இலங்கை கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையவுள்ள டேவ் வட்மோர்

90

இலங்கை கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த டேவ் வட்மோரின் சேவையை மீண்டும் பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் அவரை இணைத்துக்கொண்டு மாகாண மற்றும் மாவட்ட மட்ட பயிற்சியாளர்களை முகாமைத்துவம் செய்து அதற்கான அறிவைப் பெற்றுக்கொடுக்கின்ற பொறுப்பை ஒப்படைக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் ரவீன் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 

இலங்கை அணிக்கு விரைவில் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்படும் – ரவீன் விக்ரமரட்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு….

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (05) ஆரம்பமாகவுள்ள முதலாவது டி-20 தொடருக்கு முன் லாஹூரில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், 

கிரிக்கெட் தொடர்பில் பரந்தளவு அறிவைக் கொண்ட இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளரான டேவ் வட்மோரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் அவரை இணைத்துக்கொண்டு மாகாண மற்றும் மாவட்ட மட்ட பயிற்சியாளர்களை முகாமைத்துவம் செய்வதற்கான பொறுப்பை ஒப்படைக்கவுள்ளோம் என கூறினார்.  

அத்துடன், அதிகபட்ச திறமைகளை வெளிப்படுத்துகின்ற பயிற்சியாளர்களுக்கான மத்திய நிலையத்துக்கு புதிய பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். எங்களிடம் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவமிக்க பல முன்னாள் வீரர்கள் உள்ளனர். உலகிலுள்ள சிறந்த பயிற்சியாளர்களை அழைத்து வந்து அவர்களின் அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். 

இதேநேரம் இலங்கையின் உள்ளுர் கிரிக்கெட்டில் கொண்டு வரவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து பேசிய அவர், எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட்டுக்கு பொருத்தமான புதிய திட்டத்துடன் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான ஒரு திட்டத்தையும் நாங்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். 

திறமையான வீரர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்க பொருத்தமான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். அவ்வறு செய்யாவிட்டால் அவர்களின் திறமைகள் வீணடிக்கப்பட்டுவிடும். 

குறிப்பாக 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கழகமட்ட போட்டிகளை நாங்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளோம். அதேபோல, 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரையும் வெற்றிகரமாக நடாத்தினோம். தற்போது 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டித் தொடரொன்றை ஆரம்பித்துள்ளோம். இவ்வாறு ஒவ்வொரு வயதுப் பிரிவினர்களுக்கும் போட்டித் தொடர்களை நடத்துவதால் சுமார் 80 வீரர்களை எம்மால் இனங்கண்டு கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார். 

இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விளையாடிய 65 வயதான வட்மோர், தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஒரு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருவதுடன், இந்தியாவில் கிரிக்கெட் அகடமி ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

மஹேலவின் அணியில் விளையாடவுள்ள ஜொப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) அடுத்த ஆண்டு நடாத்தவுள்ள….

இவரது தலைமையில் இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றது. அதன்பிறகு பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற அவர், 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் இந்தியா, தென்னாபிரிக்காவை வீழ்த்தி அந்த அணியை வெற்றி பெறச் செய்ததுடன், சுப்பர் 8 சுற்றுக்கும் தகுதிப்பெறச் செய்தார்.

தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு சென்ற அவர், அந்த அணிக்கு 2012 ஆம் ஆண்டில் ஆசிய கிண்ணத்தை வென்று கொடுக்க முக்கிய காரணமாக இருந்தார். அதன்பிறகு 2016 இல் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராகச் செயற்பட்டமை இஙகு குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், 2017 ஆம் ஆண்டு இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியின் கிரிக்கெட் ஆலோசகராகவும் அவர் செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க