தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 3 ஓட்டங்களால் த்ரில் வெற்றிபெற்ற இலங்கை அணி, தங்களது தொடர்ச்சியான 11 போட்டிகள் தோல்விக்கு இன்று (08) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டக்வர்த் லூவிஸ் முறைப்படி 21 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்டிருந்த, 191 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்று, இந்த போட்டியில் மூன்று ஓட்டங்களால் தோல்வி கண்டது. அத்துடன், இலங்கை அணி ஒருநாள் தொடரின் வைட் வொஷ்ஷிலிருந்து தங்களை (1-3) காப்பாற்றிக் கொண்டுள்ளது.
அறிமுக வீரரின் சதத்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கண்டி..
பகலிரவு போட்டியாக ஆரம்பித்த இந்த போட்டி, ஆரம்பத்திலிருந்து சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டது. எனினும் மாலை 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அணிக்கு 45 ஓவர்களாகவும் போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி, முதல் ஒவருக்கு விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டது. எனினும் சற்றுநேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் மேலும் இரண்டு ஓவர்கள் குறைக்கப்பட்டு, 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
எனினும் 8.2 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 46 ஓட்டங்களை பெற்றிருந்த போது மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. மழை காரணமாக போட்டி தாமதிக்கப்பட்டதால், மீண்டும் ஓவர்கள் குறைக்கப்பட்டு, அணிக்கு 39 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஓட்டங்களை வேகமாக குவிக்க முடிவெடுத்த துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஓட்டவேகத்தை அணிக்கு பெற்றுக்கொடுத்தனர். இந்த தொடரை பொருத்தவரையில் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த டிக்வெல்ல மற்றும் தரங்க ஜோடி முதல் விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது. டிக்வெல்ல 35 பந்துகளுக்கு 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, உபுல் தரங்க 36 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெற்று தொடர்ச்சியாக வெளியேறினர்.
தொடர்ந்து ஜோடி சேர்ந்த அணித் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஜோடி வேகமான அரைச்சத இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தது. இருவரும் 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுக்க, லுங்கி என்கிடியின் பந்துவீச்சில் அற்புதமான பிடியெடுப்பொன்றை நிகழ்த்திய குயின்டன் டி கொக், மெத்திவ்ஸை (22 ஓட்டங்கள்) ஆட்டமிழக்கச் செய்தார். இவரை தொடர்ந்து கடந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா களமிறங்கிய போதும், 10 ஓட்டங்களுடன் ஏமாற்றினார். எனினும் ஒருநாள் அரங்கில் 2000 ஓட்டங்களை கடந்த குசல் பெரேரா அரைச்சதம் கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
எவ்வாறாயினும் முக்கியமான தருணத்தில் குசல் பெரேரா 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் ஓட்டவேகம் தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களால் மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர், களமிறங்கி ஆரம்பித்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திசர பெரேரா மற்றும் தசுன் ஷானக ஜோடி, இலங்கை அணிக்கு புதிய நம்பிக்கை அளித்தது. கடந்த பல போட்டிகளில் இறுதி ஓவர்களில் வேகமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறியிருந்த இலங்கை அணிக்கு இந்த ஜோடி விருந்து படைத்தது.
தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம்…
ஒரு பக்கம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய தசுன் ஷானக தனது கன்னி அரைச்சதத்தை கடக்க, திசர பெரேராவும் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார். ஏழாவது விக்கெட்டுக்காக இணைந்த இந்த ஜோடி 109 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. 34 பந்துகளை எதிர்கொண்ட ஷானக 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களை விளாசியதுடன், இறுதிவரை களத்தில் நின்ற திசர பெரேரா 45 பந்துகளுக்கு முகங்கொடுத்து 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில் 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த இலங்கை அணி 306 ஓட்டங்களை குவித்தது. இதேவேளை தென்னாபிரிக்க அணிக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி 308 என்ற இமாலய வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தென்னாபிரிக்க அணி சார்பில் லுங்கி என்கிடி மற்றும் ஜே.பி.டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி மிகப்பெரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி அதிரடியாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தது. லக்மாலின் முதல் பந்து ஓவரில் இருந்து அதிரடியை தொடர்ந்த தென்னாபிரிக்க அணி 2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணித்தியாலம் வரை போட்டி தாமதமாகியது. பின்னர் ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு 21 ஓவர்களில் 191 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஏற்கனவே 2 ஓவர்களில் 21 ஓட்டங்களை பெற்றிருந்ததால், 19 ஓவர்களுக்கு 171 என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. ஆரம்பத்தைப் போன்றே வேகமாக துடுப்பெடுத்தாடுவதற்கு தென்னாபிரிக்க எத்தனித்த போது, அணித் தலைவர் குயின்டன் டி கொக், 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மறுபக்கம் அம்லா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவர, கடந்த போட்டியில் சதம் விளாசியிருந்த ரீஸா ஹென்ரிக்ஸ் வந்த வேகத்தில் இரண்டு ஓட்டங்களுடன் தசுன் சானகவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹஷிம் அம்லா மற்றும் கடந்த போட்டியில் அதிரடியை வெளிப்படுத்திய ஜே.பி.டுமினி சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவிக்க தொடங்கினர். இருவரும் வேகமாக ஓட்டங்களை சேர்க்க, தென்னாபிரிக்க அணி வெற்றியிலக்கை நோக்கி சிறப்பாக நகர்ந்தது. அதிரடியாக ஆடிய அம்லா 23 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வருகை தந்த ஹென்ரிக் கிளசான், ஜே.பி.டுமினியுடன் இணைந்து ஆரம்பத்தில் பௌண்டரிகளை விளாச, இலங்கை அணியின் வெற்றி கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. எனினும் தனஞ்சய டி சில்வாவின் பந்து வீச்சில் கிளாசன் (17 ஓட்டங்கள்) மெத்திவ்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜே.பி.டுமினி (38 ஓட்டங்கள்) தசுன் ஷானகவினால் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இதனால் தென்னாபிரிக்க அணி சற்று சறுக்கத் தொடங்கியது. பின்னர் களமிறங்கிய பெஹலுக்வாயோ மற்றும் முல்டர் ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தத்தை பிரயோகித்தனர். எனினும் களத்தில் இருந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லர் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தார்.
பின்வரிசை துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க எத்தனிக்கும் தனன்ஜய டி சில்வா
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு…
மில்லருடன் துடுப்பெடுத்தாடிய கேஷவ் மஹாராஜ் தென்னாபிரிக்க அணிக்கு நம்பிக்கை அளித்தார். 3 பௌண்டரிகள் அடங்கலாக 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த இவர், திசர பெரேரா வீசிய 20ஆவது ஓவரின் இறுதிப்பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென்னாபிரிக்க அணிக்கு ஒரு ஓவருக்கு 2 விக்கெட்டுகள் கைவசமிருக்க 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டேவிட் மில்லர் களத்தில் துடுப்பாட இலங்கை அணிசார்பாக பந்து வீசுவதற்கு சுராங்க லக்மால் அழைக்கப்பட்டார். மில்லர் களத்தில் இருந்ததால் வெற்றி வாய்ப்பு தென்னாபிரிக்க அணிக்கு அதிகமாகவே இருந்தது. எனினும் லக்மாலின் முதல் பந்துக்கு மில்லர் ஓட்டமெதனையும் பெறவில்லை. ஆறு அல்லது நான்கு ஓட்டங்களை பார்த்து காத்திருந்தார். இந்த தருணத்தில் சுரங்க லக்மால் வீசிய இரண்டாவது பந்தில் மில்லர் (21 ஓட்டங்கள்) போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற வெற்றி இலங்கை அணியின் பக்கம் திரும்பியது.
பின்னர், 5 பந்துகளுக்கு 8 ஓட்டங்கள் என்ற நிலையில், நான்கு ஓட்டங்களை மாத்திரமே தென்னாபிரிக்க அணியால் பெறமுடிந்தது. இதனால் போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இலங்கை அணி ஏற்கனவே தொடரை இழந்திருந்தாலும், தென்னாபிரிக்க அணியிடம் பெற்றிருந்த தொடர்ச்சியான 11 போட்டிகள் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுமாத்திரமின்றி தொடரையும் வைட்வொஷ் நிலையிலிருந்து 1-3 என மாற்றியுள்ளது. இலங்கை அணிசார்பில் லக்மால் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், திசர பெரேரா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இரண்டு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<



















