இறுதிநேர துடுப்பாட்ட சரிவால் வெற்றியை தவறவிட்ட இங்கிலாந்து!

85
©ICC

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நியூசிலாந்து அணி, தொடரில் 2-1 என முன்னிலைப்பெற்றுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் இரு போட்டிகளிலும் அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றிருந்தன.

நியூசிலாந்து தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் ….

அதன் அடிப்படையில் இன்று நெல்சனில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், இறுதிக் கட்டத்தில் போட்டியை தம்சவப்படுத்திய நியூசிலாந்து அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், கொலின் டி கிரெண்டோம் மற்றும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த பங்களிப்புடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கொலின் டி கிரெண்டோம் 35 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவருக்கு அடுத்தப்படியாக மார்டின் கப்டில் 33 ஓட்டங்கள், ரொஸ் டெய்லர் 27 ஓட்டங்கள் மற்றும் ஜேம்ஸ் நீஸம் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, டொம் கரன் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற, ஏனைய பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில், லிவிஸ் கிரேகரி மாத்திரம் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டிருந்த போதும், போட்டியின் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 7 விக்கெட்டுகள் கைவசமிருக்க 30 பந்துகளில் 42 ஓட்டங்களை மாத்திரமே பெறவேண்டிய தேவை இருந்தது. எனினும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இறுதி 18 பந்துகளில் வெறும் 10 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் மலன் 34 பந்துகளுக்கு 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஜேம்ஸ் வின்ஸ் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில், லொக்கி பேர்கஸன் மற்றும் ப்ளைர் டிக்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளதுடன், நான்காவது T20I போட்டி எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்

நியூசிலாந்து – 180/7 (20), கொலின் டி கிரெண்டோம் 55, மார்டின் கப்டில் 33, டொம் கரன் 29/2

இங்கிலாந்து – 166/7 (20), டேவிட் மலன் 55, ஜேம்ஸ் வின்ஸ் 49, லொக்கி பேர்கஸன் 25/2, ப்ளைர் டிக்னர் 25/2

முடிவு – நியூசிலாந்து அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<