மீண்டும் பெனால்டியில் வீழ்ந்த ஹமீத் அல் ஹுசைனி : இறுதிப் போட்டியில் ஜோசப் கல்லூரி

597
St Joseph vs Hameed Al Husseinie

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணியை பெனால்டியில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்தியதன்மூலம் புனித ஜோசப் கல்லூரி அணி பாடசாலை கால்பந்து அணிகள் பங்குபற்றும் 19 வயதிற்கு உட்பட்ட டிவிஷன் I கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

ஹமீட் அல் ஹுசைனி, திருச் சிலுவைக் கல்லூரிகள் அரையிறுதிக்கு தெரிவு : ஸாஹிரா வெளியேற்றம்

நடைபெற்று முடிந்த குழு மட்டப் போட்டிகளில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி B குழுவில் முதல் இடத்தையும், புனித ஜோசப் கல்லூரி A குழுவில் இரண்டாம் இடத்தையும் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகின.

டிவிஷன் I கால்பந்து தொடரில் கடந்த முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியமை மற்றும் இவ்வருடம் பல தொடர்களில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியமை போன்ற காரணங்களினால் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி சற்று பலம் பொருந்திய அணியாகக் கருதப்பட்டது.

முதலாவது அரையிறுதி போன்றே இந்த போட்டியும் 80 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டிருந்தது. போட்டி ஆரம்பமாகி 3ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி வீரர்களுக்கு கோல் பெறுவதற்கான சிறந்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனினும் இறுதி தருவாயில் அது ஜோசப் கல்லூரியின் கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.

பின்னர் 9ஆவது நிமிடத்தில் ஜோசப் கல்லூரிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. அந்த உதையின்போது வந்த பந்தை மிகவும் சிறந்த முறையில் சசிந்த மதுரங்க தலையால் அடித்தார். கம்பங்களுக்குள் செல்ல இருந்த பந்தை ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பின்கள வீரர் ஒருவர் சிறந்த முறையில் தடுத்தார்.

அதன் பின்னர் 19ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணிக்கு பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் இருந்து ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அதன்போது அவ்வணி வீரர் உதைந்த பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.

மீண்டும், 25ஆவது நிமிடத்தில் அணித்தலைவர் அமான் அழகாக செலுத்திய உதையின்மூலம் சக வீரர் இஷானுக்கு இலகுவாக கம்பங்களுக்குள் பந்தை செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதனையும் அவர் சரியாக பயன்படுத்தவில்லை.

நடப்புச் சம்பியனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது திருச் சிலுவைக் கல்லூரி அணி

அதேபோன்று, புனிதs ஜேசப் அணிக்கான சிறந்த ஒரு வாய்ப்பாக, 30ஆவது நிமிடத்தில், அவ்வணி வீரர் நிமேஷ் சாலிந்த சிறந்த முறையில் பந்தை பெனால்டி பெட்டி வரையில் கொண்டு சென்றார். எனினும் அவரது இறுதி உதை கோல் கம்பங்களுக்கு வெளியில் சென்றதால் அந்த சிறந்த வாய்ப்பும் வீணானது.

முதல் பாதி: ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி (00) – (00) புனித ஜோசப் கல்லூரி

எஞ்சிய 40 நிமிடங்களில் இரு அணிகளின் விறுவிறுப்பும், அபார ஆட்டமும், தாம் இறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டும் என்பதில் இருந்த அவாவை ரசிகர்களுக்குக் காட்டியது. இரு தரப்பும் மிகவும் உத்வேகத்துடன் இரண்டாம் பாதி ஆட்டத்தை விளையாடினர்.

இரண்டாவது பாதியின் முதல் 10 நிமிடங்களிலும் இரு தரப்பினரும் சம அளவிலான பலத்துடனும், அதேவேளை சம அளவிலான வாய்ப்புக்களைப் பெற்றும் விளையாடினர்.

எனினும் 52ஆவது நிமிடத்தில், ஹமீத் அல் ஹுசைனி அணியின் பின்கள வீரர்களைக் கடந்து சிறந்த முறையில் பந்தை கொண்டுசென்ற அசேல மதுஷான் கோலுக்குள் அடித்த பந்து கம்பங்களில் பட்டு எதிர்திசைக்கு சென்றது.

மதுஷான் அதேபோன்ற மற்றொரு வாய்ப்பை மீண்டும் 60ஆவது நிமிடத்தில் பெற்றார். எனினும் இம்முறை அவரது கோல் இலக்கு சிறந்த முறையில் இருக்கவில்லை.

இவ்வாறு பல வாய்ப்புக்களை ஜோசப் கல்லூரி வீரர்கள் பெற்றதன் பின்னர், போட்டியில் 62 நிமிடங்கள் கடந்தவுடன் கோல்களைப் பெறும் வாய்ப்புக்கள் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணியின் பக்கம் திரும்பியது.

