ஹசிம் அம்லாவை கட்டுப்படுத்துவதே இலங்கை அணியின் நோக்கம்

1226
Sri Lankans keen to spoil Amla’s party

ஜோகன்னஸ்பெர்க்,  வண்டரர்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில்   தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா தனது நூறாவது டெஸ்ட் போட்டிக்காக களமிறங்கவுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்காக நூறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களில் எட்டாவது வீரராகவும், வெள்ளை நிறத்தவர் அல்லாத முதல் துடுப்பாட்ட வீரராகவும் வரலாற்றில் இடம் பிடிக்கவுள்ளார். இதற்கு முன்னதாக வெள்ளை நிறத்தை அல்லாத பந்து வீச்சாளராக மகாயா நிடினி நூறு டெஸ்ட் போட்டிகளில் அவ்வணிக்காக விளையாடியிருந்தார்.

33 வயதான ஹசிம் அம்லா, முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் மிகவும் சிறந்தவராகவும் பிரபலமானவராகவும் உள்ளார். எனினும், தற்போது நடைபெற்று வரும் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இதுவரை அவரால் அரைச்சதம் ஒன்றைக்கூட பெற முடியவில்லை. கூடிய ஓட்டங்களாக 48 ஓட்டங்களையே பதிவு செய்துள்ளார். அத்துடன் இந்த தொடரில் காட்டிய மோசமான ஆட்டத்தின் காரணமாக அவருடைய கிரிக்கெட் சராசரி வீதம் 50ஐ விடக் குறைவடைந்துள்ளது.

இலங்கை அணியில் அறிமுகமாகும் திக்ஷில டி சில்வா : அணிக்கு திரும்பிய திக்வெல்ல, தனுஷ்க

இது குறித்து ஊடகவியளார்களிடம் கருத்து தெரிவித்த இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா, ”எதிர்வரும் போட்டியின்போது நாம் அம்லாவின் நூறாவது டெஸ்ட் போட்டியில், அவரை ஓட்டங்களை பெற முடியாமல் முடிந்த அளவு கட்டுப்படுத்த முயலுவோம்.

அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். திறமை வாய்ந்த வீரர்களுக்கு எப்போதும் சாதிக்க முடியும். ஆனால், இந்த தொடரில் ஓட்டங்களை குவிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். எதிர்வரும் போட்டியிலும் அவதிப்படுவார் என எதிர்பார்க்கிறோம்என்றார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக கடந்த திங்கட்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை அணிக்கு, சனிக்கிழமை பெய்திருந்த அடைமழையின் காரணமாக பயிற்சி களத்தில் நீர் தேங்கியிருந்தமை பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தடையாக இருந்தது.

எனவே, செவ்வாய்க்கிழமை நீண்ட நேரத்துக்கு பயிற்சியில் ஈடுபடவேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை அணி தள்ளப்பட்டது. அத்துடன் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னைய நாளும் பயிற்சியில் ஈடுபடக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

அதேநேரம், போர்ட் எலிசபெத் மற்றும் கேப்டவுனில் பெற்றுக்கொண்ட இலகு வெற்றிகளுக்கு பின்னர் தென்னாபிரிக்க 3-0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரை வைட் வொஷ் செய்து கைப்பற்றவே எதிர்பார்த்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள ஜோகன்னஸ்பெர்க் ஆடுகளம், முதலிரண்டு ஆடுகளங்களிலிருந்து முற்றிலும் வேறானது. போர்ட் எலிசபெத் மற்றும் கேப்டவுனில் ஆடுகளம் அதிக ஸ்விங் கொண்டதாக அமைந்திருந்தது. ஆனால், ஜோகன்னஸ்பெர்க் ஆடுகளம் பந்து அதிகளவில் எழும்பி வரும் தன்மை கொண்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த தனஞ்சய டி சில்வா, ஜோகன்னஸ்பெர்க்,  வண்டரர்ஸ் ஆடுகளம் ஏனைய ஆடுகளங்களை விட பந்தின் வேகம், ஸ்விங்  மற்றும் பந்து அதிகமாக எழும்பி வரும் தன்மைகளைக் கொண்டது. ஆசிய ஆடுகளங்களில் பழக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இங்கு துடுப்பாடுவது சற்றே கடினமான விடயமாகும். எனினும், துடுப்பாட்ட வீரர்களுக்கு நல்லதொரு ஆடுகளமாக இது அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

சத்துர ஒபேசேகர 7 விக்கெட்டுகள்: புனித பேதுரு கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

எனினும், இலங்கை அணியைப் பொறுத்தவரை துடுப்பாட்டம் பெரியதொரு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இத்தொடரில் இலங்கை அணி நான்கு இன்னிங்சுகளில் துடுப்பாடியுள்ள நிலையில், இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே அரைச்சதம் கடந்துள்ளனர். தனஞ்சய டி சில்வா ஆரம்பத்தை பெற்றுக்கொண்டாலும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்றார்.

