கட்டாய வெற்றிக்காக நம்பர் 1 இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

ICC Men’s T20 World Cup 2021

355

ஐசிசி T20 உலகக் கிண்ணத்தின் மிக முக்கியமான சுபர் 12 சுற்றுப் போட்டியில், இலங்கை அணி திங்கட்கிழமை (01) இங்கிலாந்து அணியை சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற நிலையில், இந்த போட்டியில் களமிறங்கவுள்ளதுடன் இலங்கை அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியுடன் களமிறங்குகின்றது.

>>T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவிற்கு முதல் தோல்வி

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒட்டுமொத்தமாக 12 T20I போட்டிகளில் மோதியுள்ளதுடன், இதில் 8 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளதுடன், 4 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

ஒட்டுமொத்த போட்டிகளின் அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலை வகிப்பதுடன், T20 உலகக் கிண்ணத்தை பொருத்தவரையும், இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. 2010, 2012, 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இவ்விரண்டு அணிகளும் உலகக் கிண்ணத்தில் மோதியிருந்ததுடன், 2012ம் ஆண்டு மாத்திரமே, இங்கிலாந்தை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

அதேநேரம், கடைசியாக நடைபெற்ற 6 T20I போட்டிகளில், இங்கிலாந்து அணி அனைத்து வெற்றிகளையும் பெற்றுள்ளதுடன், இலங்கை அணிக்கு எந்த வெற்றிகளும் கிடைக்கவில்லை.

இலங்கை அணி

T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் வெற்றிகளை குவித்துவந்த இலங்கை அணி, சுபர் 12 சுற்றின் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகின்றது.

சுபர் 12 சுற்றில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை மிகச்சிறப்பான முறையில் வீழ்த்தியிருந்த போதும், அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதில், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கடுமையான போட்டியை கொடுத்துள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்க காத்திருக்கிறது.

குறிப்பாக சார்ஜா மைதானத்தில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் போட்டியில் விளையாடவுள்ளது. எனவே, குறித்த சாதகத்தை பயன்படுத்தி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இலங்கை அணி தயாராகி வருகின்றது.

இலங்கை அணியை பொருத்தவரை, துடுப்பாட்ட வரிசையில் தொடர்ந்தும் கேள்விகள் எழுந்து வருகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் தனியொரு வீரரின் பிரகாசிப்பு வெளிப்படுகின்ற போதும், துடுப்பாட்ட வரிசை முழுமையாக ஒரே போட்டியில் பிரகாசிப்புகளை வெளிப்படுத்த தவறிவருகின்றது.

அணித்தலைவர் தசுன் ஷானக, வனிந்து ஹஸரங்க, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும்  குசல் பெரேரா போன்ற வீரர்கள் சரியான ஓட்டக்குவிப்புக்கு வரவில்லை. பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் இலங்கை அணி முன்னேற்றங்களை அடைந்திருப்பதை காணமுடிகின்றது. எனவே, முதல் போட்டிகளில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு களமிறங்க இலங்கை அணி எதிர்பார்த்துள்ளது.

எதிர்பார்ப்பு வீரர்

இந்த T20 உலகக் கிண்ணத்தை பொருத்தவரை இலங்கை அணிக்கு பந்துவீச்சில் மிகச்சிறந்த பங்காற்றி வருபவர் வனிந்து ஹஸரங்க. முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்து வருகின்றார்.

இதுவரையில் விளையாடிய போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், இந்த T20 உலகக் கிண்ணத்தில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பந்துவீச்சில் சிறப்பாக பிரகாசித்துவந்தாலும், துடுப்பாட்டத்தில் இவரின் பிரகாசிப்பு குறிப்பிடத்தக்க அளவு இல்லை. எனவே, இங்கிலாந்து அணியுடனான போட்டியில், இவர் சகலதுறையிலும் பிரகாசித்தால் இலங்கை அணிக்கு அது மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார

இங்கிலாந்து அணி

T20I போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கடந்தகால பிரகாசிப்புகள் மிகவும் துள்ளியமாக அமைந்திருக்கின்றன. இங்கிலாந்து அணி விளையாடிய இறுதி 10 இருதரப்பு தொடர்களில், இந்திய அணிக்கு எதிரான ஒரு தொடரில் மாத்திரமே தோல்வியை சந்தித்திருக்கிறது.

இம்முறை T20 உலகக்கிண்ண தொடரில் மிகவும் பலம் மிக்க அணியாக உள்ள இங்கிலாந்து அணி எந்தவொரு போட்டிகளிலும் தோல்வியடையவில்லை. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், அந்த அணியை 55 ஓட்டங்களுக்கு சுருட்டியிருந்ததுடன் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை மிகவும் இலகுவாக வெற்றிக்கொண்டிருந்தது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் மிக அற்புதமாக அமைந்துள்ள நிலையில், தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்திருக்கும் இலங்கை அணிக்கு கடும் சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு வீரர்

இங்கிலாந்து அணியை பொருத்தவரை, போட்டியின் திசையை வேகமாக மாற்றக்கூடியவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர். ஜேசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவர்களாக இருந்தாலும், சுழல் பந்துவீச்சுக்கு சிறப்பாக ஆடக்கூடியவர் ஜோஸ் பட்லர்.

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 113 என்ற சராசரியில் 113 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிலும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக துடுப்பெடுத்தாடிய விதம், அவர் எவ்வளவு ஆபத்தான வீரர் என்பதை காட்டியிருக்கிறது. எனவே, இங்கிலாந்து அணியின் சிறந்த ஆரம்பத்துக்கு ஜோஸ் பட்லர் முக்கிய காரணமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து குழாம்

இயன் மோர்கன் (தலைவர்), ஜொனி பெயார்ஸ்டோவ், செம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், ஆதில் ரஷீட், ஜேசன் ரோய், டேவிட் வில்லி, கிரிஸ் வோக்ஸ், மார்க் வூட், கிரிஸ் ஜோர்டன், டொம் கரன், மொயீன் அலி

இறுதியாக…

இங்கிலாந்து அணி இந்த T20 உலகக் கிண்ணத்தில் பலமான அணியாக இருக்கின்ற போதும், சார்ஜா ஆடுகளத்தை பொருத்தவரை இலங்கை அணிக்கு அதிகமான சாதகம் உள்ளது. காரணம், ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்த மைதானத்தில் விளையாடியுள்ளது.

அதேநேரம், உலகத் தொடர்களை பொருத்தவரை இலங்கை அணியானது இங்கிலாந்துக்கு அதிர்ச்சித்தோல்விகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. எனவே, சுழல் பந்துவீச்சுக்கான இந்த ஆடுகளத்தில் இரண்டு அணிகளுக்கும் சம வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த அணி நாளைய தினத்தில் சிறப்பாக பிரகாசிக்கின்றதோ அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<