IPL தொடரின் சம்பியனாக முடிசூடியது குஜராத் டைட்டண்ஸ்!

Indian Premier League 2022

122

IPL தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டண்ஸ் அணி சம்பியனாக முடிசூடியுள்ளது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் ஏமாற்றமளிக்க, முழுமையாக தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

நுவனிதுவின் கன்னி T20 சதத்தால் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

குறிப்பாக குஜராத் டைட்டண்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா அற்புதமாக பந்துவீசியிருந்ததுடன், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான ஜோஸ் பட்லர், சஞ்சு சம்சன் மற்றும் ஷிம்ரொன் ஹெட்மையர் ஆகிய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சார்பாக அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும், யசஷ்வி ஜெய்ஸ்வால் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி ஆரம்பத்தில் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சில இடங்களில் தடுமாறியது. இதில், சுப்மான் கில்லின் பிடியெடுப்பொன்றையும் யுஸ்வேந்திர சஹால் முதல் ஓவரில் தவறவிட்டிருந்தார். இவ்வாறான தடுமாற்றமான ஆரம்பத்தை குஜராத் அணி பெற்றுக்கொண்டாலும் ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் மற்றும் டேவிட் மில்லரின் அபாரமான துடுப்பாட்டங்களுடன் குஜராத் அணி வெற்றியை தக்கவைத்தது.

வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சுப்மான் கில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஹர்திக் பாண்டியாக 34 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 19 பந்துகளுக்கு 34 ஓட்டங்களையும் விளாசினர்.

இதன்மூலம் குஜராத் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்து சம்பியனாக முடிசூடியது. IPL தொடரை பொருத்தவரை தங்களுடைய சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் விளையாடிய குஜராத் அணி, முதன்முறையாக களமிறங்கி முன்னணி அணிகளை வீழ்த்தி சம்பியனாக முடிசூடியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<