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை நாங்கள் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை. ஆனால், ஆடுகளத்துக்கு ஏற்றவாறு எங்களது துடுப்பாட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். அத்துடன், சரியான பந்தை தெரிவு செய்து அடித்து ஆட வேண்டும். இலங்கை மற்றும் ஜிம்பாவேயில் போல் எல்லாப் பந்துகளுக்கும் துடுப்பாட முடியாது. நிறைய பவுண்டரிகளை பெற பந்துகளின் பின் செல்லாமல் சரியான தருணத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தென்னாபிரிக்க அணியின் மூன்று பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில், முக்கியமாக வேர்ணன் பிலாண்டரின் பந்து வீச்சை எதிர்கொள்ளவதை கடினமாக உணர்கின்றேன். அவர் ஓட்டங்களை கட்டுப்படுத்தும் அதேவேளை விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார்.

அதே சமயம் ரபாடா ஓட்டங்களை கட்டுப்படுத்தவில்லை. எனினும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஆக, வேர்ணன் பிலாண்டரின் பந்து வீச்சே மிகவும் கடினமானதாக இருக்கிறது”’ என்றார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர், அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் சிறப்பாக துடுப்பாடியிருந்த தனஞ்சய டி சில்வா, இரண்டு அணி வீரர்களிலிருந்தும் பெறப்பட்ட கூடிய ஓட்டங்களாக, மொத்தமாக 325 ஓட்டங்களை பதிவு செய்திருந்தார். அவுஸ்திரேலிய அணியை 3-0  என்ற அடிப்படையில் வைட் வொஷ் செய்திருந்த அந்த தொடரில் தனஞ்சய டி சில்வா  சராசரியாக ஒரு இன்னிங்சுக்கு 66 என்ற ஓட்ட வீதத்தில் ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தார். அவர் இலங்கை அணிக்காக ஏழாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனஞ்சய டி சில்வா மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் துடுப்பாடுவதே திட்டமாக இருந்தது. எனினும் முதலாவது டெஸ்ட் போட்டியில் குசல் ஜனித் பெரேராவின் மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே அவரது துடுப்பாட்ட நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த தனஞ்சய டி சில்வா, இடம் மாறி துடுப்பாடியமை பெரிய வித்தியாசமாக தெரியவில்லை. ஏனெனில், கழக மட்ட போட்டி மற்றும் A அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே களமிறங்குகின்றேன். எனவே, நான்காவது அல்லது எழாவது இடத்தில் துடுப்பாடுவதில் எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை. என்னுடைய நோக்கம் முடியுமானவரை இறுதி வரிசையில் நின்று துடுப்பாடுவதே. அத்துடன் நிலையில்லாத இறுதிவரிசையில் அணிக்காக வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம், முன்வரிசையில் துடுப்பாடும்போது நிதான ஆட்டத்தை கடைபிடிக்க வேண்டியுள்ளதால் என்னால் என்னுடைய வழமையான அதிரடி துடுப்பாட்ட பாணியை தொடர முடியாதுள்ளது.

நான் ஏழாவது துடுப்பாட்ட வீரராக நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளேன். அந்த இடத்தில் எனக்கு நிறைய ஓட்டங்களை எடுக்க முடியும். எனினும், நான்காவது வீரராக துடுப்பாடும் போது, அங்கு வேறு விதமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆடுகளத்தில் நின்று கூடிய ஓட்டங்களை பெற முயற்சிக்க வேண்டும். அத்துடன், தொடர்ந்தும் ஏழாவது துடுப்பாட்ட வீரராகவே களமிறங்க விரும்புகின்றேன் என்று தனஞ்சய டி சில்வா இறுதியாக தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.