மகளிர் T20 உலகக் கிண்ண இலங்கை குழாம் அறிவிப்பு

ICC Women's T20 World Cup 2023

183

ஐசிசி மகளிர் T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை புதன்கிழமை (01) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் இம்மாதம் 10ஆம் திகதி 8ஆவது ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கான குழாம்களை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

10 அணிகள் பங்குபற்றவுள்ள இந்த ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகியன A குழுவிலும் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன B குழுவிலும் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மகளிர் அணியை சமரி அத்தபத்து வழிநடத்தவுள்ளார்.

அத்துடன், அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனைகளான ஓஷதி ரணசிங்க, ஹர்சிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா, சுகந்திகா குமாரி, டிலானி மனோதரா அனுஷ்கா சஞ்சீவனி மற்றும் மல்ஷா செஹானி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

மறுமுனையில் பந்துவீச்சிற்கு பலம் சேர்க்க இணோக்கா ரணவீர மற்றும் கவீஷா டில்ஹாரி ஆகியோர் இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

இதேநேரம், இளம் வீராங்கனையான விஷ்மி குணரட்ன, சுழல் பந்துவீச்சு சகலதுறை வீராங்கனையாக இலங்கை மகளிர் அணிக்கு பெறுமதி சேர்க்கவுள்ளார். இவர் அண்மையில் நிறைவடைந்த ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் தொடரில் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணியின் தலைவியாக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பயிற்சிகளின் போது கைவிரல் காயத்துக்குள்ளாகிய அனுபவ வீராங்கனையான ஹசினி பெரேரா இம்முறை T20 உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியுள்ளார். இது இலங்கை அணிக்கு மிகப் பெரிய இழப்பாக அமையவுள்ளது.  இதன் காரணமாக அவருக்குப் பதிலாக சத்யா சந்தீபனியை மாற்றீடு வீராங்கனையாக அணியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை மகளிர் அணி தமது முதல் போட்டியில் தொடரை நடத்தும் நாடான தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்வரும் 10ஆம் திகதி எதிர்கொள்கிறது.

ஐசிசி T20 மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம்

சமரி அத்தபத்து (தலைவி), ஓஷதி ரணசிங்க, ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, மல்ஷா செஹானி, நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, அச்சினி குலசூரிய, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, தாரிகா செவ்வந்தி, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கனா, சத்யா சந்தீபனி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<