருக்கான விருதை தரங்க புஷ்பகுமார வென்ற அதேவேளை, தொடரில் சிறந்த விளையாட்டு பண்புகளுடன் (Fair Play) ஆடிய அணிக்கான விருதை டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் வென்றெடுத்தது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<