ஹார்திக் பாண்டியா, கே.எல் ராகுலின் தடை நீங்கியது

168

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மீது விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீங்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிவூட் நடிகரும் திரைப்பட இயக்குனருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘கொபி வித் கரண்’ (Coffee with Karan) நிகழ்ச்சியில் இந்த மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற பாகத்தில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.எல் ராகுல் மற்றும் சகலதுறை வீரரான ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

விராட் கோஹ்லிக்கு நியூசிலாந்து தொடரில் திடீர் ஓய்வு

இதன் போது தொகுப்பாளரினால் நகைச்சுவையாக சில கேள்விகள் இருவரிடமும் கேட்கப்பட்டன. இதற்கு இருவரும் பதில் அளிக்கையில் வெளிப்படையான ஆபாச வார்த்தைகளை பிரயோகித்திருந்த அதேவேளை, பெண்கள் தொடர்பாக இழிவான சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

இவர்களினுடைய இந்த வெளிப்பாட்டின் காரணமாக இவர்கள் இருவர் மீதும், இந்திய கிரிக்கெட் சபை மீதும் சமூக வலைத்தளங்களில் பாரியளவிலான விமர்சனங்கள் எழுந்தன. ராகுலை விட பாண்டியாவுக்கே அதிகளவிலான விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல்யமான கிரிக்கெட் விமர்சகர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் இவர்கள் இருவர் மீதும் கொதித்தெழுந்திருந்தனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்ததன் காரணமாக இந்திய கிரிக்கெட் சபையானது இந்த விடயம் தொடர்பில் தலையீடு செய்து, இவரும் இந்திய கிரிக்கெட் சபையின் ஒழுக்க விதிமுறையை மீறியுள்ளதாக கூறி, ஆஸி தொடரில் பங்கேற்றிருந்த இருவரையும் போட்டிகளில் விளையாட கடந்த 11 ஆம் திகதி தடை விதித்திருந்தது.

பின்னர் விசாரணைகளுக்காக இருவரும் உடனடியாக நாடு திரும்புமாறு கடந்த 13 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பின் இருவரும் விசாரணைகளுக்காக நாடு திரும்பியிருந்தனர். இதன் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது ”இவர்கள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை இருவரும் எந்தவித போட்டிகளிலும் விளையாட முடியாது” என்ற கோரிக்கையும் முன்வைத்திருந்தது.

இவ்வாறு இருவருக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக ஆஸி. சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரிலும், தற்போது நடைபெற்றுவரும் நியூஸிலாந்து தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்து.

இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்தும் விசாரணைகள் நிலுவையில் நீடித்து வருவதன் காரணமாக உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை கவனத்திற்கொண்டு இருவர் மீதான இடைக்கால தடையுத்தரவை நீக்கவேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகக்குழு தலைவர் சி.கே கண்ணா வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஒழுக்க விதிமுறையினை மீறியதால் 46 ஆவது சரத்தின் அடிப்படையில் விதிக்கபட்ட இருவரினதும் இடைக்கால தடையை நீக்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டிக்வெல்லவின் துடுப்பாட்ட பாணியை நாம் பின்பற்ற வேண்டும் – திமுத்

இடைக்கால தடையுத்தரவு நீங்கியுள்ளதால் இவரும் போட்டிகளில் விளையாட முடியும். இருந்தாலும் இவர்களுடைய விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் மீதான விசாரணை அடுத்த (பெப்ரவரி) மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தடை நீங்கியுள்ளதன் காரணமாக ஹார்திக் பாண்டியா தற்போது நடைபெற்றுவரும் நியூஸிலாந்து அணியுடனான சுற்றுப்பயணத்திலும், கே.எல் ராகுல் இந்திய A அணியிலும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<