தனிப்பட்ட இலக்குக்காக விளையாட விருப்பமில்லை : திசர பெரேரா

1646

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று (8) நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, தங்களது தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் திசர பெரேரா மற்றும் தசுன் சானக ஆகியோரின் சகலதுறை ஆட்டம் என்பது நாம் அறிந்ததே.

தென்னாபிரிக்காவுடனான நேற்றைய ஆட்டமும் இலங்கையின் பதிவுகளும்

இந்தநிலையில் நேற்றைய போட்டியின் பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த தசுன் சானக மற்றும் திசர பெரோ தங்களது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டனர். இதில் முக்கியமாக அணிக்கான தங்களது பங்களிப்பு குறித்து தெரிவித்த திசர பெரேரா, தனக்கென ஒரு இலக்கை வைத்துக்கொண்டு விளையாடுவதற்கு எப்பொழுதும் விரும்பியதில்லையெனவும், ஒவ்வொரு போட்டியிலும் அணிக்காகவே விளையாடுகின்றேன் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திசர பெரேரா நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,

தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் 5-0 என தோல்வி அடையக்கூடாது என்ற மனநிலையுடன் நாம் இன்று (08) களமிறங்கியிருந்தோம். அதன்படி செயற்பட்டு வெற்றிபெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. துடுப்பாட்டத்தில் அணியின் ஆரம்பம் சிறப்பாக இருந்த போதும், நடுப்பகுதியில் சற்று தடுமாறினோம். எனினும் நானும், சானகவும் துடுப்பாட்டத்தை சிறப்பாக முடிவுக்கு கொண்டுவந்தோம்.

அத்துடன் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயற்பட்டனர் என்றுதான் கூறவேண்டும். ஈரப்பதமான (Wet) சூழ்நிலையில் 21 ஓவர்களில் 191 என்ற இலக்கு பெரிய இலக்கு அல்ல. இந்த நிலையில் (Wet)  பந்து வீசுவதும் இலகுவான விடயமல்ல. எனினும், சிறப்பாக செயற்பட்டு வெற்றியை பெற்றது சிறப்பான வியடம்.

எங்களது இந்த ஆட்டத்துக்கான பாராட்டுகள் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க, துடுப்பாட்ட பயிற்றுவி்ப்பாளர் திலான் சமரவீர ஆகியோரையே சாரும். துடுப்பாட்டத்தின் பக்கம் பார்க்கும் போது கடந்த ஜனவரியிலிந்து குறித்த இருவரும் எம்முடன் அதிக ஈடுபாடுடன் பயிற்சிகளை கொடுத்து வருகின்றனர்.

தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

எனது பந்து வீச்சிலும் பிரச்சினைகள் இருந்தன. அதிலும் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரத்னாயக்க அதிக கவனம் செலுத்தி வருவதுடன், நான் மாற்றக் கூடிய விடயங்களை செய்து வருகின்றார்.  அணியாக களத்தடுப்பிலும் சற்று உயர்ந்துள்ளோம் அதற்கான காரணம் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் மனோஜ் அபேவிக்ரம. எமது பயிற்றுவிப்பு குழாம் எங்களுடன் அதிக ஈடுபாடுடன், திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை கூறிக்கொள்கிறேன்

தசுன் சானகவுடனான இணைப்பாட்டம் தொடர்பில் திசர கருத்து தெரிவிக்கையில்,

ணியின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தது. தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர். இதனால் முதலில் மூன்று ஓவர்களுக்கான திட்டத்தை தசுன் சானகவிடம் கூறினேன். மூன்று ஓவர்களுக்கு பின்னர் எங்களது துடுப்பாட்டத்தில் நம்பிக்கை வந்தது. எங்களால் பந்தை பார்த்து துடுப்பெடுத்தாடக் கூடியதாக இருந்தது. எங்களது இலக்கு 280ஆக இருந்தது எனினும் தசுன் சானக சிறப்பாக துடுப்பெடுத்தாடியதால் 300 ஓட்டங்களை எட்ட முடிந்தது

