இந்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணம் மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் ஆகிய இரண்டு போட்டித் தொடர்களையும் இலக்காகக் கொண்டு 26 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணிக் குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த வீரர்களுக்கு வதிவிட பயிற்சி முகாம் ஒன்றை இன்று (09) முதல் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை இளையோர் அணி
எனவே, 22 நாட்களைக் கொண்ட இந்த வதிவிட பயிற்சி முகாமானது உயிரியல் பாதுகாப்பு வலயத்தின் கீழ் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அத்துடன், பயிற்சிகளின் முடிவில் வீரர்களிடையே 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டியை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாடளாவிய ரீதியில் இருந்து 75 திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் ஆரம்ப கட்டமாக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கு கடந்த ஜுன் மாதம் 21 நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சி முகாமொன்று கண்டியில் நடத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களின் ஆலோசனைக்கமைய 26 பேர் கொண்ட இறுதிக் குழாம் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்சியாளர்கள் விபரத்தையும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பயிற்சியாளரானார் அவிஷ்க
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன செயல்படவுள்ளதுடன், வேகப் பந்தவீச்சுப் பயிற்சியாளராக சமில கமகே, சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சஜித் பத்திரன, களத்தடுப்பு பயிற்சியாளராக உபுல் சந்தன மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளராக தம்மிக சுதர்ஷன ஆகியோர் செயல்படவுள்ளனர்.
அத்துடன், இவர்களது மேற்பார்வையின் கீழ் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி வீரர்களுக்கான வதிவிட பயிற்சி முகாம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 23 பேர் பங்குபற்றுகின்ற வதிவிட பயிற்சி முகாம் இன்று முதல் (09) நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜிம்பாப்வேயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி இன் பெண்களுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகைளை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகின்ற இந்தப் பயிற்சி முகாமானது கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் உயிரியல் பாதுகாப்பு வலையத்தின் கீழ் நடைபெறவுள்ளது.
இலங்கையில் பெண்களுக்கான சர்வதேச T-20 லீக் தொடர்
இதனிடையே, இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை வளர்ந்துவரும் அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்குபற்றுகின்ற இந்த வதிவிட பயிற்சி முகாமின் முடிவில் பயிற்சிப் போட்டிகளை நடத்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை பெண்கள் அணியின் பயிற்சியாளர் ஹஷான் திலகரட்ன, வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ரவீந்திர புஷ்பகுமார, களத்தடுப்பு பயிற்சியாளர் லங்கா த சில்வா மற்றும் சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளர் தினுக் ஹெட்டிஆராச்சி ஆகியோரது மேற்பார்வையின் கீழ் இந்த வதிவிட பயிற்சி முகாம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…