ஒரே தினத்தில் முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுக்கும் இரு பாகிஸ்தான் வீரர்கள்

399
Umar Gul and Imran Farhat

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களான வேகப்பந்துவீச்சாளர் உமர் குல் மற்றும் துடுப்பாட்ட வீரர் இம்ரான் பர்ஹத் ஆகியோர் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் உமர் குல் ஒரு முக்கிய வேகப்பந்துவீச்சாளராக திகழ்கின்றார். 1984 ஆம் ஆண்டு பேஷ்வரில் பிறந்த உமர் குல் தனது 19 ஆவது வயதில் 2003 ஏப்ரல் மாதம் ஷார்ஜாவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் சர்வதேச போட்டியில் சர்வதேச அரங்கிற்கு அறிமுகமானார். 

>> தோல்வியையும் தழுவி, தண்டனைக்கும் உள்ளான கோஹ்லி

அதன் பின்னர் 2003 ஆகஸ்டில் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்றுக்கொண்டார். ஒரு வேகப்பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள காரணமாக திகழ்ந்த உமர் குல், 2005 ஆம் ஆண்டு டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் 2007 ஆம் ஆண்டு அதிலும் அறிமுகம் பெற்றுக்கொண்டார். 

பாகிஸ்தான் அணிக்காக 237 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள உமர் குல் 400 இற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்றில் முக்கிய ஒரு வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தார். டெஸ்ட்டில் 163 விக்கெட்டுளையும், ஒருநாளில் 179 விக்கெட்டுகளையும், டி20 இல் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வீழ்த்திய ஐ.சி.சி டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் போது உமர் குல் அந்த அணியில் விளையாடியிருந்ததுடன், பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய பந்துவீச்சில் முக்கிய புள்ளியாகவும் திகழ்ந்தார். 

2013 ஆம் ஆண்டுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு விடைகொடுத்த உமர் குல், தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிவந்தார். டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் வரிசையில் ஷஹீட் அப்ரிடியின் 98 விக்கெட்டுகளுக்கு அடுத்ததாக 85 விக்கெட்டுகளை வீழ்த்திய உமர் குல் இரண்டாவது வீரராக காணப்படுகின்றார். மேலும் ஒட்டுமொத்த வீரர்கள் வரிசையில் உமர் குல் ஐந்தாமிடத்தில் காணப்படுகிறார். 

>> எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைகளைப் படைத்த ராகுல்

இளம் வீரர்களின் வருகையினால் 2016 ஆம் ஆண்டுடன் இறுதியாக இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய நிலையில் அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடாத 36 வயதாகும் உமர் குல், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ‘நெஷனல் டி20 கிண்ணம்’ தொடருடன் அனைத்து வித கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுக்கின்றார். 

இதேவேளை கடந்த 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அறிமுகம் பெற்ற இடதுகை துடுப்பாட்ட வீரர் இம்ரான் பர்ஹத் தனது 38 ஆவது வயதில் உமர் குல்லுடன் இணைந்து எதிர்வரும் நெஷனர் டி20 கிண்ணத்’ தொடருடன் முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுப்பதாக அறிவித்துள்ளார். 

இறுதியாக 2,013 ஆம் ஆண்டுடன் சர்வதேச போட்டிகளில் விளையாடிய இம்ரான் பர்ஹாத் பாகிஸ்தான் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள், 14 அரைச்சதங்களுடன் 2400 ஓட்டங்களையும், 58 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1,719 ஓட்டங்களையும், 7 டி20 சர்வதேச போட்டிகளில் 76 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். 

2013 ஆம் ஆண்டின் பின்னர் சர்வதேச அரங்கில் வாய்ப்பு கிடைக்காத இம்ரான் பர்ஹத் தொடர்ந்தும் முதல் தர போட்டிகளில் விளையாடிவருகிறார். இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபருடன் அவரும் அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<