சீ ஹோக்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி: டிபெண்டர்ஸ் – புளூ ஈகல்ஸ் மோதல் சமநிலை

Super League 2021

137

சுபர் லீக் கால்பந்து தொடரில் சனிக்கிழமை (24) டிபெண்டர்ஸ் மற்றும் புளூ ஈகல்ஸ் அணிகள் இடையில் இடம்பெற்ற முதல் போட்டி கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் முடிவுற்றது. அடுத்த மோதலில் சீ ஹோக்ஸ் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. 

டிபெண்டர்ஸ் கா.க எதிர் புளூ ஈகல்ஸ் கா.க

டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் தாம் விளையாடிய முதல் போட்டியை ரினௌன் அணிக்கு எதிராக கோல்கள் எதுவும் இன்றி சமன் செய்திருந்தது. புளூ ஈகல்ஸ் அணி சீ ஹோக்ஸ் அணிக்கு எதிராக 1-0 என தோல்வி கண்டிருந்தது. 

வெற்றியுடன் சுபர் லீக்கை ஆரம்பித்த கொழும்பு, ரெட் ஸ்டார்ஸ்

இந்நிலையில் இன்று இடம்பெற்ற இந்த மோதலில் இரண்டு அணிகளும் மிகவும் மந்தமான ஒரு ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதன் காரணமாக முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவுபெற்றது. 

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது பாதி ஆட்டமும் முதல் பாதி போன்றே இருந்தது. இரண்டு அணி வீரர்களுக்கும் சில வாய்ப்புக்கள் கோலுக்காக கிடைத்த போதும் அவை சிறப்பாக நிறைவடையாத நிலையில் போட்டி சமநிலையடைந்தது. 

ஆட்டத்தில், டிபெண்டர்ஸ் வீரர்கள் மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகளை புளூ ஈகல்ஸ் கோல்காப்பாளர் ருவன் அறுனசிறி சிறப்பாக தடுத்தமை அவ்வணிக்கு போட்டியை சமநிலையில் முடிக்க சிறந்த பலனாக இருந்தது. 

முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா.க 0 – 0 புளூ ஈகல்ஸ் கா.க

ரினௌன் வி.க எதிர் சீ ஹோக்ஸ் கா.க 

போட்டியின் முதல் 15 நிமிடங்களிலும் இரண்டு அணிகளும் சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு விளையாடின. அதன் பின்னர் சீ ஹோக்ஸ் வீரர்கள் போட்டியின் கட்டுப்பாட்டை தமக்குள் வைத்திருந்தனர். 

இதன் பலனாக, 28ஆவது நிமிடத்தில் கனெஷிரோ மத்திய களத்தில் இருந்து நிதானமாக வழங்கிய பந்தைப் பெற்ற மொஹமட் ஹஸ்மீர் சீ ஹோக்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். இது அவர்  இந்த தொடரில் அடித்த இரண்டாவது கோலாக பதிவானது. 

ரினௌன் – டிபெண்டர்ஸ் மோதல் சமநிலையில் நிறைவு

அதன் பின்னர் முதல் பாதி சமநிலையில் நிறைவடைய, இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதலும் சீ ஹோக்ஸ் வீரர்கள் சிறந்த பந்துப் பரிமாற்றங்களுடன் விளையாடினர். அதேபோன்று, ரினௌன் அணியின் கோலுக்கான முயற்சிகளை சீ ஹோக்ஸ் பின்கள வீரர்கள் சிறந்த முறையில் தடுத்தனர். 

சீ ஹோக்ஸ் அணிக்கு மாற்று வீரராக வந்த மொஹமட் சஹீல் 81ஆவது நிமிடத்தில் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து வேகமாக உதைந்த பந்து, ரினௌன் கோல் காப்பாளர் ராசிக் ரிஷாடின் காலில் கட்டு கோலுக்குள் சென்றது. 

அதன் பின்னர் எஞ்சிய நிமிடங்களில் ரினௌன் வீரர்கள் கோலுக்கான முயற்சிகளில் வேகமாக ஈடுபட்டாலும், அவை வெற்றியளிக்கவில்லை. 

எனவே, போட்டி நிறைவில் 2-0 என வெற்றி பெற்ற சீ ஹோக்ஸ் வீரர்கள் தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர். முதல் போட்டியை சமநிலையில் நிறைவு செய்த ரினௌன் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 

முழு நேரம்: ரினௌன் வி.க 0 – 2 சீ ஹோக்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள் 

  • சீ ஹோக்ஸ் கா.க – மொஹமட் ஹஸ்மீர் 28’, மொஹமட் சஹீல் 81’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<