இமாலய இணைப்பாட்டத்துடன் ஆறுதல் வெற்றி பெற்ற அயர்லாந்து

837
GETTY IMAGES

செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், அயர்லாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக்கில் இங்கிலாந்துக்கு முதல் தொடர் வெற்றி

அயர்லாந்து அணியின் வெற்றி அவர்களுக்கு இந்த ஒருநாள் தொடரில் கிடைத்த ஆறுதல் வெற்றியாக மாற, தொடரின் முன்னைய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரினை 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

அடுத்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான அணிகளை தெரிவு செய்யும் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக் தொடரினுடைய அங்கமாக நடைபெறுகின்ற அயர்லாந்து – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, சௌத்தம்ப்படன் நகரில் ஆரம்பமானது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணியின் தலைவர் அன்டி பல்பைர்னி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, தொடரின் கடந்த போட்டிகள் போல் அல்லாது இங்கிலாந்து அணிக்கு வழங்கினார். 

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி சார்பில் முன்வரிசை வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த போதும், அணித்தலைவர் இயன் மோர்கன், டொம் பேன்டன் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் சிறந்த முறையில் செயற்பட்டு ஓட்டங்கள் பெற்றனர். 

இதனால், இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்கள் பெற்றது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக தன்னுடைய 14ஆவது சதத்தோடு இயன் மோர்கன் 84 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 15 பௌண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம், அரைச்சதங்கள் பெற்ற டொம் பேன்டன் 58 ஓட்டங்களையும், டேவிட் வில்லி 51 ஓட்டங்களையும் குவித்தனர். 

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளரான கிரைக் யங் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, கேர்டிஸ் கேம்பர் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 329 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணிக்கு அதன் தலைவர் அன்டி பல்பைர்னியும், ஆரம்ப துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான போல் ஸ்டேர்லிங்கும் தமது இணைப்பாட்டம் மூலம் உதவினர். 

இந்த இரண்டு வீரர்களது துடுப்பாட்ட உதவியோடு அயர்லாந்து அணி போட்டியின் வெற்றி இலக்கினை 49.5 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 329 ஓட்டங்களுடன் அடைந்தது. 

அயர்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக அன்டி பல்பைர்னி மற்றும் போல் ஸ்டேர்லிங் ஆகியோர் இரண்டாம் விக்கெட்டுக்காக 214 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு, சதங்களினையும் விளாசினர். 

இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளரான ஆதில் ரஷீட் புதிய சாதனை

இதில் ஒருநாள் போட்டிகளில் 9ஆவது சதத்தினைப் பதிவு செய்த போல் ஸ்டேர்லிங், 128 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 142 ஓட்டங்களைப் பெற்றார். அதேநேரம், அன்டி பல்பைர்னி தன்னுடைய 6ஆவது ஒருநாள் சதத்துடன் 113 ஓட்டங்களைக் குவித்தார். 

மறுமுனையில், அயர்லாந்து 329 என்கிற வெற்றி இலக்கினை துரத்தியடித்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக, இங்கிலாந்து மண்ணில் வைத்து கூடுதல் வெற்றி இலக்கு ஒன்றினை துரத்தியடித்த அணியாக சாதனை படைத்தது.  

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஆதீல் ரஷீட் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்த போதும் அதில் பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை. 

போட்டியின் ஆட்ட நாயகனாக அயர்லாந்து அணியின் போல் ஸ்டேர்லிங் தெரிவாகினார். தொடர் நாயகன் விருது இங்கிலாந்து அணியின் சகலதுறைவீரர் டேவிட் வில்லிக்கு வழங்கப்பட்டது. 

இதேவேளை இங்கிலாந்து அணி இந்த ஒருநாள் தொடர் மூலம் ஐ.சி.சி. இன் உலகக் கிண்ண சுபர் லீக்கிற்காக 20 புள்ளிகளைப் பெற, அயர்லாந்து 10 புள்ளிகளை எடுத்துக் கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 328 (49.5) இயன் மோர்கன் 106, டொம் பேன்டன் 58, டேவிட் வில்லி 51, கிரைக் யங் 53/3, ஜோசுவா லிட்டில் 62/2, கேர்டிஸ் கேம்பர் 68/2

அயர்லாந்து – 329/3 (49.5) போல் ஸ்டேர்லிங் 142, அன்ட்ரூ பல்பைர்னி 113, ஆதில் ரஷீட் 61/1, டேவிட் வில்லி 70/1 

முடிவு – அயர்லாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க