சிதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகிளோரின் அபார சதங்கள் மூலம் இலங்கையுடனான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இமாலய ஓட்டங்களை நோக்கி முன்னேறி வருகிறது.

இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் இன்னும் 7 விக்கெட்டுகள் கைசவம் இருக்க 344 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்டின் முதல்நாள் முடிவின்போதும் இந்திய அணி கிட்டத்தட்ட இதே நிலையில் வலுவாக இருந்தது.

ஹத்துருசிங்க இலங்கை அணிக்கல்ல, 2019 வரை பங்களாதேஷ் அணிக்கு

கொழும்பு, SSC மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் தீர்க்கமாக இருந்த நாணய சுழற்சியில் இந்திய அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதிகம் உலர்ந்த நிலையில் காணப்படும் SSC ஆடுகளத்தில் மூன்றாவது தினமாகும்போதே பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

காலி டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் இருந்து இரண்டாவது டெஸ்டில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. நிமோனியா காய்ச்சல் காரணமாக முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காத அணித் தலைவர் டினேஷ் சந்திமால் அணிக்கு திரும்பினார். இதனால் தனுஷ்க குணதிலக்கவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. குணதிலக்க முதல் டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 18 ஓட்டங்களையே பெற்றார்.  

பெருவிரல் முறிவால் பல வாரங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டி ஏற்பட்ட அசேல குணரத்னவுக்கு பதில் தனன்ஜய டி சில்வா அணிக்கு அழைக்கப்பட்டார். மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்குப் பதில் தனது 30 வயதில் இருக்கும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மலின்த புஷ்பகுமார தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.

அனுபவம் கொண்ட முதல்தர கிரிக்கெட் வீரரான புஷ்பகுமார இதுவரை 558 முதல்தர விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றபோதும் சரியாக தனது 100 ஆவது போட்டிலேயே, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இலங்கை அணி ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடனேயே இந்த டெஸ்டில் களமிறங்கியது.    

மறுபுறம் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சுகவீனம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல்போன இந்திய அணியின் நிரந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்பியதால் அபினேவ் முகுன்துக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனது. பதிலாக முதல் டெஸ்டில் அதிரடி சதம் பெற்ற ஷிகர் தவான் ஆரம்ப வீரராக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.   

இந்நிலையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் வழமை போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ராகுல் நிதானத்துடன் ஆடி ஓட்டங்களை குவித்தார்.  

Photos: Sri Lanka vs India 2017 – 2nd Test Day 1

Photos of the 01st Day of the 2nd Test between Sri Lanka and India played at Sinhalese Sports Club…

குறிப்பாக பந்துவீச வந்த ஹேரத்தின் முதல் ஓவரில் முன்னால் வந்து சிக்கஸர் ஒன்றை விளாசிய தவான், அடுத்து 5 பௌண்டரிகளை தொடர்ச்சியான இடைவெளியில் பெற்றார். எனினும் டில்ருவன் பெரேராவின் பந்தில் அவர் lbw முறையில் ஆட்டமிழக்கவேண்டி ஏற்பட்டது. தவான் 37 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுமுனையில் ஆடிய ராகுல் தொடர்ந்து போட்டிகளில் சோபித்து வருவதை மீண்டும் ஒரு தடவை வெளிக்காட்டினார். இலங்கை பந்துவீச்சாளர்கள் முன் நிதானமாக ஆடிய அவர் மீண்டும் ஒருமுறை அரைச்சதம் கடந்தார்.

இது அவர் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக பெறும் ஆறாவது அரைச்சதமாகும். இது இந்திய அணிக்காக தொடர்ச்சியாக அதிக அரைச்சதங்கள் பெற்ற குண்டப்பா விஷ்வனாத் மற்றும் ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்வதாக இருந்தது.

தவான் மற்றும் ராகும் ஆரம்ப விக்கெட்டுக்கு 61 பந்துகளில் 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றமை குறிப்பிடத்தக்கது. 87 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 57 ஓட்டங்களை பெற்ற ராகுல் எதிர்முனை வீரருடன் ஏற்பட்ட சமிக்ஞை குழப்பத்தால் தேவையற்ற முறையில் ரன் அவுட் ஆனார்.

