9ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 10ஆவது போட்டி இன்று மாலை மொஹாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கட் சங்க பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டேவிட் மிலர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மஹேந்திர சிங் டோனி தலைமையிலான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியை எதிர் கொண்டது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி சார்பாக பெப் டுப்லசிஸ் 53 பந்துகளில் 8 பவுண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 26 பந்துகளில் 38 ஓட்டங்களையும்,கெவின் பீட்டர்சன் 15 பந்துகளில் 15 ஓட்டங்களையும் பெற்றனர். பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் மொஹித் ஷர்மா 3 விக்கட்டுகளையும், சந்தீப் ஷர்மா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸை வீழ்த்தியது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பாக முரளி விஜே 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 53 ஓட்டங்களையும், மனன் வோஹ்ரா 33 பந்துகளில் 51 ஓட்டங்களையும், க்லென் மெக்ஸ்வல் ஆட்டம் இழக்காமல் 14 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்றனர். றைசிங் பூனே அணியின் பந்து வீச்சில் முருகன் அஷ்வின் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மனன் வோஹ்ரா தெரிவு செய்யப்பட்டார்.