மீண்டும் நம்பர் 1 வீரராக வனிந்து ஹஸரங்க

244

புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் T20 சர்வதேசப் போட்டிகள் (T20i) பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் நட்சத்திரமான வனிந்து ஹஸரங்க முதலிடம் பெற்றிருக்கின்றார்.

>> தனுஷ்கவின் சம்பவம் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம் – மஹேல

அந்தவகையில் வனிந்து ஹஸரங்க T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஏற்கனவே முதலிடத்தில் காணப்பட்ட ஆப்கானிஸ்தானின் சுழல் நட்சத்திரமான ரஷீட் கானை பின்தள்ளி 708 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருக்கின்றார்.

வனிந்து ஹஸரங்க தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் 15 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளராக காணப்படுவதோடு, இந்த விக்கெட்டுக்களே அவர் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தினைப் பெறுவதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரிலும் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியிருந்த வனிந்து ஹஸரங்க, இதுவரை 52 T20i போட்டிகளில் பங்கேற்று 14.48 என்கிற சிறந்த பந்துவீச்சு சராசரியுடன் 86 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 25 வயது நிரம்பியிருக்கும் வனிந்து ஹஸரங்க T20i சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் தற்போது 8ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.

>> ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கவுள்ள SA T20 லீக்!

மறுமுனையில் T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷீட் கான் 698 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஹேசல்வூட் 690 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், தென்னாபிரிக்காவின் தப்ரைஸ் சம்ஷி 681 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் அடம் ஷம்பா 678 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் காணப்படுகின்றனர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<