அவர்களது மத்தியகள வீரர்களின் சிறந்த பந்து பரிமாற்றத்தினால், எதிரணியின் பின்கள வீரர்களுக்கு கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அவர்களால் அந்த வாய்ப்புக்களின் மூலம் வெற்றி கோலைப் பெற முடியாமலே போனது.

முழு நேரம்: ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி (00) – (00) புனித ஜோசப் கல்லூரி

போட்டி நிறைவடையும்வரை கோல்கள் எதுவும் இன்றி போட்டி சமநிலையானமையினால் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக பெனால்டி உதை வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதலாவது பெனால்டி உதையை ஹமீத் அல் ஹுசைனி வீரர் சாஜித் தனது வழக்கமான பாணியில் கம்பங்களுக்குள் உதைந்தார் (1-0).

சஷிந்ர மதுரங்கவும் ஜோசப் அணி சார்பாக முதல் பெனால்டியை கோலாக்கினார் (1-1).

அணித்தலைவர் அமானின் உதையும் எந்த தடையும் இன்றி கம்பங்களுக்குள் சென்றது (2-1).

சாலிந்ரவும் தன் பங்கிற்கு தனது உதையை கோலாக்கினார் (2-2).

பின்னர் கரீம் பாசில் மின்னல் வேகத்தில் உதைய ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் கோல் எண்ணிக்கை அதிகரித்தது (3-2).

அசேல மதுஷானும் குறி தவறாமல் கோளுக்குள் பந்தை செலுத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது (3-3)

எனினும் ரிஷானின் உதை கம்பங்களுக்கு வெளியே செல்ல, ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் வெற்றி சந்தேசகத்திடமானது (3-3)

மறுமுனையில் ஜோசப் கல்லூரியின் அடுத்த பெனால்டி கோலை ஷமத் ரஷ்மித சிறந்த முறையில் பெற்றுக்கொடுத்தார் (3-4)

தமது அணிக்கான இறுதி வாய்ப்பை தவறவிட்ட ஹமீத் அல் ஹுசைனி வீரர் சந்தருவன், தனது உதையை கம்பங்களுக்கு வெளியே உதைய புனித ஜோசப் கல்லூரி வீரர்களும், ரசிகர்களும் அரையிறுதி வெற்றியை சுவைத்தனர். (3-4)

Thepapare.com இன் ஆட்ட நாயகன் : மயுரக பெரேரா (புனித ஜோசப் கல்லூரி)

போட்டியின் பின்னர் thepapare.com இடம் கருத்து தெரிவித்த புனித ஜோசப் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் சம்பத் ”இன்றைய போட்டியில் இரு அணிகளும் மிகவும் சிறப்பாக விளையாடின. புனித ஜோசப் மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த போட்டியை நாம் தோல்வியுற்றமையினால் எமக்கு பாரிய சவால் இருந்தது. எனினும் இன்றைய போட்டியில் எமது வீரர்கள் அவற்றை இல்லாமல் செய்யும் அளவுக்கு சிறப்பாக விளையாடினர்” என்றார்.

தீர்க்கமான அரையிறுதியின் தோல்வி குறித்து ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் எம்மிடம் கருத்து தெரிவிக்கும்பொழுது, ”இன்றைய போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. இறுதியில் சிறப்பாக செயற்பட்ட புனித ஜோசப் வெற்றியைப் பெற்றுள்ளது. போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே எமது கோல் வாய்ப்பு தவறவிடப்பட்டமை போட்டியின் திருப்புமுனையாக இருந்தது. எமது வீரர்கள் சிறந்த உடற்தகுதியுடன் இருக்கவில்லை. எனினும் இன்று எமது இறுதிப் போட்டி என்று நினைத்து விளையாடினோம். எனினும் பெனால்டி என்பது எந்த முடிவையும் தரும் என்பது யாரும் அறிந்ததே” என்று குறிப்பிட்டார்.

இவ்வருடம் இடம்பெற்ற கொத்மலே கிண்ண காலிறுதியிலும் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணி, யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியிடம் பெனால்டியில் தோல்வியுற்றமை நினைவு கூறத்தக்கது.

இன்றைய வெற்றியின் மூலம் புனித ஜோசப் கல்லூரி அணி, புதன்கிழமை இடம்பெறவுள்ள கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் களுத்துறை திருச் சிலுவைக் கல்லூரியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இறுதிப் போட்டி மற்றும் அதேதினம் இடம்பெறும் மூன்றாம் இடத்திற்கான போட்டி என்பவற்றை நேரடியாகப் பார்வையிடுவதற்கும், அவைகுறித்த தகவல்களைப் பெறுவதற்கும் thepapare.com உடன் இணைந்திருங்கள்.