இலங்கை அணியின் இறுதி பந்து ஓவர்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து,

“15 ஓவர்கள் வீசப்பட்ட போது பந்து ஒருபக்கம் மாத்திரம்ஸ்விங்ஆகுவது தெரிந்தது. இதனால் விக்கெட்டினை குறிவைத்து பந்தை வீச முற்பட்டோம். நாம் துடுப்பெடுத்தாடும் போது, விக்கெட்டுக்கு வரும் பந்துகளுக்கு துடுப்பெடுத்தாட சவாலாக இருந்தது. இதனால் இந்த தீர்மானத்தை எடுத்தோம். விக்கெட்டுக்கு பந்து வீசும் போது துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை இலகுவாக பெறமுடியாது. ஏனைய பக்கங்கள் வீசும் போது துடுப்பாட்ட வீரர்கள் இலகுவாக துடுப்பெடுத்தாட முடியும்.

இறுதி ஓவர்களில் யோக்கர் பந்துகளை வீசுவதை தவிர்த்து, டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசும் யுத்தியை கையாண்டோம். அதன்மூலம் விக்கெட்டுக்கு நேராக பந்து வீசும் திட்டத்தை நகர்த்தினோம். அதுவே எங்களுக்கு வெற்றியாகவும் அமைந்ததுஎன்றார்.

திசர பெரேராவின் அடுத்த இலக்கு

அணியாக பொருத்தவரையில், அடுத்த உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும். T-20 உலகக் கிண்ணத்தை வெல்லும் அணியில் விளையாடினேன். இதனைத் தவிற எனக்கு தனிப்பட்ட இலக்குக்காக விளையாட விருப்பம் இல்லை. தனிப்பட்ட இலக்கு என்று இல்லை. அணிக்காக விளையாட வேண்டும். அணியின் தேவைக்காக விளையாட வேண்டும். நான் தனியாக ஒன்றையும் சாதிக்க முடியாது. துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் வீரர்களின் ஆதரவு எனக்கு எப்பொழுதும் தேவை.

நான் பந்து வீசினாலும் பிடியெடுக்க ஒருவர் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் என்னால் சாதிக்க முடியாது. அதனால் தனிப்பட்ட இலக்குடனாக கிரிக்கெட் எனக்கு விருப்பம் இல்லை. எனது ஒரே இலக்கு அடுத்த உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு கொண்டுவர வேண்டு்ம் என்பதுதான் என குறிப்பிட்டார்.

இதேவேளை தசுன் சானக குறிப்பிடுகையில்,

ஒரு வருடத்துக்கு பின்னர் அணியில் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. பயிற்றுவிப்பாளர்கள் எனக்கு அதிக பயிற்சிகளை வழங்கினர். இந்த ஒருவருட காலப்பகுதியில் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன் உடற்தகுதியை அதிகரிக்கும் பயிற்சிகளையும் மேற்கொண்டேன்.

தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டுள்ளேன். இதனை அணிக்காக தொடர்ந்தும் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன். நான் ஒருவரையும் துடுப்பாட்டத்தில் முந்திச் செல்வதற்கு எதிர்பார்க்கவில்லை. நான் செய்யவேண்டியது திசரவுடன் இணைந்து சிறந்த பங்களிப்பை வழங்குவது. இலங்கையை பொருத்தவரையில் இறுதி ஓவர்களில் சிறப்பாக துடுப்பெடுத்தாடக் கூடியவர் திசரதான். இதனால் அவருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறேன். அவரை தொடர்ந்து வந்ததன் மூலமே என்னால் இந்த ஓட்ட எண்ணி்க்கையை பெறமுடிந்தது. இதனால் அணியை ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதற்கு என்னால் முடிந்த பங்களிப்பை வழங்கவேண்டும்என தெரிவித்தார்.