தனுஷ்கவின் சம்பவம் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம் – மஹேல

ICC T20 World Cup 2022

3255

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் நல்ல பாடமாக அமைய வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணி வீரர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று (07) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹேல ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த வீரர்கள் பாடசாலை செல்கின்ற வீரர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். தனுஷ்கவின் விவகாரம் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இங்கிலாந்துடனான போட்டியை முடித்துக் கொண்டு இலங்கைக்கு புறப்பட்டு வருவதற்கு தயாராகிய இரவில்தான் எங்களுக்கு இந்த சம்பவம் தெரிய வந்தது. ஊடகங்கள் மூலம் இந்த உண்மைகள் வெளியான பிறகுதான் இதுபற்றி நான் அறிந்து கொண்டேன்.

வீரர்களின் நடத்தைகள் தொடர்பில் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். விசாரணை நடப்பதால், இதைப் பற்றி சரியாக கூறுவது கடினம். அவரது கருத்தை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஒரு அணியாக நாங்கள் அந்தந்த நாடுகளின் சட்டங்களைப் பின்பற்றி விளையாடி விட்டு சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். ஆனால், வீரர்கள் கையால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது. நாம் சட்டத்துக்கு இடமளித்து என்ன நடந்துள்ளது என பார்ப்போம்.

விளையாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் இதே போன்ற பல சம்பவங்கள் தொழில்முறை வீரர்களிடம் இருந்து பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் பாடசாலை வீரர்கள் அல்ல. இது தொழில்முறை வீரர்களுடன் செல்கிறோம். அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அவர்களே பொறுப்பு. எமது வீரர்கள் நடந்துகொள்ள ஒரு ஒழுக்க விதிமுறை உள்ளது. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நாம் எப்போதும் செயல்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவம் இலங்கைக்கு வருவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தால் நமது கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்த வீரருக்கும் இது ஒரு நல்ல பாடம். இவ்வாறான சம்பவங்களிலிருந்து நாம் பாடம் கற்று எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணி இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் வெளிப்படுத்திய திறமைகள் தொடர்பிலும், ஏன் இலங்கை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது என்பது தொடர்பிலும் எழுப்பிய கேள்விக்கு மஹேல கருத்து தெரிவிக்கையில்,

“எங்களால் அரையிறுதிக்கு செல்ல முடியாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. எமது வீரர்களிடம் திறமை இருந்தும், முக்கிய போட்டிகளில் தேவையான இடங்களில் நாங்கள் தவறுகள் செய்தோம். இது வீரர்களுக்கு நன்கு தெரியும். உலகக் கிண்ணம் போன்ற பெரிய போட்டித் தொடர்களில், இதுபோன்ற தவறுகளைச் செய்து முன்னேறுவது மிகவும் கடினம். தற்போது நாம் செய்ய வேண்டியது நமது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவதுதான்.

உலகக் கிண்ணத்தை நாங்கள் ஒருபோதும் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆசிய சம்பியனாக உலகக் கிண்ணத்துக்குச் சென்றாலும், அவுஸ்திரேலிய ஆடுகளமும், எதிர்கொள்கின்ற அணிகளும் வித்தியாசமானவை. நாங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று தான் அந்த மாற்றங்களுக்கு விரைவாக பழகிக் கொள்ளவில்லை. அதேபோல, அதை நாங்கள் விரும்பியபடி செய்ய முடியாமல் போனது. அவ்வப்போது ஏற்படும் காயங்கள், களத்தடுப்பு, துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் தேவையான நேரத்தில் எமது வீரர்கள் தவறிழைத்து விட்டனர். அவ்வாறான தவறுகள் தான் இந்தப் போட்டித் தொடரில் இருந்து நாம் வெளியேறுவதற்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

எவ்வாறாயினும், தற்போதுள்ள இலங்கை அணி முன்பை விட முன்னேற்றம் அடைந்துள்ளது. அதுதொடர்பில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனவே, எமது வீரர்கள் தம்மிடம் உள்ள அனுபவத்தை முன்நோக்கி எடுத்துச் செல்லும் போது சிறு சிறு குறைபாடுகள் இருக்கும். ஆனால் அனுபவத்தைக் கொண்டு, அந்தத் தவறுகளை நாம் நிவர்த்தி செய்து, ஒரு நாடாக, ஒரு அணியாக முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று மஹேல கூறினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<