துடுப்பாட்டத்திலும் ஓ’ கீஃப் அசத்தல்; 2ஆவது நாளும் அவுஸ்திரேலியா வசம்

257
Sri Lankan XI v Australians

இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் மோதும் நீண்ட தொடர் ஆரம்பமாக முன் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை சபை பதினொரு பேர் அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் முதல் நாளான நேற்று  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை சபை பதினொரு பேர் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சபை பதினொரு பேர் அணி தமது முதல்இனிங்ஸில்  சகல விக்கட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அசேல குணரத்ன 58 ஓட்டங்களையும், மிலிந்த சிறிவர்தன 53 ஓட்டங்களையும், சதுரங்க டி சில்வா 49 ஓட்டங்களையும் மற்றும் சகலதுறை வீரர் தசுன் ஷானக 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டீபன் ஓ’ கீஃப் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜெக்சன் பேர்ட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.

Photo Album – Sri Lankan XI Vs Australia – Tour Game Day – 1

பின் தமது முதலாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பின் தமது இனிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி இன்றைய 2ஆவது நாள் ஆட்ட நேர  முடிவின்போது 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 431 ஓட்டங்களைப் பெற்று  இலங்கை அணியை  விட முதல் இனிங்ஸில் ஒரு விக்கட் கையிருப்பில் இருக்க 202 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் ஜோ பர்ன்ஸ் 72 ஓட்டங்களையும் , ஸ்டீவன் ஸ்மித் 57 ஓட்டங்களையும், மிச்சல் ஸ்டார்க் 45 ஓட்டங்களையும்   ஸ்டீபன் ஓ’கீஃப் 62 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் பெற்றிருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஷெஹான் ஜயசூரிய 109 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும் விமுக்தி பெரேரா, நிசல தாரக, தசுன் ஷானக மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதமும் வீழ்த்தினர். போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி : 229/10
அசேல குணரத்ன 58, மிலிந்த சிறிவர்தன 53, சதுரங்க டி சில்வா 49 தசுன் ஷானக 39
ஸ்டீபன் ஓ’கீஃப் 43/5, மிட்செல் ஸ்டார்க் 39/2, ஜெக்சன் பேர்ட், 26/2

அவுஸ்திரேலிய அணி : 431/9
ஜோ பர்ன்ஸ் 72, ஸ்டீபன் ஓ’கீஃப் 62*, ஸ்டீவன் ஸ்மித் 57 , மிச்சல் ஸ்டார்க் 45
ஷெஹான் ஜயசூரிய 109/5, விமுக்தி பெரேரா 43/1, நிசல தாரக 53/1