முதல்நாள் ஆட்டத்தில் சோபிக்காத ஒரே வீரராக இந்திய அணித்தலைவர் விராட் கோலி காணப்படுகிறார். 13 ஓட்டங்களை பெற்ற அவர் ஹேரத்தின் பந்துக்கு அஞ்செலோ மெதிவ்ஸிடம் ஸ்லிப் திசையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழக்கும்போது இந்திய அணி 133 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இது இலங்கை அணிக்கு சற்று சாதகமாக இருந்தபோதும் அடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இலங்கை அணியின் கொஞ்சனஞ்ச எதிர்பார்ப்பையும் சிதரடித்தார்கள்.

குறிப்பாக புஜாராவுக்கு இன்றை தினம் சிறப்பானதாகும். விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அரசு வழங்கும் உயர் விருதான அர்ஜுனா விருதுக்கும் புஜாரா இன்றைய தினத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று அவர் இன்று தனது 50 ஆவது டெஸ்ட் போட்டியிலேயே களமிறங்கினார்.   

எனினும் புஜாரா போட்டியின் ஆரம்பத்தில் ஓட்டங்கள் குவிக்க தடுமாறினார். அவர் முகம் கொடுத்த முதல் 30 பந்துகளிலும் எந்த ஓட்டமும் பெறவில்லை. ஹேரத் வீசிய பந்தில் மட்டையின் விளிம்பில் பட்டு தவறிச் சென்ற பந்திலேயே அவர் ஓட்டக் கணக்கை ஆரம்பித்தார்.

அது தொடக்கம் பலவீனமான பந்துகளை தேர்வுசெய்து ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்த புஜாரா அரைச் சதத்தை இலகுவாக கடந்தார். இதற்கு ஏற்ப மூன்று விசேட சுழற்பந்து வீச்சாளர், ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கிய இலங்கை அணி அதிக அளவில் மோசமான பந்துகளை வீசி இந்தியாவுக்கு பௌண்டரிகளை விட்டுக்கொடுத்தது.

மறுபுறம் ரஹானேவும் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தார். இருவரும் தேநீர் இடைவேளைக்கு பின்னர் ஆட்டநேரம் முடியும்வரை நின்றுபிடித்து ஆடினார்கள்.  

புதிய வீரருடன் இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியுள்ள இலங்கை அணி

இதில் புஜாரா 13 ஆவது டெஸ்ட் சதத்தை பெற்றார். இது அவர் இந்த தொடரில் பெறும் இரண்டாவது சதம் என்பதோடு SSC மைதானத்தில் தொடர்ச்சியாக பெறும் இரண்டாவது சதமாகும். இங்கு அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு ஆடியபோது ஆட்டமிழக்காது 145 ஓட்டங்களை பெற்றார்.

மறுபுறம் சிறப்பாக ஆடிய ரஹானே தனது 9 ஆவது டெஸ்ட் சதத்தை பெற்றார். இதன்மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.  

ஆட்டநேர முடிவின்போது 90 ஓவர்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களை பெற்றுள்ளது. குறிப்பாக புஜாரா மற்றும் ரஹானே ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 211 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டது.

புஜாரா 225 பந்துகளில் 10 பௌண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிக்காது 128 ஓட்டங்களுடன் களத்தில் இருப்பதோடு ரஹானே 168 பந்துகளில் 12 பௌண்டரிகள் விரட்டி 103 ஓட்டங்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர காத்திருக்கிறார்.

பந்துவீச்சில் இலங்கை அணி வீரர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க மீண்டுமொருமுறை தடுமாற்றம் கண்டார்கள். நடுவிரவில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதில் சந்தேகம் நிலவிய ரங்கன ஹேரத், அதிகபட்சமாக 24 ஓவர்கள் பந்துவீசி 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டில்ருவன் பெரேரா இன்றைய தினத்தில் வீழ்த்தப்பட்ட மற்றொரு விக்கெட்டை பதம்பார்த்தார்.

Photo Album – Sri Lanka vs India 2017 – 2nd Test Day 1

கன்னி டெஸ்டில் களமிறங்கிய புஷ்பகுமாரவினால் முதல்நாளில் சோபிக்க முடியவில்லை. 19.2 ஓவர்கள் வீசிய அவர் 82 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். விசேட வேகப்பந்து வீச்சளர்கள் இல்லாத குறையை நீக்க திமுத் கருணாரத்ன மிதவேகப்பந்து வீசியபோதும் அது 3 ஓவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் அரங்கு சென்றார். அவரால் தொடர்ந்து பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டால் அது இலங்கை அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும். பிரதீப் 17.4 ஓவர்கள் வீசி விக்கெட் இன்றி 63 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

SCORECARD