அன்டி பல்பைர்னியின் சதத்துடன் தொடரை சமன் செய்த அயர்லாந்து

169

சுற்றுலா அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (5) இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் 1-1 என தொடரை சமப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நஜிபுல்லாஹ் ஜத்ரான் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட கன்னிச் சதத்தின் உதவியோடு 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களை தமது இன்னிங்சுக்காக பெற்றுக் கொண்டது.

74 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு, அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான் மற்றும் நஜிபுல்லாஹ் ஜத்ரான் ஆகியோரின் 117 ஓட்ட இணைப்பாட்டம் வலுவான ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகாது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நஜிபுல்லாஹ் ஜத்ரான் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் அஸ்கர் ஆப்கான் 75 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் போய்ட் ரன்கின் மற்றும் டிம் முர்டாக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

வெற்றி பெறுவதற்கு 257 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அயர்லாந்து அணியின் ஆரம்பம் மோசமாக இருந்த போதும் 5 ஆவது விக்கெட்டுக்காக அன்டி பல்பைர்னி மற்றும் ஜோர்ஜ் டொக்ரெல் ஆகியோர் இணைந்து 143 ஓட்டங்களை பகிர்ந்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கான் அணிக்கு இலகு வெற்றி

டொக்ரெல் 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன் பல்பைர்னி கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது சிறந்த ஓட்ட பிரதியை பதிவு செய்து 145 ஓட்டங்கள் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். இது இவர் பெற்றுக் கொண்ட மூன்றாவது ஒருநாள் சர்வதேச சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டி மழை காரணமாக முடிவுகள் இன்றியும் முடிவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 256/8 (50) – நஜிபுல்லாஹ் ஜத்ரான் 104*, அஸ்கர் ஆப்கான் 75, போய்ட் ரன்கின் 56/2, டிம் முர்டாக் 60/2

அயர்லாந்து – 260/6 (49) – அன்டி பல்பைர்னி 145*, ஜோர்ஜ் டொக்ரெல் 54, டவ்லத் ஜத்ரான் 52/2

முடிவு – அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

ஆட்ட நாயகன் – அன்டி பல்பைர்னி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<